கல்லறைப் பாடம் - 29
கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றிய உத்தரிக்கும் ஆன்மாக்கள்
அருள்பணியாளர் லூயிஸ் மனாசி என்பவர் ஒரு தீவிர மறைப்பணியாளர். அவர் உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் ஓர் ஆபத்தான பாதையில் தன் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆகவே, அவர் அப்பயணத்தில் சந்திக்கக்கூடிய ஆபத்துகளிலிருந்து தன்னைப் பாதுகாக்க, உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் நம்பிக்கையுடன் மன்றாடினார்.
அவரது பாதை ஒரு பரந்த பாலைவனத்தின் வழியாக இருந்தது. அது கொள்ளைக்காரர்களால் நிறைந்திருந்ததெனவும் அவருக்குத் தெரியும். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபமாலைச் சொல்லியவாறு, அவர் மிக வேகமாக அப்பாதையைக் கடந்தார். அப்போது அவர் தன்னைச் சுற்றி பரிசுத்த ஆன்மாக்கள் அரண்போல சூழ்ந்து வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
கொள்ளையர்கள் அவரைத் தாக்கமுற்பட்டபோது, பரிசுத்த ஆன்மாக்கள் அக்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி அந்த குருவைக் காப்பாற்றினர். அவர் பாதுகாப்பாக அவ்விடத்தைக் கடக்கும் வரை அவருக்கு பரிசுத்த ஆன்மாக்கள் வழித்துணையாய் வந்தனர்.