ஆயரின் திருவுடைகள்
1. ஆயரின் தலைச்சீரா (Mitre)
ஆயர் திருப்பலியின் போது தலையில் அணியும் தொப்பியே ஆயரின் தலைச்சீரா எனப்படுகிறது. இது இரட்டைக் கோபுர வடிவில் மடக்கும் வகையில் அமைந்திருக்கும். முன்னும் பின்னுமாக இரு கூம்பு வடிவத்திலான, தடித்த மேல் நோக்கிய பகுதிகளும் உச்சிப்பகுதியிலிருந்து கீழ்வாட்டில் ஒன்றோடொன்று நடுப்பகுதி வரை மெல்லிய துணி கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். பின் பகுதியில் இரு பட்டை வடிவிலான அழகிய வேலைப்பாடுடைய சிறிய தொங்கல் இருக்கும். இது பொதுவாக திருத்தந்தை, கர்தினால்கள் மற்றும் ஆயர்களால் அணியப்படும்.
2. ஆயரின் சிறுதொப்பி (Skull cap)
சிறிய வட்ட வடிவிலான தொப்பி இது. திருத்தந்தை, கர்தினால்கள் மற்றும் ஆயர்களால் உச்சந்தலையில் அணியப்படும். திருப்பலி நேரத்தில் நற்கருணை மன்றாட்டின் போதன்றி ஏனைய நேரத்தில் அணியப்படும். இதை ஆயர்கள் வெளிர் நீல (பிங்க்) நிறத்திலும் கர்தினால்கள் சிகப்பு நிறத்திலும் திருத்தந்தை வெள்ளை நிறத்திலும் பயன்படுத்தலாம்.
3. ஆயரின் செங்கோல் (Crozier / Pastoral staff)
ஆயரின் திருப்பொழிவுச் சடங்கின் போது அவருக்குத் தரப்படுகிறது. இந்த செங்கோலை ஆயர் ஆடம்பரமான திருவழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுத்துவார். இது ஆயருடைய அதிகாரத்தையும், ஆட்சியுரிமையையும் காட்டக்கூடிய அடையாளமாக விளங்குகிறது. அதோடு சேர்த்து நம்பிக்கை மற்றும் நன்னெறி ஒழுக்கம் போன்றவற்றில் தன் மந்தையின் மீது, ஆயராக அவருக்கு இருக்கும் பொறுப்பையும் கடமையையும் இது உணர்த்துகிறது.
4. ஆயரின் மோதிரம் (Episcopal Ring)
வலது கையின் மோதிர விரலின் ஆயரால் அணியப்படும். இதுவும் அவருடைய ஆட்சியுரிமைக் குறிக்கும். மேலும் சிறப்பாக இது திரு அவை / மறைமாவட்டத்தின் மீது அவருக்கு இருக்க வேண்டிய பிரமாணிக்கத்தை நினைவூட்டுகிறது.
5. பேராயரின் திருநேரியல் (Pallium)
இது இரண்டு அங்குல அகலமுடையதாக வட்ட வடிவில் கழுத்தைச் சுற்றி அணியப்படும். இது பேராயரின் திருவுடைகளுள் ஒன்று. இதன் முன்பகுதியிலும் பின் பகுதியிலுமாக அதே இரு அங்குல அகலத்தில் பன்னிரெண்டு அங்குல நீளத்தில் ஒரு கீழ்நோக்கித் தொங்கும் பட்டை காணப்படும். இது செம்மறி ஆட்டுத் தோலால் செய்யப்பட்டு திருத்தந்தையால் பேராயர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை (தூய பேதுரு தலைமைப்பீட விழாவன்று) அளிக்கப்படும்.இதில் ஆறு சிறிய கருப்பு அல்லது சிவப்பு நிற சிலுவை அடையாளம் காணப்படும்.
6. ஆயரின் கழுத்தில் அணியப்படும் சிலுவை (Pectoral Cross)
இது திரு அவையின் முக்கிய திருப்பணியாளர்கள் என்பதைக் குறித்துக்காட்டுவதற்காக அணியப்படுகிறது. வழிபாட்டு நேரத்திலும், பிற சமயங்களிலும் கூட மார்பின் மீது படும் வகையில் இச்சிலுவையானது அணியப்படுகிறது. தொடக்க காலங்களில் இத்திருச்சிலுவையினுள் இயேசுவின் திருச்சிலுவையின் அருளிக்கமோ அல்லது புனிதர்களின் அருளிக்கங்களோ வைக்கப்படுவதும் உண்டு. ஆனால் இப்போது இது நடைமுறையில் இல்லை.
--------------------