Showing posts with label திரு அவை. Show all posts
Showing posts with label திரு அவை. Show all posts

Tuesday, 25 August 2020

திருத்தூதர்களின் பெயர்களும் அர்த்தங்களும்

 திருத்தூதர்களின் பெயர்களும் அர்த்தங்களும்



பேதுரு                      –  பாறை

அந்திரேயா            –          துணிச்சல்மிக்கவர், ஆண்மையுள்ளவர்

யாக்கோபு              –         குதிங்காலைப் பிடிப்பவன்

யோவான்               –          கடவுளின் கொடை, கடவுளின் அருள்

பிலிப்பு                    –           குதிரைகளின் நண்பர்

பர்த்தலமேயு                  தாலமியின் மகன்

தோமா                              இரட்டை

மத்தேயு                            கடவுளின் பரிசு

யாக்கோபு                       குதிங்காலைப் பிடிப்பவன்

யூதா ததேயு                    பாராட்டப்பட்டவர் 

சீமோன்                  –           கேட்கிறவர்

மத்தியா                           கடவுளின் பரிசு


Monday, 17 August 2020

உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையின் கர்தினால்கள்

 யார் இந்த கர்தினால்கள்?

கர்தினால்கள் என்பவர்கள் உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆட்சி பீடத்தினுடைய உயர்ந்த அதிகார அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். கர்தினால்களை நியமிக்கும் அதிகாரம் திருத்தந்தைக்கு மட்டுமே உண்டு. கர்தினால் பொறுப்பில் உள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் ‘கர்தினால் குழாம்’ (College of Cardinals) என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் ‘திரு அவையின் இளவரசர்கள்’ என்று அழைப்பதும் உண்டு.

பெயர் விளக்கம்

‘கர்தினால்’ என்னும் சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘அச்சாணி’ என்னும் அர்த்தம் உடையது. திரு அவையில் அச்சாணி போன்று மைய இடம் வகிப்பவர்கள் என்னும் பொருளில் ‘கர்தினால்’ என்னும் பட்டம் சிலருக்கு வழங்கப்படுகிறது. மத்திய காலங்களில் உரோமை மாநில எல்கைக்குள் திரு அவையின் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சிப் பொறுப்பில் பணிபுரியும் திருப்பணியாளர்களுக்கு மட்டுமே இத்தலைப்பு வழங்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் ஒட்டுமொத்த உலகளாவிய திரு அவை முழுவதற்கும் இது பரவியது.

கர்தினால்களின் அடையாளம்

கர்தினால்கள் தங்கள் தலையில் சிவப்பு நிற சிறு தொப்பியும், இடையில் சிவப்பு நிற கச்சையும் அணியும் தகுதி பெறுகின்றனர். இந்த சிவப்பு வண்ணம் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு துணிந்தவர்கள் என்பதைக் குறிக்கும். புதிய கர்தினால்களை நியமிக்கும் சடங்கின்போது, திருத்தந்தையினால் ஒரு முத்திரை மோதிரம் வழங்கப்படும். இதன் வெளிப்புறத்தில் திருத்தந்தையினால் தெரிவு செய்யப்படும் புனிதர்களின் படமும், உட்புறத்தில் திருத்தந்தையரின் ஆட்சி முத்திரையும் பொறிக்கப்பட்டிருக்கும்.

கர்தினாலின் பதவிக் கேடயம் 



கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். இத்தோடு அவர்களின் விருதுவாக்கும்  இணைக்கப்படுவது வழக்கம். 

கர்தினால்கள் நியமனம்

குறைந்த அளவு, குருத்துவ நிலையில் உள்ள மற்றும் கோட்பாடு, ஒழுக்கநெறி, பக்தி மற்றும் செயல் விவேகம் ஆகியவற்றில் உண்மையில் சிறந்து விளங்கும் ஆண்களை திருத்தந்தை தனது சொந்த விருப்பத்தால் கர்தினால்களாக உயர்த்தலாம். இவ்வாறு உயர்த்தபடும் நபர், ஏற்கனவே ஆயராக இல்லாதவர்கள் ஆயர் திருநிலைப்பாட்டைப் பெறவேண்டும்.  

