Showing posts with label அருள் நிறைந்த மரியே மன்றாட்டு. Show all posts
Showing posts with label அருள் நிறைந்த மரியே மன்றாட்டு. Show all posts

Friday, 14 August 2020

மூன்று அருள் நிறைந்த மரியே

 மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சி 



வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது ஏறக்குறைய கி.பி. 13 ஆம் நூற்றாண்டளவில் ஜெர்மன் நாட்டில் இப்பக்தி முயற்சி பழக்கத்தில் இருந்தது என்பதை அறிகிறோம். தினமும் இரவில் தூங்கப்போகும் முன்பாக ஆன்ம சோதனை செய்துவிட்டு இந்த மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை செபிப்பது வழக்கத்தில் இருந்தது. 

மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை மரியன்னை தாமே 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பெனடிக்ட் துறவற சபையின் துறவியாகிய புனித மெக்டில்டாவுக்கு காட்சியளித்தபோது வழங்கினார். இது மரியன்னையோடு சேர்ந்து மூவொரு கடவுளுக்கு நன்றி செலுத்தும் பக்தி முயற்சி ஆகும். 

தந்தையாகிய இறைவன் மரியாவுக்கு வழங்கிய மேலான வல்லமைக்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும், இறைமகன் இயேசு மரியாவுக்கு வழங்கிய ஞானத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும், தூய ஆவியாராம் இறைவன் மரியாவுக்கு வழங்கிய அன்பு மற்றும் இரக்கத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும் இப்பக்தி முயற்சியில் செபிக்கப்படும். 


புனித மெக்டில்டாவுக்கு அன்னையின் காட்சி

புனித மெக்டில்டா 1241 இல் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். ஒரு நாள், தன் மரணத்தைப் பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தாள். அப்போது தன் வாழ்க்கையின் கடைசி தருணங்களில் அதாவது இறப்பின் வேளையில் தனக்கு உதவும்படி இறைவனின் தாயிடம் அன்பாய் வேண்டினார்.

அதற்கு இறைவனின் தாய் புனித மரியா இவ்வாறு பதிலளித்தார்: 

‘ஆம். நான் உனக்கு உதவி செய்வேன்;. ஆனால் அதற்காக நீ ஒவ்வொரு நாளும் மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டை என்னிடம் செபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதல் அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், தந்தையாகிய இறைவன் என்னை மாட்சியின் அரியணைக்கு உயர்த்தி, வானத்திலும் பூமியிலும் என்னை மிகவும் சக்திவாய்ந்த படைப்பாக ஆக்கியது போல, நானும் இப்பூமியில் உங்களை வலுப்படுத்தி, எதிரியின் ஒவ்வொரு சக்தியையும் உங்களிடமிருந்து விரட்டி, நான் உங்களுக்கு உதவ செபியுங்கள்.   

இரண்டாவது அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், இறைவனுடைய திருமகனாம் இயேசு எல்லா புனிதர்களையும் விட தூய்மைமிகு மூவொரு கடவுளைப் பற்றி அதிக அறிவைக் கொண்டிருக்கும் அளவிற்கு என்னை ஞானத்தால் நிரப்பியதைப் போல, உங்கள் வாழ்க்கையின் கடைசி தருணங்களில் தவறுகள் மற்றும் அறியாமையின் நிழல்கள் உங்களை இருளாக்கிடாமல் இருக்க, உங்கள் ஆன்மாவை விசுவாசத்தின் ஒளியினாலும் உண்மையான ஞானத்தினாலும் நிரப்பி நான் உங்களுக்கு உதவி செய்திட செபியுங்கள். 

மூன்றாவது அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், கடவுளுக்கு அடுத்து, நான் மிகவும் இனிமையானவராவும், இரக்கமுள்ளவராகவும் இருக்கும்படியாக, தூய ஆவியார் அவருடைய அன்பின் இனிமையால் என்னை நிரப்பி, என்னை மிகவும் அன்பானவராக்கியது போல, நானும் உங்கள் மரண நேரத்தில், உங்கள் மரணத்தின் துக்கமும் கசப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியாக மாறும்படிக்கு, தெய்வீக அன்பின் மேன்மையால் உங்கள் ஆன்மாவை நிரப்பி உங்களுக்கு உதவி செய்திட செபியுங்கள்.”


