கல்லறைப் பாடம் - 30
தாராள குணத்தில் உத்தரிக்கும் ஆன்மாக்களை யாராலும் வெல்ல முடியாது
பாஸ்டனில் உள்ள ஒரு தொழிலதிபர் இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களுக்காக மன்றாடுவோரின் சங்கத்தில் சேர்ந்தார். அவர் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிக்கவும், திருப்பலி ஒப்புக்கொடுக்கவும் ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையை வழங்கினார்.
அவர் அவ்வளவு பெரிய ஒரு பணக்காரர் அல்ல என்பதை அனைவரும் அறிவர். ஒருநாள் சங்கத்தின் இயக்குநரான அருள்பணியாளர் அந்த தொழிலதிபரிடம். மிகப் பெரிய தொகையைத் தருகிறீர்களே, இது உங்களுடைய தனிப்பட்ட காணிக்கையா அல்லது பலரிடம் தானமாகப் பெறப்பட்ட தொகையா என மென்மையாய் வினவினார்.
அதற்கு அந்த தொழிலதிபர், “அன்புள்ள குருவே, நான் வழங்குவது எனது சொந்த பணமே. ஆச்சரியப்பட வேண்டாம், ஆமாம், நான் பெரிய பணக்காரன் அல்ல, ஆனால் நான் என்னால் செய்ய முடிந்ததைவிட அதிகமாக கொடுக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அது அவ்வாறு இல்லை. ஏனென்றால் எனது சேவைகள் மூலம் நான் பணத்தை இழக்காத வகையில், நான் கொடுப்பதை விட மிகுந்த அளவு என்னுடைய தொழிலில் நான் வருமானம் பெறுவதை உத்தரிக்கும் ஆன்மாக்கள் பார்த்துக் கொள்கிறார்கள். தாராள குணத்தில் அவர்களை யாராலும் வெல்ல முடியாது” என்று பதிலளித்தார்.