Showing posts with label புனித கார்மேல் அன்னை. Show all posts
Showing posts with label புனித கார்மேல் அன்னை. Show all posts

Tuesday, 19 November 2024

கல்லறைப் பாடம் - 19

கல்லறைப் பாடம் - 19

உத்தரியமும் உத்தரிக்கும் நிலையும்


பல பிரபலமான புனிதர்களும், பல்வேறு காட்சிகளில் புனித கன்னி மரியாவும் உத்தரிக்கும் நிலையில் துன்பப்படும் ஆன்மாக்களின் சார்பாக மன்றாடுபவர்களாக திரு அவையால் குறிப்பிடப்படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக கார்மல் அன்னை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பவராக உள்ளார். 

மணிமுடி சூட்டப்பட்ட கார்மல் அன்னை தம் கையில் ஒரு பழுப்பு நிற உத்தரியத்தை வைத்திருப்பார். இது கார்மல் சபைத் துறவியரின் சிறப்பு வாய்ந்த பக்தி ஆடைகளின் ஒரு வடிவம். இந்த உத்தரியம் பரிபூரணபலன்களைப் பெற்றிடவும் அதன் வழியாக மீட்கப்படவும் நமக்கு உதவக் கூடியதாக உள்ளது.

முதல் வாக்குறுதி

“இந்த உத்தரியத்தை அணிந்துகொண்டு பக்தியுடன் இறப்பவர், முடிவில்லா நரக நெருப்பிற்கு ஆளாகமாட்டார்". 

(புனித சைமன் ஸ்டாக் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது) 

இதுவே உத்தரியம் அணிவோருக்கு கார்மெல் அன்னை அளித்த முதலாவதும் நன்கு அறியப்பட்டதுமான வாக்குறுதிகளில் ஒன்றாகும். இறக்கும் நேரத்தில் உத்தரியத்தை அணிந்த எவரும் அன்னையின் தயவைப் பெறுவார்கள் என்று கத்தோலிக்க இறையியலாளர்கள் இந்த வாக்குறுதியை விளக்குகிறார்கள், 

இரண்டாவது வாக்குறுதி

“ஒரு கனிவான தாயாக, நான் அவர்களின் மரணத்திற்குப் பிறகு சனிக்கிழமையன்று உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன், அங்கிருந்து அவர்களை விடுவிப்பேன், புனித மலைக்கு, நிலைவாழ்வின் மகிழ்ச்சியான விண்ணகத்திற்கு கொண்டு வருவேன்."

(திருத்தந்தை 22 ஆம் ஜான் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது) 

இந்த வாக்குறுதியே சனிக்கிழமை சிறப்புரிமை என்று அழைக்கப்படுகிறது.

Thursday, 16 July 2020

புனித கார்மேல் அன்னை


புனித கார்மேல் அன்னை விழா (ஜூலை -16)





ஜூலை 16, 1251 அன்று, புனித கார்மேல் அன்னை புனித சைமன் ஸ்டாக் எனும் கார்மேல் சபைத் துறவிக்கு காட்சியளித்து, அவருக்கு பழுப்பு நிற உத்திரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “மிகவும் அன்பான மகனே! இதைப் பெற்றுக்கொள். இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.” 

பழுப்பு நிற உத்திரியத்தின் ஒரு முனையில் ‘இந்த உத்திரியத்தை அணிந்து இறந்த எவரும் முடிவில்லா நெருப்பை அனுபவிக்க மாட்டார்கள்’ என்ற வார்த்தைகளும், மறுமுனையில் ‘இதோ மீட்பின் அடையாளம்’ என்ற வார்த்தைகளும் அதில் தைக்கப்பட்டுள்ளன. 

