Showing posts with label இறைவேண்டல்கள். Show all posts
Showing posts with label இறைவேண்டல்கள். Show all posts

Saturday, 26 September 2020

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

( புதிய மற்றும் திருத்திய தமிழ் மொழிபெயர்ப்பு)


ஆண்டவரே இரக்கமாயிரும் (2)

கிறிஸ்துவே இரக்கமாயிரும் (2)

ஆண்டவரே இரக்கமாயிரும் (2)


கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவுடன் கேட்டருளும்.


விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா, 

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தூய ஆவியாராகிய இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தூய்மைமிகு மூவொரு இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.


புனித மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியருள் புனித கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்துவின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திரு அவையின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரக்கத்தின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறையருளின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எதிர்நோக்கின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூய்மைமிகு அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிமை குன்றா அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாசு இல்லாத அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவக் கறையில்லா அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அன்புக்குரிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியப்புக்குரிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நல்ல ஆலோசனை அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

படைத்தவரின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மீட்பரின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பேரறிவுமிகு கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வணக்கத்திற்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

போற்றுதற்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வல்லமையுள்ள கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிவுள்ள கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நம்பிக்கைக்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீதியின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானத்திற்கு உறைவிடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் மகிழ்ச்சியின் காரணமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானம் நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாட்சிக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தி நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறைபொருளின் ரோசா மலரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீது அரசரின் கோபுரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தந்த மயமான கோபுரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன் மயமான கோவிலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உடன்படிக்கையின் பேழையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விண்ணகத்தின் வாயிலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விடியற்கால விண்மீனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நோயுற்றோரின் ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துயருறுவோருக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்தவர்களுடைய துணையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வானதூதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதுபெரும் தந்தையரின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவாக்கினர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருத்தூதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறைசாட்சிகளின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறையடியார்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனைத்துப் புனிதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமல உற்பவியான அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விண்ணேற்பு அடைந்த அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்செபமாலையின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குடும்பங்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமைதியின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இந்திய நாட்டின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.


இறைவனின் புனித அன்னையே! இதோ உம் அடைக்கலம் நாடி வந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும். மாட்சிக்குரிய கன்னியே! விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காத்தருளும். 

முதல்வர்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி

அனைவரும்: இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மன்றாடுவோமாக!

இறைவா முழு மனத்துடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக் கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். 


--------------

நன்றி: நம் வாழ்வு வார இதழ்


Wednesday, 23 September 2020

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித மரியன்னை மன்றாட்டுமாலையில் புதிதாக சேர்க்கப்பட்ட புகழுரைகள்




2020 ஜுன் 20 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருவழிபாட்டு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் வழியாக புனித மரியன்னையின் மன்றாட்டுமாலையில் இரக்கத்தின் அன்னையே, எதிர்நோக்கின் அன்னையே மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே ஆகிய மூன்று புதிய வேண்டல்களைச் சேர்த்துக்கொள்ளும்படி சுற்றறிக்கை விடுத்துள்ளார்கள். 


இரக்கத்தின் அன்னையே என்பதை திரு அவையின் அன்னையே என்பதற்குப் பின்பும், எதிர்நோக்கின் அன்னையே என்பதை இறையருளின் அன்னையே என்பதற்குப் பின்பும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே என்பதை பாவிகளுக்கு அடைக்கலமே என்பதற்குப் பின்பும் சேர்த்து மன்றாட திருவழிபாட்டு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் பணித்துள்ளது. 


Wednesday, 12 August 2020

அருள் நிறைந்த மரியே மன்றாட்டு

 அருள் நிறைந்த மரியே மன்றாட்டு



திரு அவையின் தொன்மைச் சிறப்புமிக்க பாரம்பரியமான செபங்களுள் அருள் நிறைந்த மரியே வாழ்க எனும் மன்றாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மரியன்னையின் பரிந்துரையை நாடி வேண்டுவதாக அமைந்துள்ளது. 

பயன்பாடு

இச்செபத்தை செபமாலை செபிக்கும் போதும், மூவேளை மன்றாட்டை செபிக்கும் போதும் பயன்படுத்துகிறோம். இது மரியன்னைக்கு வணக்கம் செலுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட செபம் ஆகும். 

