Showing posts with label கொரோனா. Show all posts
Showing posts with label கொரோனா. Show all posts

Tuesday, 2 June 2020

கொரோனாவும் திரு அவையும்


கொரோனா எனும் கொலைக்களத்தில் 
கத்தோலிக்க திரு அவையின் தியாகப்பணி


கொரோனா நடத்தும் கொலை வெறித் தாக்குதலில் 
கொலை நடுங்கிப்போயிருக்கிறது நம் உலகம்.

தன் பிள்ளை தண்ணீருக்குள் விழும் போது 
தானே முன் சென்று குதித்துக் காப்பாற்றும் 
தாயுள்ளம் கொண்டது நம் திரு அவை.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் 
வாஞ்சையோடு நாம் பெறும் செய்தி இது தான்:
வாழ்வைக் காக்கும் பணியில் அன்றும் இன்றும்
வாடா மலராய் வல்லமையோடு செயல்படுகிறது நம் திரு அவை.

தன் பிள்ளைகள் தவித்து நிற்கும் போது
தாயவள் தனித்து நிற்பதில்லை
தன் பிள்ளைகள் துடித்து நிற்கும் போது 
தாயவள் தள்ளி நிற்பதில்லை.

ஆம், 83 வயதில் ஒற்றை நுரையீரல் மட்டுமே இருந்தாலும்
ஓரமாய் ஒதுங்கி நிற்காமல்
ஒற்றை ஆளாய் சாலையில் இறங்கி திருப்பயணம் போவதைப் பாருங்கள்.
வெள்ளமென மக்கள் கூடும் புனித பேதுரு சதுக்கம்
வெறிச்சோடி கிடப்பதைக் கண்டு
வெளிரிப்போன முகத்தோடு திருத்தந்தை தவிப்பதைப் பாருங்கள்.
தன் மந்தை மடிந்து போவதை 
தந்தை இவர் தான்பார்த்து துடிப்பதைப் பாருங்கள்.



ஆண்டவரே ஆதரவு என்று 
ஆடுகளுக்காக செபிக்கும் ஆயனைப் பாருங்கள்.



மாதாவின் மடியில் மனுக்குலத்தை தாரை வார்த்து
மடிப்பிச்சை கேட்டு மன்றாடும் மக்களின் திருத்தந்தையைப் பாருங்கள்.



கொரோனா பரவுகிறது என்று பதுங்கியவர்கள் இல்லை 
நம் கத்தோலிக்க குருக்கள்.
கடைசிவரை மக்களோடு மக்களாக 
மனதார வாழ்ந்தவர்கள்
நம் கத்தோலிக்க குருக்கள்.

மக்களோடு இருந்ததால்,
மக்களோடு இறந்தார்கள் 
மக்களுக்காக இறந்தார்கள்.

ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் 
ஆகச் சிறந்த ஆயர்கள் இவர்களல்லவா?




மருத்துவமனைகளில் நோயுற்றோருக்கு நற்கருணை கொடுக்கும்
மகத்தான பணியை மனதார செய்த குருக்கள்
கொரோனா பாதிப்பால் மாண்டுபோனதைப் பாருங்கள்.
வாழ்ந்தாலும் இறந்தாலும் தன் மந்தையோடுதான் என்று 
வாழ்ந்து காட்டிய விசுவாசத்தின் விண்மீன்கள் இவர்கள்.

பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு
பாதுகாப்பும் பராமரிப்பும் தரும் பணியில் 
தன் பாதுகாப்பையும் மறந்து பயணிக்கிறார்கள்
நம்முடைய திரு அவையின் பணியாளர்கள்.

ஆலயக் கதவுகளை அடைத்துக்கொண்டு
ஆடுகளாம் தம் மக்களை காவு கொடுப்பவர்களில்லை 
நம் குருக்கள்.

பாதுகாப்பை பணயம் வைத்து பிறரன்பு பணி செய்ய 
பொதுவெளியில் பயணம் புறப்பட்ட 
நம் குருக்களைப் பாருங்கள்.

தியாகத் திருப்பலியை தினமும் திருப்பீடத்தில் நிறைவேற்றியவர்கள் 
தியாகப் பலியாய் தங்களையே தெருக்களில் ஒப்புக்கொடுப்பதைப் பாருங்கள்.

விளம்பரத்திற்காக பணி செய்யும் வினோதமான மனிதர்களுக்கு மத்தியில்
சப்தமின்றி பணி செய்யும் இவர்களின் சத்தியத்தைப் பாருங்கள்.

நலம் தரும் நற்கருணை ஆண்டவரை கையில் ஏந்தி
நகரின் வீதிகளில் நடந்துபோகும் குருவைப் பாருங்கள்.

மாடியிலும், பொதுவீதியிலும், யாருமில்லா கோவிலிலும்
மன வலியோடு திருப்பலி வைக்கும் திருப்பணியாளரைப் பாருங்கள்.

கொரோனா பாதிப்பு கொடூரமாய் பரவத் தொடங்கிய பிறகு 
கதவுகளுக்குப் பின்னால் பலர் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.
ஆனால் அதுவரை கதவுகளுக்கு பின்னால் 
அடைபட்ட அர்ப்பண வாழ்வு வாழ்ந்த அருட்கன்னியர்கள்
அச்சமின்றி அடுத்தவர் பணிசெய்ய அன்பாய் புறப்பட்டதைப் பாருங்கள்.

இதுவரை கதவுகளுக்கு வெளியே வாழ்ந்தவர்கள் 
இன்று கதவுகளுக்கு உள்ளே பதுங்கி இருக்கிறார்கள்.
இதுவரை கதவுகளுக்கு உள்ளே இருந்தவர்கள்
இன்று கதவுகளுக்கு வெளியே பணி செய்கிறார்கள்.

பசித்திருப்போருக்கு உணவு ஊட்டும் அன்னையரின் பாசத்தைப் பாருங்கள்
மதங்கள் கடந்து மருத்துவ உதவிகள் புரியும் இவர்களின் மனதைப் பாருங்கள்

கைகளிலே செபமாலையை உருட்டிக்கொண்டு
கண்களிலே கண்ணீர் மாலையை உதிர்த்துக்கொண்டு
கதறி செபிக்கும் கன்னியரைப் பாருங்கள்.

கதிர்பாத்திரத்தை கரங்களில் தாங்கி
கட்டிடத்தின் உச்சியில் நின்று 
கடவுளின் ஆசியை வேண்டும் கன்னியரைப் பாருங்கள்.




மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கு
மருத்துவமனைகளில் மரணத்தோடு போராடும்
அருட்கன்னியரையும் அருள்பணியாளர்களையும் பாருங்கள்.

கத்தோலிக்க மருத்துவமனைகளில் 
கருணை உள்ளத்தோடு பணி செய்யும்
கடவுளின் பணியாளர்களைப் பாருங்கள்.

நோயுற்று இருந்தேன், என்னை நீங்கள் கவனித்துக் கொண்டீர்கள்என்று
நொடியும் தாமதிக்காமல் இவர்களிடம் இயேசு உறுதியாகச் சொல்வார்.

இவர்களின் பணி 
இயேசு விட்டுச் சென்ற இறைப் பணி.
புது உலகம் படைக்கும் புரட்சிப் பணி.
தன்னலமற்ற தியாகப் பணி.

இவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இவர்களின் பணி பயனளிக்க இறைவனிடம் மன்றாடுவோம்.

வாழ்க இயேசுவின் திருப்பெயர்.
வளரட்டும் திரு அவை.
மலரட்டும் திருப்பணிகள்.