புனிதர்களும் திருத்தந்தையர்களும்

இப்பக்தி முயற்சி பல்வேறு புனிதர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று என்பதையும் நாம் பார்க்கிறோம். குறிப்பாக புனித தொன் போஸ்கோ, புனித பதுவை அந்தோனியார், புனித மரிய அல்போன்ஸ் லிகோரி போன்றோர் இப்பக்தி முயற்சியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். 

மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை ஒப்புரவு அருளடையாளத்தில் பாவப் பொறுத்தலாக வழங்கியவர் புனித போர்ட் மௌரீஸ் லியோனார்டு. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சிக்கு தனது திருத்தூது ஆசீரை வழங்கியவர் திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர்.


Wednesday, 12 August 2020

அருள் நிறைந்த மரியே மன்றாட்டு

 அருள் நிறைந்த மரியே மன்றாட்டு



திரு அவையின் தொன்மைச் சிறப்புமிக்க பாரம்பரியமான செபங்களுள் அருள் நிறைந்த மரியே வாழ்க எனும் மன்றாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மரியன்னையின் பரிந்துரையை நாடி வேண்டுவதாக அமைந்துள்ளது. 

பயன்பாடு

இச்செபத்தை செபமாலை செபிக்கும் போதும், மூவேளை மன்றாட்டை செபிக்கும் போதும் பயன்படுத்துகிறோம். இது மரியன்னைக்கு வணக்கம் செலுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட செபம் ஆகும். 

விவிலிய அடிப்படையும் விளக்கமும்

மங்கள வார்த்தை மன்றாட்டு முழுக்க முழுக்க விவிலிய அடிப்படை கொண்டதாகும். 

‘அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே’ -  லூக்கா 1:28

மரியா இறைவனின் அருளால் நிறைந்தவள் என்றும், ஆண்டவர் மரியாவோடு உடன் இருக்கிறார் என்றும் வானதூதர் கபிரியேல் கன்னி மரியாவைப் பார்த்து வாழ்த்துகிறார். இவ்வாழ்த்து தந்தையாம் கடவுளால் அவருடைய தூதரான கபிரியேலின் வழியாக மரியாவுக்கு வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்க வந்தபோது கபிரியேல் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவை வாழ்த்தினார். நாமும் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கும்போது, தந்தையாம் இறைவன் கபரியேல் வழியாக சொல்லியனுப்பிய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கிறிஸ்துவைப் பெற்றெடுக்க இசைவு தெரிவித்த அன்னைக்கு வணக்கம் செலுத்துகிறோம்.  

‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே’ – லூக்கா 1:42

இவ்வார்த்தைகள் கருவுற்றிருந்த எலிசபெத் மரியாவிடம் சொல்லியவை. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவுக்கு தனது வாழத்தையும் வணக்கத்தையும் தெரிவித்தாள். இஸ்ரயேல் இனத்துப் பெண்களில் பலர் மெசியாவின் தாயாக மாற ஏக்கம் கொண்டிருந்தாலும், மரியா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட எலிசபெத், கடவுளின் மகனையே கருவில் சுமக்கப்போகும் மரியா பெண்கள் அனைவரிலும் ஆசி பெற்றவள் என்று பாராட்டுகிறாள். மேலும் மரியாவின் வயிற்றில் பிறக்கப்போகும் இயேசுவும் ஆசி பெற்றவர் என்று பாராட்டுகிறாள்.  

‘புனித மரியே, இறைவனின் தாயே’ - லூக்கா 1:43

இந்த வார்த்தைகளும் மரியாவிடம் எலிசபெத் சொன்னவையே. மரியா புனிதமானவள் என்பதையும், அவள் மனிதரின் தாயல்ல. இறைவனின் தாய் என்பதையும் பறைசாற்றுகின்ற வார்த்தைகள் இவை. 