கர்தினால்கள் திருத்தந்தையின் ஆணையால் உருவாக்கப்படுகின்றனர். இவ்வாணை கர்தினால்கள் குழாம் முன்னிலையில் திருத்தந்தையின் ஆலோசனைக்குழு கூடும் போது வெளியிடப்படும்; இவ்வெளியீடு செய்யப்பட்ட கணத்திலிருந்து சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கடமைகளையும் உரிமைகளையும் அவர்கள் பெறுகின்றனர். (திரு அவைச் சட்டம் எண்: 351)



மூவகை கர்தினால் அணிகள்

திருத்தந்தை இரண்டாம் உர்பன் காலத்தில் (1088 - 1099) ஏற்படுத்தப்பட்ட திரு அவைச் சீர்திருத்தத்தின் போது கர்தினால்கள் குழாமில் மூன்று அணிகள் அமைக்கப்பட்டன. அவை முறையே ஆயர்கள் அணி, குருக்கள் அணி மற்றும் திருத்தொண்டர்கள் அணி.

ஆயர்கள் அணி: ஆயர்கள் அணியானது திருத்தந்தையால் ஒரு புறநகர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள கர்தினால்களையும், கர்தினால்களாக்கப்பட்ட கீழைத் திருஅவைகளின் மறைமுதுவர்களையும் கொண்டுள்ளது.

குருக்கள் அணி: இவர்கள் உலகில் உள்ள முக்கிய மறைமாவட்டங்களை நிர்வகிக்கும் ஆயர்களாகவோ, பேராயர்களாகவே இருப்பர். ஆயினும் சிலர் உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராகவும் இருக்கின்றனர்.

திருத்தொண்டர்கள் அணி: இவர்கள் உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருப்பர்.

குருக்கள் அல்லது திருத்தொண்டர்கள் அணியின் ஒவ்வொரு கர்தினாலுக்கும் உரோமைத் தலைமைக்குருவால் ஓர் உரிமைத்தகுதி அல்லது உரோமை நகரின் திருத்தொண்டர்களின் ஒரு வட்டத் தொகுதி வழங்கப்படுகிறது. (திரு அவைச் சட்டம் எண்: 350)


உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி

கி.பி. 1059 இல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உரோமையின் முக்கிய குருக்களிடமும், உரோமையின் ஏழு புறநகர் ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள ஆயர்களிடமும் இருந்தது. இவ்வழக்கத்தாலேயே இன்று வரையும் கர்தினாலாக உயர்த்தப்படுபவருக்கு, உரோமையின் புறநகர் ஆலயத்தின் அல்லது உரோமையிலுள்ள மற்றோர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்படும். 

புறநகர் ஆலயத்தின் அல்லது உரோமையிலுள்ள மற்றோர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள கர்தினால்கள், அவற்றின் பொறுப்பேற்றபின், அந்த மறைமாவட்டங்கள் அல்லது ஆலயங்களின் நலனைத் தங்கள் ஆலோசனையாலும் ஆதரவாலும் மேம்படுத்த வேண்டும்; ஆயினும், அவற்றின் மீது அவர்களுக்கு எவ்வித ஆட்சி உரிமையும் இல்லை. அவற்றின் சொத்துக்கள் நிர்வாகம், ஒழுங்குமுறை அல்லது ஆலயங்கள் பணி ஆகியவற்றில் எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தலையிடவும் முடியாது. (திரு அவைச் சட்டம் எண்: 357)

கர்தினால் குழாமின் உறுப்பினர்களாக்கப்பட்ட கீழைத் திருஅவையின் மறைமுதுவர்கள் தங்களுடைய மறைமுதுவர் ஆட்சிப்பீடத்தை உரிமைத் தகுதியாய்க் கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்படுவதில்லை.