விவிலிய அடிப்படையும் விளக்கமும்

மங்கள வார்த்தை மன்றாட்டு முழுக்க முழுக்க விவிலிய அடிப்படை கொண்டதாகும். 

‘அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே’ -  லூக்கா 1:28

மரியா இறைவனின் அருளால் நிறைந்தவள் என்றும், ஆண்டவர் மரியாவோடு உடன் இருக்கிறார் என்றும் வானதூதர் கபிரியேல் கன்னி மரியாவைப் பார்த்து வாழ்த்துகிறார். இவ்வாழ்த்து தந்தையாம் கடவுளால் அவருடைய தூதரான கபிரியேலின் வழியாக மரியாவுக்கு வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்க வந்தபோது கபிரியேல் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவை வாழ்த்தினார். நாமும் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கும்போது, தந்தையாம் இறைவன் கபரியேல் வழியாக சொல்லியனுப்பிய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கிறிஸ்துவைப் பெற்றெடுக்க இசைவு தெரிவித்த அன்னைக்கு வணக்கம் செலுத்துகிறோம்.  

‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே’ – லூக்கா 1:42

இவ்வார்த்தைகள் கருவுற்றிருந்த எலிசபெத் மரியாவிடம் சொல்லியவை. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவுக்கு தனது வாழத்தையும் வணக்கத்தையும் தெரிவித்தாள். இஸ்ரயேல் இனத்துப் பெண்களில் பலர் மெசியாவின் தாயாக மாற ஏக்கம் கொண்டிருந்தாலும், மரியா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட எலிசபெத், கடவுளின் மகனையே கருவில் சுமக்கப்போகும் மரியா பெண்கள் அனைவரிலும் ஆசி பெற்றவள் என்று பாராட்டுகிறாள். மேலும் மரியாவின் வயிற்றில் பிறக்கப்போகும் இயேசுவும் ஆசி பெற்றவர் என்று பாராட்டுகிறாள்.  

‘புனித மரியே, இறைவனின் தாயே’ - லூக்கா 1:43

இந்த வார்த்தைகளும் மரியாவிடம் எலிசபெத் சொன்னவையே. மரியா புனிதமானவள் என்பதையும், அவள் மனிதரின் தாயல்ல. இறைவனின் தாய் என்பதையும் பறைசாற்றுகின்ற வார்த்தைகள் இவை. 

‘பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்’. -  யாக்கோபு 5:16

இச்செபத்தின் இறுதிப் பகுதியிலுள்ள இவ்வார்த்தைகள் நம்முடைய மன்றாட்டாக அமைந்துள்ளன. பரிந்துரை மன்றாட்டு என்பது கத்தோலிக்க திரு அவையில் முக்கியமான ஒன்று. இறைவனின் அன்னையாகிய மரியா அன்று கானாவில் நடைபெற்ற திருமணத்தில் திருமண வீட்டாராருக்காக இயேசுவிடம் பரிந்து பேசியதுபோல, இன்று நமக்காகவும் இறைவனிடம் பரிந்துபேசுவார் என்கிற நம்பிக்கையோடு நாம் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கிறோம். குறிப்பாக நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இப்பொழுது நமக்கான தேவைகளைக் குறித்தும், இறப்பின் வேளையில் நமக்குத் துணையாக இறைத்தாய் இருக்கும்படியாகவும் நாம் இறைஞ்சி செபிக்கிறோம். 



மூன்று பகுதிகள் தொகுக்கப்பட்ட வரலாறு

இச்செபத்தின் முதல் பகுதியில் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவை வாழ்த்துவதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:28). இந்த வார்த்தைகள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழிபாட்டு முறைகளில் காணப்பட்டன. 

இரண்டாவது பகுதியில் புனித திருமுழுக்கு யோவானின் தாயார் எலிசபெத் மரியாவைப் புகழ்வதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:42). இந்த இரண்டு பகுதிகளும் கி.பி. 1000 க்குள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்து வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஏறக்குறைய திருத்தந்தை நான்காம் உர்பன் காலத்தில் (கி.பி. 1261-64) இந்த இணைப்பில் இயேசு என்கிற சொல்லும் சேர்க்கப்பட்டது. 

மூன்றாவது பகுதியில் நாம் செபிக்கும் விண்ணப்பம் என்பது சுமார் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் வழக்கதிற்கு வந்து பல பரிமாணங்களைப் பெற்றிருக்க வேண்டும். 