ஒரு பொது நிலையினர் பழுப்பு நிற உத்தரியத்தை அணியக்கூடிய நிபந்தனைகள் வேறுபடுகின்றன: ஒரு நபர் ஒரு கார்மேல் துறவற சபையின் மூன்றாம் அங்கத்தினராக வரிசை சேரலாம், அல்லது அவர்கள் முறையான குழுவில் சேராமல் பழுப்பு உத்தரியத்தின் பக்தி கூட்டமைப்பில் சேர்க்கப்படலாம். மேலும், ஒரு அருள்பணியாளரால் ஆசீர்வதிக்கப்பட்டால் எவரும் பழுப்பு நிற உத்தரியத்தை அணியலாம். ஒழுங்கின் முறைப்படி உறுதியளித்தாலும் இல்லாவிட்டாலும், உத்தரியம் அணிபவர்கள் கார்மேல் சபையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள்.

கடவுளின் மக்களில் எந்தவொரு உறுப்பினரும் கவனக்குறைவாக உத்தரியத்தை அணிவதை நினைத்துப் பார்க்க முடியாது. வெறுமனே, உண்மையான பக்தி இல்லாமல் உத்தரியத்தை கண்மூடித்தனமாக அணிவது, ஒருவன் படைவீரனுக்குரிய சீருடையை அணிந்துகொண்டு, அந்த சீருடைக்கு தேவைப்படும் நடத்தை நெறியை புறக்கணிப்பது போன்றது ஆகும். எனவே பழுப்பு நிற உத்தரியத்தை அணிபவர், உத்தரியத்துடன் தொடர்புடைய நேர்மையான கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

உத்திரியம் ஒருபோதும்; ஓர் அதிர்ஷ்டக் கயிறோ அல்லது மந்திரக் கயிறோ அல்ல. மாறாக, நாம் இறைவனுடைய தாயிடம் நெருங்கி வந்தால், அவர் அளிக்கும் சிறப்பு விண்ணக அருளுக்கு நம் இருதயங்களைத் திறந்து, பூமிக்குரிய பாவத்திலிருந்தும் சோதனையிலிருந்தும் அவளுடைய பாதுகாப்பிற்கு நம்மை ஒப்புக் கொடுத்தால் அது நம்முடைய இரட்சிப்பின் அடையாளமாக மாறும். ஆகவே உத்தரியம் மரியாவின் இடைவிடாத, தாய்க்குரிய பராமரிப்பின் வெளிப்புற அடையாளம். இது மரியன்னை பக்தி முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய அருட்கருவி.  

பக்தியுடன் பழுப்பு நிற உத்தரியத்தை அணிந்துகொண்டு, அதை நம் இருதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்வது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றவும், புனிதர்களின் வீர நல்லொழுக்கத்துடன் நாமும் வாழவும் நம்மைத் தூண்டுகிறது. மேலும் இது நற்பண்புகளின் மீதான நமது உறுதிப்பாட்டின் நிலையான நினைவூட்டலாகும் இருக்கிறது. 

பழுப்பு உத்தரியம் அன்னையின் இரக்கத்தின் உன்னத ஆடை. இது நம் விண்ணகத் தாயிடமிருந்து நமக்கு கிடைத்த பரிசு. ஆம், உத்தரியம் மரியாவின் அன்பு பரிசு. நம்மை அன்னையின் உன்னத பாதுகாப்பில் ஒப்படைத்து, நம் மீட்பின் உறுதியை அவள் கைகளில் நாம் தருகிறோம். 

புனித கன்னி மரியாவுக்கான உண்மையான இந்த பக்தி முயற்சியானது அவர் மீது நாம் கொண்டிருக்கும் மூன்று விடயங்களைக் கொண்டுள்ளது: வணக்கம், நம்பிக்கை மற்றும் அன்பு. உத்தரியத்தை அணிவதன் மூலம், நாளின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவளை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம் என்று அவளிடம் சொல்கிறோம்.