கர்தினால்களின் வசிப்பிடம்

கர்தினால்கள் உரோமைத் தலைமைக்குருவோடு ஆர்வமுடன் ஒத்துழைக்கக் கடமைப்பட்டுள்ளனர். எனவே, செயலகத்தில் ஏதாவது ஒரு பதவியைக் கொண்டிருக்கும் மறைமாவட்ட ஆயராக இல்லாத கர்தினால்கள் உரோமையில் வாழக் கடமைப்பட்டுள்ளனர். ஒரு மறைமாவட்டத்தில் ஆயராகப் பொறுப்பு வகிக்கும் கர்தினால்கள் உரோமைத் தலைமைக்குருவால் அழைக்கப்படும்போதெல்லாம் உரோமைக்குச் செல்ல வேண்டும். (திரு அவைச் சட்டம் எண்: 356)

கர்தினாலின் அதிகாரங்களும் பணிகளும்

புதிய திருத்தந்தையை தேர்வு செய்வது - திருப்பீடத் தேர்தல்

திருத்தந்தையின் இறப்பாலோ அல்லது பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகும் வேளையில் சட்ட விதிமுறைக்கேற்ப புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும். இக்காலத்தில், திருச்சபையின் அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும். 

திரு ஆட்சிப்பீடம் காலியானால், கர்தினால் குழாம் சிறப்புச் சட்டத்தில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுமே கொண்டிருள்ளது. (திரு அவைச் சட்டம் எண்: 359) 

இன்றைய திருச்சபைச் சட்டப்படி, திருத்தந்தைப் பணியிடம் வெறுமையாகின்ற வேளையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கூடும் திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்க வேண்டுமானால், கர்தினால் 80 வயதினைத் தாண்டாதவராக இருக்கவேண்டும்.

தனிப்பட்ட கர்தினால்களுக்கு, முந்தைய திருத்தந்தையால் கொடுக்கப்பட்டிருந்த உரோமைச் செயலகப் பொறுப்புகளையும், திருத்தந்தையின் தூதர்களாக அவர்கள் வகித்தப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் தானாகவே இழப்பர். இப்பொறுப்புகள் புதிதாய் தேர்வு செய்யப்படும் திருத்தந்தையால் மீண்டும் உறுதி செய்யப்படும் வரை அவர்களால் அவற்றை நிறைவேற்ற முடியாது.


திருத்தந்தையின் தூதர்களாக

ஒரு சில மிகச்சிறப்பு நிகழ்வுகளில் அல்லது ஒரு சில கூட்டங்களில் தம் பிரதிநிதியாகச் செயல்படத் தமது சிறப்புத் தூதராக அதாவது தமது ‘மறு பிம்பமாக’ இருக்கும் பணியானது திருத்தந்தையால் ஒரு கர்தினாலிடம் ஒப்படைக்கப்படலாம். அவ்வாறே மேய்ப்புப்பணி சார்ந்த குறிப்பிட்ட ஓர் அலுவலைத் தமது சிறப்புத் தூதுவராக நிறைவேற்ற அவர் ஒரு கர்தினாலைப் பணிக்கலாம்;. அத்தகைய கர்தினால்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் காரியங்களில் மட்டுமே சட்ட உரிமை பெற்றுள்ளனர். (திரு அவைச் சட்டம். எண்: 358)

அன்றாடப் பணிகள்

கர்தினால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதும், திருத்தந்தை வேண்டும்போது அவருக்கு தனியாகவோ, குழுவாகக் கூடியோ ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணிகளுள் அடங்கும். 

மேலும், கர்தினால்கள் அதிமுக்கிய ஆய்வுக்குரிய பொருள்களைப் பற்றி விவாதித்திட அழைக்கப்படும்போது உரோமைத் தலைமைக்குருவுக்குக் குழுவாக உதவி புரிகின்றனர். அல்லது சிறப்பாக அனைத்துலகத் திரு அவையின் அன்றாட அக்கறையில் பல்வேறு பதவிகள் மூலம் அவர்கள் தங்கள் உதவியை நல்குவதால் தனியாக உதவி புரிகின்றனர். (திரு அவைச் சட்டம் எண்: 349)

மறைமாவட்டங்களை நிர்வகித்தல், உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருத்தல் போன்ற பணிகளையும் கர்தினால்கள் செய்கின்றனர்.