இறுதியாக கி.பி. 1568 ஆம் ஆண்டில் திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் திருப்புகழ்மாலையை சீர்திருத்திய போது இந்த செபத்தின் இப்போது நாம் பயன்படுத்தும் முழுமை வடிவம் உருவானது. 


Thursday, 30 July 2020

கூப்பிய கரங்கள்


இறைவேண்டல் செய்வதற்கு ஏன் கூப்பிய கரங்கள்?




எல்லா சமயங்களிலும் அவற்றின் சமயம் சார்ந்த வழிபாட்டு சடங்குகளில் உடல்மொழிகள் என்பவை மிகவும் முக்கியமானவை. தனிப்பட்ட பிரார்த்தனையில், அவை விருப்பமானவை, ஆனால் சமூக திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், அவை சடங்கின் ஓர் உள்ளார்ந்த பகுதியாக மாறும்.  மிகக் குறிப்பாக சமூக திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் எல்லா மக்களும் கட்டாயமாக இணைந்து கடைபிடிக்க வேண்டிய பொதுவான உடல்மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கத்தோலிக்கர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் பொதுவான செப வேளைகளில் கடைபிடிக்கும் உடல்மொழிகளுள் முதன்மையானது கூப்பிய கைகள். 

நம்பிக்கையாளர்கள் தங்கள் இரு உள்ளங்கைகளையும் குவித்து, கூப்பிய நிலையில் அக்கைகளை மேல்நோக்கி வைத்தவாறு செபிப்பதை நாம் ஆலயங்களில் காண்கிறோம். இது செபத்தின் ஓர் அடிப்படை அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதன் பயன்பாட்டின் பின்னணியை பண்பாட்டு ரீதியாக வரலாற்றின் பக்கங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.  மேலும் நம்பிக்கையாளர்கள் தங்கள் பண்டைய மரபுகளில் வேரூன்றியுள்ள, பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் வித்திடும் இதுபோன்ற செயல்பாடுகளின் அர்த்தத்தையும், ஆழத்தையும் கண்டறிந்து அதற்கிணங்க செயல்பட அழைக்கப்படுகின்றனர்.

கூப்பிய கைகளோடு செபிக்க வேண்டும் என்று நம்முடைய மறைக்கல்வி வகுப்புகளில் நமக்கு கற்பிக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ளலாம். இவ்வழக்கம் எங்கிருந்து வந்தது?

யூத மரபில், இஸ்ரயேலின் அடிமைத்தன காலத்திற்கு பிந்தைய காலத்திலேயே சிலர் கைகளைக் குவித்து பிரார்த்தனை செய்ததாகவும், தொடக்ககால கிறிஸ்தவர்கள் இந்த வழக்கத்தை தங்கள் யூத பாரம்பரியத்திலிருந்து பெற்றனர் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் மற்றொரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், இரு கைகளையும் மடித்து கூப்பிய தோரணையில் வைத்திருப்பது சரணடைந்துவிட்டதைக் குறிக்கும் உரோமானிய நடைமுறையிலிருந்து பெறப்பட்டது என்பதாகும். ஒரு கைதியின் கைகளை கொடியாலோ அல்லது கயிற்றாலோ பிணைத்து வைக்கும் செயல் அவர்களின் சரணடைந்த நிலையைக் குறிக்கக் கூடியதாக இருந்ததென்றும், இதுவே செபத்தின்போது இரு கைகளையும் இணைத்து கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வதற்கான தொடக்கமாக இருந்திருக்க வேண்டும் என்றும் சமய வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பண்டைய உரோமையில், போரில் தோற்றுப்போய், கைதுசெய்யப்பட்ட ஒரு படைவீரன் தன்னுடைய கைகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் உடனடி மரணத்தைத் தவிர்க்க முடியும். இன்றைய நாட்களில் ஒரு வெள்ளைக் கொடியை அசைப்பது ‘நான் சரணடைகிறேன்’ என்பதை எப்படி உணர்த்துகிறதோ, அதைப் போலவே,  அன்றைய காலத்தில் கூப்பிய கரங்களும் ‘நான் சரணடைகிறேன்’ என்ற செய்தியை தெளிவாக வெளிப்படுத்தக் கூடிய அடையாளமாக இருந்தது.




பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, குடிமக்கள் தங்கள் அரசப்பற்றையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தங்கள் ஆட்சியாளர்களுக்கு கைகளைக் கோர்த்து, கூப்பிய நிலையில் மரியாதை செலுத்தினர். காலப்போக்கில், கைகளை ஒன்றிணைத்து கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வது  மற்றொருவரின் அதிகாரத்தை ஒப்புக்கொள்வது மற்றும் அந்த அதிகாரத்திற்கு தன்னை முற்றிலும் சமர்ப்பிப்பது ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் செயலாக அமைந்தது என்பதை கலாச்சார ஆய்வுகளிலிருந்து அறியலாம்.

கீழ்ப்படிதல் மற்றும் வணக்கத்தை வெளிப்படுத்த இந்த வகையான கைகளைக் கோர்த்து, கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வது கத்தோலிக்க திருவழிபாட்டு முறைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக குருத்துவ திருநிலைப்பாட்டு திருவழிபாட்டு சடங்கில், ஓர் ஆயர் தான் அருள்பொழிவு செய்யும் திருத்தொண்டரின் கூப்பிய கைகளை தன்னுடைய கைகளுக்குள் பிடித்தவாறு, ‘எனக்கும் என் வழிவரும் ஆயருக்கும் நீர் வணக்கம் செலுத்தவும், கீழ்ப்படியவும் வாக்களிக்கிறீரா?’ என்று வினவுவார். இவ்வாறு வணக்கத்தின் வெளிப்பாடாகவும், கீழ்ப்படிதலின் அம்சமாகவும் கூப்பிய கைகள் எடுத்தியம்புகின்றன. 



கத்தோலிக்க திரு அவையின் பாரம்பரிய திருவழிபாட்டு படிப்பினை கூப்பிய கைகளைப் பற்றி குறிப்பிடும்போது இரு உள்ளங்கைகளையும் விரித்து, ஒன்றோடு ஒன்றாக இணைத்தவாறு, வலது கையின் கட்டை விரலை இடது கையின் கட்டை விரலின் மேல் சிலுவை வடிவத்தில் குறுக்காக வைத்து, மார்பின் முன்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.





அன்னை மரியாவும் தன்னுடைய பெரும்பான்மையான திருக்காட்சிகளில் குவித்த அல்லது கூப்பிய கரங்களுடன் காட்சியளித்துள்ளார் என்பதும் இங்கே நினைவுகூறத்தக்கது. 

இவற்றை உணர்ந்தவர்களாக குவித்த கைகளோடு கடவுளிடம் செபிப்போம். கூப்பிய கைகள் நம்முடைய தாழ்ச்சியையும், சரணடைதலையும் இறைவனுக்கு முன்பு எடுத்துக்காட்டும் அடையாளமாக இனி அமையட்டும். 

Wednesday, 22 July 2020

மூவொரு இறைவன் புகழ்


மூவொரு இறைவன் புகழ்





மூவொரு இறைவன் புகழ் என்னும் இச்செபம் நாம் மூவொரு கடவுளுக்கு நம்முடைய புகழ்ச்சியை செலுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எனவும், அவருக்கு நாம் செலுத்தும் மாட்சியும் எக்காலத்துக்கும் உரியது எனவும் இச்செபம் பறைசாற்றுகிறது. மூவொரு இறைவன் புகழ் என்னும் இச்செபமானது ‘சிறிய புகழ்ப்பா’ என்றும், வானவர் கீதம் ‘பெரிய புகழ்ப்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. 

தோற்றம்

மூவொரு கடவுளின் மாட்சிக்காக சொல்லப்படும் இச்செபம் தொடக்க காலத் திரு அவையிலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது. குறிப்பாக ஹிப்போலிட்டஸ் (கி.பி. 235) மற்றும் ஒரிஜன் (கி.பி. 231) ஆகிய திரு அவையின் தந்தையர்கள் இச்செபத்திலுள்ள வார்த்தைகளை ஒத்த வார்த்தைகளால் மூவொரு கடவுளை புகழ்ந்து செபித்திருக்கின்றனர் என்று திரு அவை வரலாறு கூறுகிறது. இப்போது நாம் செபிக்கும் இந்த மூவொரு இறைவன் புகழ் என்கிற செப வாய்பாடு கி.பி. நான்காம் நூற்றாண்டில் பரவிய ஆரிய தப்பறைக் கொள்கையின் எதிர்ப்பிலிருந்து உருவானதென அறிகிறோம். 

