சிலுவைப் பாடங்கள்
1. கசப்பை விரும்பு
மருந்திற்குக்கூட கசப்பை விரும்பாத சமுதாயம் இது. திருச்சிலுவையை துன்பம், அவமானம், போராட்டம், கண்ணீர், வேதனை என்றெல்லாம் முத்திரைகுத்தி மூலையில் கிடத்தினோம். ஆனால் இறைவனோ திருச்சிலுவையை விடுதலையின் வாசலாகவும், மகிழ்ச்சியின் மந்திரச்சாவியாகவும், மீட்பின் கருவியாகவும் பயன்படுத்தினார். இவ்வுலகம் துன்பத்தை வெறுக்கிறது. ஆனால் கடவுளோ துன்பத்தை இன்பத்திற்கான திறவுகோலாக மாற்றியிருக்கிறார். இறைவனின் பாடத்திட்டத்தில் சிலுவை ஒரு தெரிவுப் பாடமல்ல மாறாக கட்டாயப்பாடம் (Cross is not optional but mandatory and compulsory). வாழ்வில் சிலுவையைப் படிக்க விரும்பாதவன் கிறித்துவின் சீடனாக இருக்க முடியாது. புனித வெள்ளியைக் கடக்காமல் உயிர்ப்பின் ஞாயிறுக்குள் நுழைய முடியாதல்லவா? எனவே உளியின் வலி தாங்கும் கல் மட்டுமே சிற்பமாகும். செதுக்கப்பட அனுமதிக்காத கல் படிக்கல்லாய் இருந்து காலால் மிதிபடும். செதுக்கப்பட அனுமதித்த கல்லோ தெய்வத்தின் சிலையாகி கோவிலுக்குள்ளே எல்லோராலும் கை கூப்பி வணங்கப்படும்.
2. சுமக்கப் பழகு
‘தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது’ (லூக்கா 14:27). இயேசுவின் சீடத்துவத்தின் முதன்மையான நிபந்தனையே சுமப்பதுதான். இயேசுவின் சீடர்கள் அனைவரும் சுமக்க அழைக்கப்படுகிறார்கள். தன் குழந்தையால் சுமக்க இயலாத அளவிற்கு எந்த தாயும் சுமையைக் கட்டி தன் பிள்ளையின் தலையில் வைப்பது உண்டா? கடவுளும் அவருடைய பிள்ளைகளாகிய நம்மீது நாம் சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை. ‘சுமை பெரிதாய் இருக்கிறதெனப் புலம்புவதை விடுத்து தோள்களை அகலமாக்கித் தா எனக் கேள்’ என்கிறது யூதப் பழமொழி. இயேசுவின் பாடசாலையில் சுமையாளர்களே சாதனையாளர்கள். பாரத்தைக் குறைக்க முடியாது, ஆனால் தோள்களை வலுப்படுத்திக் கொள்ளலாம். “சிறகுகள் விரிக்கப்படும் பொழுது சிகரங்கள் எட்டப்படுகின்றன. சிலுவைகள் சுமக்கப்படும் பொழுது சிம்மாசனங்கள் கிடைக்கப்பெறுகின்றன.”