பணித்துறப்பு

பேராயங்களுக்கும், உரோமைச் செயலகம் மற்றும் வத்திக்கான் நகரின் நிரந்தர நிறுவனங்களுக்கும் தலைமை ஏற்கும், 75 வயது நிறைவடைந்த கர்தினால்கள் தங்கள் பணித்துறப்பை திருத்தந்தையிடம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து அதற்கேற்ப ஏற்பாடு செய்வார். (திரு அவைச் சட்டம் எண்: 354)


Tuesday, 2 June 2020

கொரோனாவும் திரு அவையும்


கொரோனா எனும் கொலைக்களத்தில் 
கத்தோலிக்க திரு அவையின் தியாகப்பணி


கொரோனா நடத்தும் கொலை வெறித் தாக்குதலில் 
கொலை நடுங்கிப்போயிருக்கிறது நம் உலகம்.

தன் பிள்ளை தண்ணீருக்குள் விழும் போது 
தானே முன் சென்று குதித்துக் காப்பாற்றும் 
தாயுள்ளம் கொண்டது நம் திரு அவை.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் 
வாஞ்சையோடு நாம் பெறும் செய்தி இது தான்:
வாழ்வைக் காக்கும் பணியில் அன்றும் இன்றும்
வாடா மலராய் வல்லமையோடு செயல்படுகிறது நம் திரு அவை.

தன் பிள்ளைகள் தவித்து நிற்கும் போது
தாயவள் தனித்து நிற்பதில்லை
தன் பிள்ளைகள் துடித்து நிற்கும் போது 
தாயவள் தள்ளி நிற்பதில்லை.

ஆம், 83 வயதில் ஒற்றை நுரையீரல் மட்டுமே இருந்தாலும்
ஓரமாய் ஒதுங்கி நிற்காமல்
ஒற்றை ஆளாய் சாலையில் இறங்கி திருப்பயணம் போவதைப் பாருங்கள்.
வெள்ளமென மக்கள் கூடும் புனித பேதுரு சதுக்கம்
வெறிச்சோடி கிடப்பதைக் கண்டு
வெளிரிப்போன முகத்தோடு திருத்தந்தை தவிப்பதைப் பாருங்கள்.
தன் மந்தை மடிந்து போவதை 
தந்தை இவர் தான்பார்த்து துடிப்பதைப் பாருங்கள்.



ஆண்டவரே ஆதரவு என்று 
ஆடுகளுக்காக செபிக்கும் ஆயனைப் பாருங்கள்.



மாதாவின் மடியில் மனுக்குலத்தை தாரை வார்த்து
மடிப்பிச்சை கேட்டு மன்றாடும் மக்களின் திருத்தந்தையைப் பாருங்கள்.



கொரோனா பரவுகிறது என்று பதுங்கியவர்கள் இல்லை 
நம் கத்தோலிக்க குருக்கள்.
கடைசிவரை மக்களோடு மக்களாக 
மனதார வாழ்ந்தவர்கள்
நம் கத்தோலிக்க குருக்கள்.

மக்களோடு இருந்ததால்,
மக்களோடு இறந்தார்கள் 
மக்களுக்காக இறந்தார்கள்.

ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் 
ஆகச் சிறந்த ஆயர்கள் இவர்களல்லவா?




மருத்துவமனைகளில் நோயுற்றோருக்கு நற்கருணை கொடுக்கும்
மகத்தான பணியை மனதார செய்த குருக்கள்
கொரோனா பாதிப்பால் மாண்டுபோனதைப் பாருங்கள்.
வாழ்ந்தாலும் இறந்தாலும் தன் மந்தையோடுதான் என்று 
வாழ்ந்து காட்டிய விசுவாசத்தின் விண்மீன்கள் இவர்கள்.

பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு
பாதுகாப்பும் பராமரிப்பும் தரும் பணியில் 
தன் பாதுகாப்பையும் மறந்து பயணிக்கிறார்கள்
நம்முடைய திரு அவையின் பணியாளர்கள்.

