புனித வியாழனன்று 7 ஆலயங்கள் சந்திப்பு ஏன்?
புனித வியாழன் அன்று இயேசுவின் இறுதி இரவு உணவு திருப்பலியைக் கொண்டாடியதைத் தொடர்ந்து, ஏழு ஆலயங்களுக்கு திருப்பயணம் செய்யும் ஒரு பண்டைய கத்தோலிக்கப் பாரம்பரியம் உள்ளது.
இந்த ஏழு ஆலயங்கள் என்பவை ஒவ்வொன்றும் கிறிஸ்து தமது பாடுகளின் நேரத்தில் சந்தித்த, அதாவது கெத்சமனி தொடங்கி கல்வாரியில் அவரது இறப்பு வரையிலான இறுதி ஏழு இடங்களைப் பிரதிபலிக்கின்றன.
கைது செய்யப்படுவதிலிருந்து சாவது வரையிலான இயேசுவின் பாடுகளின் பயணம் பின்வரும் ஏழு இடங்களைக் கொண்டது.
1. கெத்சமனித் தோட்டம் (லூக் 22: 39-46)
2. அன்னாவின் வீடு (யோவா 18:19-22)
3. தலைமைச் சங்கம் (மத் 26: 63-65)
4. பிலாத்துவின் அரண்மனை (யோவா 18: 35-37)
5. ஏரோதுவின் மாளிகை (லூக் 23: 8-9)
6. மீண்டும் பிலாத்துவின் அரண்மனை (மத் 27: 22-26)
7. கல்வாரி மலை (மத் 27: 27-31)
இந்த பாரம்பரியத்தின் தோற்றம் உரோம் நகரில் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து என அறிகிறோம். புனித பேதுருவிற்குப் பிறகு “உரோமின் இரண்டாவது திருத்தூதர்” என்று அழைக்கப்படும் புனித பிலிப் நேரி (1515-1595), உரோமின் கற்கள் வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு, உரோமிலுள்ள ஏழு பசிலிக்காக்களுக்குச் செல்வதுண்டு. பின்னாளில், பலரும் அவருடன் இத்திருப்பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவரே புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளைத் தியானித்தவாறு, ஏழு ஆலயங்களுக்கு இரவில் நடந்து செல்லும் பாரம்பரியத்தைத் தொடங்கினார்.
கத்தோலிக்க பழம்பெரும் பாரம்பரியப்படி புனித வியாழன் அன்று 7 ஆலயங்களைச் சென்று சந்தித்து செபிக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகின்றது. இவ்வாறு 7 ஆலயங்களுக்குச் சென்று நற்கருணை ஆண்டவரைச் சந்தித்து செபிப்பது, நாமும் இயேசுவுடைய பாடுகளின் பயணத்தில் உடன் நடக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமே.
ஆகவே,
புகைப்படம் எடுப்பதற்கோ, அலங்காரங்களைக் கண்டு அதிசயித்து ஆச்சரியப்பட்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கோ நாம் ஆலயம் ஆலயமாகச் செல்லவதில்லை என்பது நமக்கு நினைவிருக்கட்டும்!
இயேசுவின் பாடுகள் எவ்வாறு துன்பகரமாக இருந்தன என்பதை நாம் தியானிப்பதற்கே ஆலயங்களைச் சென்று சந்திக்கும் இம்முயற்சி நமக்கு வழிசெய்யட்டும்!
வெளிப்புற அலங்காரங்களும் ஆடம்பரங்களும் இந்நாளில் நம்மை திசைதிருப்பாதிருக்கட்டும்!
பல்வேறு செயல்களில் பரபரப்பாய் இருக்காமல் இறைவனோடு தனித்திருக்க, விழித்திருக்க, செபித்திருக்க இந்நாள் உதவட்டும்!