‘பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்’. -  யாக்கோபு 5:16

இச்செபத்தின் இறுதிப் பகுதியிலுள்ள இவ்வார்த்தைகள் நம்முடைய மன்றாட்டாக அமைந்துள்ளன. பரிந்துரை மன்றாட்டு என்பது கத்தோலிக்க திரு அவையில் முக்கியமான ஒன்று. இறைவனின் அன்னையாகிய மரியா அன்று கானாவில் நடைபெற்ற திருமணத்தில் திருமண வீட்டாராருக்காக இயேசுவிடம் பரிந்து பேசியதுபோல, இன்று நமக்காகவும் இறைவனிடம் பரிந்துபேசுவார் என்கிற நம்பிக்கையோடு நாம் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கிறோம். குறிப்பாக நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இப்பொழுது நமக்கான தேவைகளைக் குறித்தும், இறப்பின் வேளையில் நமக்குத் துணையாக இறைத்தாய் இருக்கும்படியாகவும் நாம் இறைஞ்சி செபிக்கிறோம். 



மூன்று பகுதிகள் தொகுக்கப்பட்ட வரலாறு

இச்செபத்தின் முதல் பகுதியில் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவை வாழ்த்துவதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:28). இந்த வார்த்தைகள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழிபாட்டு முறைகளில் காணப்பட்டன. 

இரண்டாவது பகுதியில் புனித திருமுழுக்கு யோவானின் தாயார் எலிசபெத் மரியாவைப் புகழ்வதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:42). இந்த இரண்டு பகுதிகளும் கி.பி. 1000 க்குள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்து வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஏறக்குறைய திருத்தந்தை நான்காம் உர்பன் காலத்தில் (கி.பி. 1261-64) இந்த இணைப்பில் இயேசு என்கிற சொல்லும் சேர்க்கப்பட்டது. 

மூன்றாவது பகுதியில் நாம் செபிக்கும் விண்ணப்பம் என்பது சுமார் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் வழக்கதிற்கு வந்து பல பரிமாணங்களைப் பெற்றிருக்க வேண்டும். 

இறுதியாக கி.பி. 1568 ஆம் ஆண்டில் திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் திருப்புகழ்மாலையை சீர்திருத்திய போது இந்த செபத்தின் இப்போது நாம் பயன்படுத்தும் முழுமை வடிவம் உருவானது. 


Thursday, 21 May 2020

அன்னையை அறிவோம் - 21


அன்னையை அறிவோம் - 21





1. மங்கள வார்த்தை மன்றாட்டு விவிலிய அடிப்படை கொண்டதாஆம்.

2. ‘அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே’ - இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளதுலூக்கா 1:28

3. ‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே’ – இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளதுலூக்கா 1:42

4. ‘புனித மரியே, இறைவனின் தாயே’ - இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளதுலூக்கா 1:43

5. ‘பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்’. - இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளதுயாக்கோபு 5:16

6. மரியாவுக்கும் மூவொரு இறைவனுக்குமான உறவு யாதுதந்தையாகிய இறைவனின் மகள், இறைமகன் இயேசுவின் தாய், தூய ஆவியாரின் மணமகள்.

7. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை மரியன்னை யாருக்கு காட்சியளித்தபோது வழங்கினார்13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித மெக்டில்டாவுக்கு.

8. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சி என்றால் என்ன

இது மரியன்னையோடு சேர்ந்து மூவொரு கடவுளுக்கு நன்றி செலுத்தும் பக்தி முயற்சி

- தந்தையாகிய இறைவன் மரியாவுக்கு வழங்கிய மேலான வல்லமைக்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டு
- இறைமகன் இயேசு மரியாவுக்கு வழங்கிய ஞானத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டு.
- தூய ஆவியாராம் இறைவன் மரியாவுக்கு வழங்கிய அன்பு மற்றும் இரக்கத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டு.

9. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை ஒப்புரவு அருளடையாளத்தில் பாவப் பொறுத்தலாக வழங்கிய புனிதர் யார்புனித போர்ட் மௌரீஸ் லியோனார்டு

10. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சிக்கு தனது திருத்தூது ஆசீரை வழங்கிய திருத்தந்தை யார்திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர்