கல்லறைப் பாடம் - 14
அப்பெனைன் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு
ஒரு முக்கியமான சிக்கல் குறித்து விவாதிப்பதற்காக சில அருள்பணியாளர்கள் கொண்ட குழு ஒன்று உரோமைக்கு அழைக்கப்பட்டது. அவர்களிடம் முக்கியமான ஆவணங்களும், திருத்தந்தையிடம் கொடுப்பதற்கான ஒரு பெரிய தொகையும் இருந்தன. அவர்கள் உரேமைக்குச் செல்லும் வழியில் கொடிய கொள்ளையர்கள் வசித்த அப்பெனைன் என்ற ஊரின் வழியாகவே பயணிக்க வேண்டியிருந்தது. தங்களுக்கு நம்பகமான ஓர் ஓட்டுநரைத் தேர்ந்தெடுத்து, ஒரு குதிரை வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
அருள்பணியாளர்கள் அனைவரும் தங்களை உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாப்பில் ஒப்படைத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான கட்டளை செபம் சொல்லவும் தீர்மானித்து பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மலையின் மையப் பகுதியைக் கடக்கையில், ஓட்டுநர் அபயக்குரல் எழுப்பினார். அதே நேரத்தில் குதிரைகளை ஆவேசமாக அடித்து, வண்டியை கூடுதலான வேகத்தில் செலுத்தத் தொடங்கினார். அருள்பணியாளர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது, பாதையின் இருபுறமும் துப்பாக்கிகளுடன், அப்பெனைன் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதைக் கண்டனர். ஆனால் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட சுடப்படவில்லை.
ஒரு மணி நேரம் மிகவும் வேகமாக வண்டியைச் செலுத்திய ஓட்டுநர், பாதுகாப்பான பகுதியை அடைந்த பின்பு வண்டியை நிறுத்தி, அருள்பணியாளர்களைப் பார்த்து, “நாம் எப்படி தப்பித்தோம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த ஈவு இரக்கமற்ற கொள்ளையர்கள் இதுவரை யாரையும் தப்பவிட்டதே இல்லை”.
அருள்பணியாளர்கள் தாங்கள் தப்பியது முழுக்க முழுக்க உத்தரிக்கும் ஆன்மாக்களால்தான் என்று உறுதியாக நம்பினர். இது பின்னைய நாள்களில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டது. எவ்வாறெனில், உரோமையில் அவர்களது
வேலை முடிந்ததும், அவர்களில் ஓர் அருள்பணியாளர் மட்டும் அங்கே உள்ள ஒரு சிறைச்சாலைக்கு ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, இத்தாலியின் கடுமையான அப்பெனைன் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார். நீண்ட தொடர் கொலைகளுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அந்த சிறையில் மரணதண்டனைக்காக காத்திருந்தார்.
இக்கைதியைப் பற்றி எதுவும் அறியாத அந்த அருள்பணியாளர், கைதியின் மனமாற்றத்திற்காக தினமும் அவரைச் சந்தித்து, தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். அவ்வாறு ஒரு சமயம், அவர் அப்பெனைன் கொள்ளையர்களிடமிருந்து தப்பித்த அனுபவத்தை அந்த கைதிக்கு விவரித்தார். அவர் அதைச் சொல்லி முடித்ததும், அந்த கைதி, ‘குருவே, நான் தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவன். உங்களிடம் பணம் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் உங்கள் பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டு, உங்களைக் கொலை செய்ய முடிவு செய்தோம். ஆனால் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி, அன்று எங்கள் அனைவரையும் துப்பாக்கிச் சூடு நடத்தவிடாமல் தடுத்தது’.
இக்கொள்ளைக் கூட்டத் தலைவனின் வாக்குமூலம் உத்தரிக்கும் ஆன்மாக்களின் உதவியால் அன்று அந்த அருள்பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பதை மிகவே உறுதிப்படுத்தியது. அதற்கு பிறகு, அக்கொள்ளையன் மனம்மாறி, தம் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து இறந்தான்.