கடவுளை தந்தை என்று அழைக்க நம் ஆண்டவர் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தது போல, புனித கன்னி மரியா உத்தரியத்தின் மதிப்பை நமக்குக் கற்றுக் கொடுத்தார். நாம் அதை ஒரு அமைதியான செபமாகப் பயன்படுத்தும்போது, நம் அன்னை தனது தெய்வீக மகனின் புனித இருதயத்திற்கு நம்மை ஈர்க்கிறார். எனவே, உத்தரியத்தை கையில் பிடித்திருப்பது நல்லது. உத்தரியத்தை கையில் வைத்தவாறு செபிக்கப்படும் ஒரு செபம் சிறந்த செபமாகவே அமையும். குறிப்பாக சோதனையின் போது தான் கடவுளின் தாயின் சக்திவாய்ந்த பரிந்துரை நமக்கு அதிகமாகத் தேவை. உத்தரியம் அணிந்தவர், இந்த அமைதியான பக்தியில் தூய கன்னியை அழைத்தவாறு, சோதனையை எதிர்கொள்ளும்போது தீய ஆவி முற்றிலும் சக்தியற்றதாகிவிடுகிறது. 

‘நீ என்னுடைய பரிந்துரையை வேண்டியிருந்தால், நீ ஒருபோதும் அத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்க மாட்டாய்’ என்று அன்னையின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களில் ஒருவரான முத்திபேறுபெற்ற ஆலன் டி லா ரோச்சிற்கு நம் அன்னை கூறினார். 

Wednesday, 15 July 2020

உத்தரியம்

பழுப்பு உத்தரியம் - கேள்விகளும் பதில்களும் 





பழுப்பு உத்தரியம் அணிபவர்களுக்கு மரியன்னை அளித்த வாக்குறுதி என்ன? 

சைமன் ஸ்டாக் என்ற கார்மல் சபைத் துறவிக்கு காட்சியளித்த புனித கார்மேல் அன்னை பழுப்பு நிற உத்தரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.”

பழுப்பு உத்தரியம் பற்றிய புனித மரியன்னையின் வாக்குறுதியைப் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகள் யாவை?

1. உத்தரியத்தின் பொருள், நிறம் மற்றும் வடிவம் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் சரியாகக் கடைபிடிக்கப் படவேண்டும். (செவ்வக வடிவத்தில் 100 விழுக்காடு பழுப்பு கம்பளி இருக்க வேண்டும்)
2. ஓர் அருள்பணியாளர் மூலம் உத்தரியத்தை அணிய வேண்டும்.
3. உத்தரியத்தை தொடர்ந்து அணிந்துகொள்ள வேண்டும்.
அன்னையின் வாக்குறுதியைப் பெற்றிட சிறப்பு செபங்கள் அல்லது நல்ல செயல்கள் எதுவும் இல்லை. உத்தரியம் என்பது ஓர் அமைதியான செபமுறை. இது புனித கன்னி மரியாவுக்கு ஒருவரின் முழுமையான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. உத்தரியம் என்பது ஒரு பக்தி முயற்சி. இதன் மூலம் நாம் அன்னையை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம், மேலும் பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் மூலம் இந்த விடயங்களை ஒவ்வொரு நாளும் அன்னையிடம் அறிவிக்கிறோம்.

பழுப்பு உத்தரியத்தை யாரெல்லாம் அணியலாம்?

கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் அனைவரும் அணிந்துகொள்ளலாம். முதல் நற்கருணைக்குப் பிறகு குழந்தைகள் உத்தரியம் அணிவிக்கப்படுவது நம்மிடையே வழக்கம். கைக்குழந்தைகள் கூட உத்தரியம் அணிவிக்கப்படலாம். 

பழுப்பு உத்தரியத்தை யார் மூலம் அணிந்துகொள்ள வேண்டும்?

எந்தவொரு அருள்பணியாளரும் உங்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கலாம். முந்தைய காலத்தில் கார்மல் சபை அருள்பணியாளர்களுக்கு மட்டுமே நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியம் அணிவித்து தங்கள் கார்மல் சபையின் மூன்றாம் அங்கத்தினராக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இச்சடங்கைச் செய்ய செய்ய வேறு எந்த அருள்பணியாளருக்கும் சிறப்பு அனுமதி தேவைப்பட்டது. இருப்பினும், இந்த பக்தி கத்தோலிக்க திரு அவை முழுவதும் இப்போது பரவலாக பரவியுள்ளது, ஆகவே இப்போது திரு அவை அனைத்து அருள்பணியாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கும் சடங்கை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.

பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்ன?

பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் வழியாக, ஒரு நபர் தானாகவே பழுப்பு உத்தரியத்தின் கூட்டமைப்பில் உறுப்பினராகிறார். பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்பதன் பொருள் என்னவென்றால், உத்தரியம் அணிவதால் நாம் கார்மெல் ஆன்மீக குடும்பத்தோடு இணைக்கப்படுகிறோம். அதாவது கார்மேல் துறவற சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக மாறுகிறோம். ஏனென்றால் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகளின் அங்கி ஆகும். இதனால் கார்மேல் சபைத் துறவிகள் செய்யும் அனைத்து செபதவங்கள், பக்தி முயற்சிகள் ஆகியவற்றில் நமக்கும் பங்கு உண்டு. 

(முன்பு ஒரு காலத்தில் இவ்வாறு உத்தரியம் அணிந்து தன்னை கார்மேல் சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக இணைத்துக்கொள்ளும் ஒருவரின் பெயரை பதிவேட்டில் பொறிப்பது வழக்கம். ஆனால் இப்போது இது இனி நடைமுறையில் இல்லை. இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், பழுப்பு உத்தரியம் ஓர் உலகளாவிய பக்தியாக உருப்பெற்றுள்ளது.) 

பழுப்பு உத்தரியத்தின் நன்மைகளைப் பெறுவதற்கு அதை எவ்வாறு அணிய வேண்டும்?

அதனை தோள்பட்டைக்கு மேல் கழுத்தைச் சுற்றிய வண்ணம், ஒரு பகுதி நம் மார்பின் மீது தொங்கும் வண்ணமும், மறுபுறம் பின்புறத்தில் முதுகின் மீது தொங்கும் வண்ணமும்  அணிய வேண்டும். இரண்டு பகுதிகளையும் முன் அல்லது பின்புறத்தில் சேர்த்து அணிந்துகொள்ளக் கூடாது.

கம்பளி ஒவ்வாமை இருந்தால் உத்தரியத்தை எப்படி அணிவது?
ஒருவருக்கு கம்பளி கடுமையான ஒவ்வாமையாக இருந்தால் அல்லது அதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால், அவர் கம்பளி உத்தரியத்தை தன் ஆடைக்கு மேல் அணியலாம். அல்லது கம்பளி உத்தரியத்தை பிளாஸ்டிக்கில் கவருக்குள் வைத்தும் அணியலாம். இவ்வாறு இருக்கும்போது அதன் ஒரு பக்கம் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் படமும், மறு பக்கம் நம் அன்னையின் படமும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

உத்தரியத்தில் கம்பளிதான் பயன்படுத்த வேண்டுமா?

ஆம். பருத்தி, பட்டு மற்றும் வேறு எந்த பொருளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

உத்தரியத்தில் கயிறுக்கு பதிலாக ஒரு சங்கிலியைப் பயன்படுத்தலாமா?

பயன்டுத்தலாம். ஆனால் உத்தரியம் கம்பளியால் ஆனதாக மட்டுமே இருக்க வேண்டும். 

உத்தரியம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்?

இது செவ்வக அல்லது சதுரமாக இருக்க வேண்டும். இது வட்டமாக, நீள்வட்டமாக அல்லது பலகோணமாக இருக்க கூடாது.

ஒருவர் வேறு நிறத்தில் உத்தரியத்தினை அணியலாமா?

