Showing posts with label கிறிஸ்து பிறப்பு. Show all posts
Showing posts with label கிறிஸ்து பிறப்பு. Show all posts

Saturday, 25 December 2021

கிறிஸ்துமஸ் - இயேசுவாகப் பிறந்திடுவோம்!

 இயேசுவாகப் பிறந்திடுவோம்!


கிறிஸ்து பிறப்பு ஓர் இறை - மனித சந்திப்பின் திருவிழா. கடவுள் மனிதனைச் சந்திக்க மனிதனாகவே வந்த ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு இது. பழைய ஏற்பாட்டில் கடவுள் பல்வேறு வகையான அடையாளங்கள் வழியாகத் தன்னை வெளிப்படுத்தினார். ஆனால் புதிய ஏற்பாட்டில் கடவுள் மனிதனைச் சந்திப்பதற்காக மனிதனாகவே உடலெடுத்து மண்ணகம் வந்தார். கடவுள் மனிதராகப் பிறந்த பெருவிழாவைவே கிறிஸ்து பிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறோம். 

படைத்தவர் தன் படைப்பாகிய மனிதரைத் தேடி மண்ணுக்கு வருகிறார். அவ்வாறு வருகிற கடவுள் கடவுளாகவே வரவில்லை. படைப்பாகிய மனிதரைத் தேடி மனிதராகவே வருகிறார். வலுக்குறைந்த மனித உடலை எடுக்கிறார். கன்னி மரியாவிடம் கருவாகி உருவெடுக்கிறார். மண்ணைப் பிசைந்து தான் படைத்த மனிதருக்காக கடவுள் வானகம் இறங்கி மண்ணகம் வந்தார். கடவுள் நிலையைத் துறந்து மனித நிலையை விரும்பி எடுத்தார். கடவுள் மனிதராவது என்பது மாபெரும் மீட்பின் மறைபொருள். மனித மூளைக்கு எட்டாத இறை இரகசியம். 

வரையறை இல்லாத கடவுள் வரையறைக்குள் தன்னைக் கொண்டு வந்தார். காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்ட கடவுள் காலத்துக்கும் இடத்துக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டார். உடலும் உருவமும் இல்லாத கடவுள் மனித உடலுக்குள்ளும் உருவத்துக்குள்ளும் தன்னை சுருக்கிக் கொண்டார். எல்லாம் வல்லவர் எதுவும் இல்லாத நிலையில் நின்றார். வல்லமையும் வலிமையும் கொண்ட கடவுள் வலுவின்மையை போர்த்திக்கொண்டார். இதுதான் கடவுள் மனிதரானதன் மகத்துவம். இதைக் குறித்தே புனித பவுல் பின்வருமாறு எழுதினார்: ‘கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.’ (பிலி 2:6-8). 

இச்சிறப்புக்குரிய இறை மனித சந்திப்பு கிறிஸ்துவின் பிறப்பிலே சாத்தியப்பட்டது. இயேசுவின் மானிட உடலேற்றல் என்பது அவர் நம்மில் ஒருவராக, நம்மைப் போல் ஒருவராக மாறியதன் அடையாளமே. ஆக, கடவுள் மனிதரானது ஏன் என்னும் கேள்விக்கு ஏராளமான பதில்கள் முன்மொழியப்பட்டாலும், நம்முடைய கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி பின்வருமாறு எடுத்துரைக்கிறது. ‘நமக்காகவும் நம் மீட்புக்காகவும், தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் உதரத்தில் இறைமகன் மானிட உடல் எடுத்தார். பாவிகளாகிய நம்மை கடவுளோடு ஒப்புரவாக்கவும், கடவுளின் எல்லையற்ற அன்பை நாம் அறிந்துகொள்ளவும், நமக்குப் புனிதத்தின் முன்மாதிரியாகத் திகழவும், நாம் அனைவரும் அவரது “இறைத்தன்மையில் பங்கேற்கவும்” (2 பேது 1:4) அவர் இவ்வாறு செய்தார்’. (காண்: கத்தோலிக்க திருஅவை மறைக்கல்வி சுருக்கம் எண்: 85)

தொடக்கநூலில் வாசிக்கிறபடி முதல் பெற்றோரான ஆதாம், ஏவாள் அவர்களது கீழ்ப்படியாமையால் மானுடம் இழந்துபோனதை (இறைச்சாயல்) நாம் மீண்டும் பெற்றுக்கொள்ளவே இயேசுவின் வருகை அமைந்திருப்பதாக நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். (காண்: லூக் 19:10இ யோவா 10:10) ‘மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரனார்’ என்று புனித அத்தனாசியுஸ் குறிப்பிடுவதையும் இங்கு நினைவுகூருவது பொருத்தமானது. மனிதம் இறைமையை அணிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, இயேசுவின் பிறப்பில் இறைமை மனிதத்தை அணிந்து கொண்டது. ‘தியோசிஸ்’ (Theosis) என்று கீழைத் திருஅவையின் இறையியல் இதற்கு மிகவே அழுத்தம் தருகிறது. நமது இலத்தீன் திருவழிபாட்டு ரீதியிலும் திருப்பலியில் காணிக்கைச் சடங்கின்போது அருள்பணியாளர் திராட்சை இரசத்தில் ஒரு துளி நீரைச் சேர்க்கும் போது இவ்வாறு கூறுவார்: ‘கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு பெறத் திருவுளமானார். நாமும் இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக அவரது இறை இயல்பில் பங்கு பெறுவோமாக’. 

ஆக மேற்கூறியவை அனைத்தும் இயேசுவின் மானிட உடலேற்றலின் நோக்கத்தை நமக்கு மிகவே தெளிவுபடுத்துகின்றன. இச்சூழலில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் நமக்கு, இன்றைய ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா முன்வைக்கும் சவால் நாம் இயேசுவாக பிறக்க வேண்டும் என்பதே. எவ்வளவு காலத்திற்கு இயேசு நமக்காகப் பிறந்தார் என்று மட்டுமே சொல்லி நம் மனதைத் தேற்றிக்கொள்ளப் போகிறோம். நமக்காகப் நம்மைப் போல பிறந்த இயேசு இன்று நம்மையும் பிறருக்கு இயேசுவாகப் பிறக்க அழைக்கிறார் என்னும் உண்மை இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு நமக்கு உணர்த்தட்டும். 

எத்தனை நாளைக்குத்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இயேசு மீண்டும் மீண்டும் நமக்காக பிறப்பது. இனியாகினும் இயேசு பிறப்பின் உண்மையான அர்த்தமும் நோக்கமும் புரியட்டும். அவ்வகையில் இயேசு பிறப்பின் நோக்கமாகிய நாமும் இயேசுவாக பிறப்பது என்பது இனி நமக்கு சாத்தியமாகட்டும். நாம் எல்லோரும் இயேசுவாகப் பிறப்பதே இன்றைய தேவை என்பதை உணர்ந்தவர்களாக, இயேசுவின் மானிட உடலேற்றல் முன்வைத்தவற்றை வாழப் பழகுவோம். இயேசு நமக்காகப் பிறந்தார் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு நாமும் நம்மோடு வாழ்பவர்களுக்கு இயேசுவாகப் பிறக்க வேண்டும் என்பதும் உண்மையே. 

இந்த ஆண்டு இயேசுவும் பிறக்கட்டும்! 

இயேசுவோடு சேர்த்து நாமும் இயேசுவாக பிறக்கும் நிலைவரட்டும்!