ஆலயக் கதவுகளை அடைத்துக்கொண்டு
ஆடுகளாம் தம் மக்களை காவு கொடுப்பவர்களில்லை 
நம் குருக்கள்.

பாதுகாப்பை பணயம் வைத்து பிறரன்பு பணி செய்ய 
பொதுவெளியில் பயணம் புறப்பட்ட 
நம் குருக்களைப் பாருங்கள்.

தியாகத் திருப்பலியை தினமும் திருப்பீடத்தில் நிறைவேற்றியவர்கள் 
தியாகப் பலியாய் தங்களையே தெருக்களில் ஒப்புக்கொடுப்பதைப் பாருங்கள்.

விளம்பரத்திற்காக பணி செய்யும் வினோதமான மனிதர்களுக்கு மத்தியில்
சப்தமின்றி பணி செய்யும் இவர்களின் சத்தியத்தைப் பாருங்கள்.

நலம் தரும் நற்கருணை ஆண்டவரை கையில் ஏந்தி
நகரின் வீதிகளில் நடந்துபோகும் குருவைப் பாருங்கள்.

மாடியிலும், பொதுவீதியிலும், யாருமில்லா கோவிலிலும்
மன வலியோடு திருப்பலி வைக்கும் திருப்பணியாளரைப் பாருங்கள்.

கொரோனா பாதிப்பு கொடூரமாய் பரவத் தொடங்கிய பிறகு 
கதவுகளுக்குப் பின்னால் பலர் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.
ஆனால் அதுவரை கதவுகளுக்கு பின்னால் 
அடைபட்ட அர்ப்பண வாழ்வு வாழ்ந்த அருட்கன்னியர்கள்
அச்சமின்றி அடுத்தவர் பணிசெய்ய அன்பாய் புறப்பட்டதைப் பாருங்கள்.

இதுவரை கதவுகளுக்கு வெளியே வாழ்ந்தவர்கள் 
இன்று கதவுகளுக்கு உள்ளே பதுங்கி இருக்கிறார்கள்.
இதுவரை கதவுகளுக்கு உள்ளே இருந்தவர்கள்
இன்று கதவுகளுக்கு வெளியே பணி செய்கிறார்கள்.

பசித்திருப்போருக்கு உணவு ஊட்டும் அன்னையரின் பாசத்தைப் பாருங்கள்
மதங்கள் கடந்து மருத்துவ உதவிகள் புரியும் இவர்களின் மனதைப் பாருங்கள்

கைகளிலே செபமாலையை உருட்டிக்கொண்டு
கண்களிலே கண்ணீர் மாலையை உதிர்த்துக்கொண்டு
கதறி செபிக்கும் கன்னியரைப் பாருங்கள்.

கதிர்பாத்திரத்தை கரங்களில் தாங்கி
கட்டிடத்தின் உச்சியில் நின்று 
கடவுளின் ஆசியை வேண்டும் கன்னியரைப் பாருங்கள்.




மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கு
மருத்துவமனைகளில் மரணத்தோடு போராடும்
அருட்கன்னியரையும் அருள்பணியாளர்களையும் பாருங்கள்.

கத்தோலிக்க மருத்துவமனைகளில் 
கருணை உள்ளத்தோடு பணி செய்யும்
கடவுளின் பணியாளர்களைப் பாருங்கள்.

நோயுற்று இருந்தேன், என்னை நீங்கள் கவனித்துக் கொண்டீர்கள்என்று
நொடியும் தாமதிக்காமல் இவர்களிடம் இயேசு உறுதியாகச் சொல்வார்.

இவர்களின் பணி 
இயேசு விட்டுச் சென்ற இறைப் பணி.
புது உலகம் படைக்கும் புரட்சிப் பணி.
தன்னலமற்ற தியாகப் பணி.

இவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இவர்களின் பணி பயனளிக்க இறைவனிடம் மன்றாடுவோம்.

வாழ்க இயேசுவின் திருப்பெயர்.
வளரட்டும் திரு அவை.
மலரட்டும் திருப்பணிகள்.