பல்வேறு பக்தி முயற்சிகளுக்காக வேறு சில வண்ணங்களிலும் உத்தரியம் திரு அவையில் பயன்படுததப்படுகிறது. உதாரணமாக, நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைவுகூறும் வகையில் சிவப்பு உத்தரியம் அணியப்படுகிறது. இருப்பினும், அடிப்படையில் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகள் அணியக்கூடிய துறுவற ஆடையின் சிறிய அடையாளமே.  எனவே அவர்களின் துறவு அங்கி பழுப்பு நிறத்தில் இருப்பதால், பழுப்பு நிறமே எப்போதும் உத்தரியத்துக்கு ஏற்ற சரியான நிறமாக கருதப்படுகிறது. இருப்பினும், கருப்பு கம்பளியும் திரு அவையால் அனுமதிக்கப்படுகிறது.


எப்போதும் உத்தரியத்தை அணிய வேண்டுமா அல்லது அதை கழற்றலாமா?

வாக்குறுதியைப் பெறுவதற்கு, உத்தரியத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். உத்தரியம் அணிவதன் மூலம், புனித கன்னிக்கு நம்முடைய அர்ப்பணிப்பபையும் மற்றும் பக்தியையும் காட்டுகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் வசதிகளுக்கு ஏற்ப அதை எடுத்துவிடுவதில் நம் அன்னை மகிழ்ச்சியடையவதில்லை. ஆக, உத்தரியத்தை  அணிவதன் மூலம் நாம் அன்னையின் மீது கொண்டிருக்கும் அன்பையும், நம்பிக்கையும் அறிக்கையிடுகிறோம். 


குளிக்கும் போது உத்தரியத்தை கழற்றலாமா?

ஆம். கழற்றிக் கொள்ளலாம். 


ஒரு புதிய உத்தரியம் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், மீண்டும் அருள்பணியாளரிடமிருந்துதான் அதை அணிந்துகொள்ள வேண்டுமா?

இல்லை. உங்கள் உத்தரியம் தேய்ந்துவிட்டால் அல்லது உடைந்திருந்தால், நீங்கள் இன்னொன்றைப் பெற்று அதை அணிந்துகொள்ள வேண்டும். ஆசீர்வாதம் மற்றும் அணிவித்தல் புதிய உத்தரியத்திற்கு இன்னும் செல்லுபடியாகும், ஏனெனில் ஆசீர்வாதம் முக்கியமாக உத்தரியத்தை அணியும் நபருக்கே வழங்கப்படுகிறது.


சனிக்கிழமை சலுகை (சாபாத்தின் சலுகை) என்றால் என்ன?

திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு நம் அன்னை ஒரு காட்சியின் போது அளித்த வாக்குறுதி இது. உத்தரியத்தை பக்தியுடன் அணிந்தவாறு இறக்கும் ஒருவரை, அவர் இறந்தபின்னர், குறிப்பாக மரணத்திற்குப் பின் வரும் முதல் சனிக்கிழமையன்று நரக நெருப்பிலிருந்து நம் அன்னை விடுவிப்பார். ‘ஓர் அக்கறையுள்ள தாயாக, அவர்கள் இறந்த பிறகு சனிக்கிழமையன்று நான் உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன். அவர்களை விடுவித்து நிலையான வான் வீட்டில் சேர்ப்பேன்." (திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு சொல்லப்பட்ட தூய கன்னி மரியாவின் வார்த்தைகள்). இந்த சனிக்கிழமை சலுகை 1322 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் அறிவிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. மீண்டும் 1908 ஆம் ஆண்டில் திருத்தந்தையால் உறுதியான ஒப்புதல் அளிக்கப்பட்டது.


சனிக்கிழமை சலுகையைப் (சாபாத்தின் சலுகை) பெறுவதற்கான தேவைகள் யாவை?

1. பழுப்பு உத்தரியத்தை தொடர்ந்து அணிய வேண்டும்.
2. வாழ்க்கையில் ஒருவரின் நிலைக்கு ஏற்ப கற்பைக் கடைபிடிக்க வேண்டும்.
3. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இறைச்சியைத் தவிர்ப்பது அல்லது ஓர் அருள்பணியாளரின் அனுமதியுடன் புனித செபமாலையின் 5 மறையுண்மைகளை தினமும் செபிக்க வேண்டும்.