இறையியல் விளக்கம்

கத்தோலிக்க திரு அவையின் மிகவும் அடிப்படையானதும் முக்கியமானதுமான நம்பிக்கை கோட்பாடு மூவொரு கடவுள் கோட்பாடு ஆகும். கத்தோலிக்கர்களாகிய நாம் ஒரே கடவுளை நம்புகின்றோம். அவர் மூன்று ஆட்களாய் (தந்தை, மகன், தூய ஆவியார்) இருக்கின்றார். இதையே கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி ஏடு நமக்கு கற்பிக்கிறது. 

மூவொரு கடவுள் கோட்பாடு என்றால் என்ன?

கடவுள் ஒருவரே. அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூன்று ஆட்களாய் இருக்கிறார். இவர்களுக்குள் யாதொரு வேறுபாடுமின்றி ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. அதனை விளக்கும் மறைக்கோட்பாடே மூவொரு கடவுள் கோட்பாடு ஆகும். 


மீட்பின் வரலாற்றில் மூவொரு கடவுளின் செயல்கள்



தந்தை

மூவொரு இறைவனின் முதலாம் ஆள். பழைய ஏற்பாடு காட்டும் கடவுளின் முகம்.
இவர் அன்பும், நீதியும் உள்ளவர். நன்மைத்தனத்திற்கு ஊற்றானவர்.
உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர். படைப்பின் சிகரமாக மனிதரைப் படைத்தவர். 
படைப்புகள் அனைத்தையும் பராமரித்துக் காக்கிறவர்.
மனிதரை மீட்பதற்காக தம் ஒரே மகனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பியவர். 

மகன்

மூவொரு இறைவனின் இரண்டாம் ஆள். புதிய ஏற்பாடு காட்டும் கடவுளின் முகம்.
கடவுளின் ஒரே மகன். இவர் வழியாகவே அனைத்தும் உண்டாக்கப்பட்டன.
இவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதனாகப் பிறந்தார். பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப் போல் வாழ்ந்தார். 
இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு போதித்தார். மக்கள் மனந்திரும்பி தந்தையோடு ஒப்புரவாக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மனிதரைப் பாவத்திலிருந்து மீட்க பாடுகள் பட்டார். சிலுவையில் அறையுண்டு இறந்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 
வானகத்திற்கு எழுந்தருளிச் சென்று தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். இவர் மாட்சிமையின் ஆண்டவர். 

தூய ஆவியார்

இவர் மூவொரு கடவுளின் மூன்றாம் ஆள்.
படைப்பின்போதே செயல்பட்டவர். படைப்பை ஒழுங்குபடுத்தியவர்.
உலகிலுள்ள அனைத்தையும் புதுப்பிக்கிறவர். புதுப்படைப்பாக மாற்றுகிறவர்.
உறவை உருவாக்குபவர். ஒற்றுமையை வளர்ப்பவர்.
இயேசுவால் வாக்களிக்கப்பட்டவர். இவரே நம் துணையாளர். நம்மைத் தேற்றுபவர். உறுதிப்படுத்துபவர். நிறை உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துபவர். நமக்காகத் தந்தையிடம் பரிந்துபேசுபவர்.
திரு அவையை ஒன்றிணைப்பவர். அதைப் புனிதப்படுத்தி வழிநடத்துபவர்.

இச்செபத்திற்கு சிலுவை அடையாளம் வரையலாமா?

இச்செபத்தை செபிக்கும்போது நாம் சிலுவை அடையாளம் வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இது மூவொரு கடவுளுக்கு புகழ்ச்சியையும் மாட்சியையும் செலுத்தக்கூடியதாக இருப்பதால், இதைத் தலை வணங்கி செபிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். 

பயன்பாடு

இச்செபம் செபமாலை, திருப்புகழ்மாலை மற்றும் பல பக்தி முயற்சிகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.  


Wednesday, 15 July 2020

சிலுவை அடையாளம்


சிலுவை அடையாளமிடுதல்



 

சிலுவை – கிறிஸ்துவின் அடையாளம்கிறிஸ்தவத்தின் அடையாளம்

அடையாளம் என்பது ஒவ்வொரு சமயத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று.  எல்லா சமயங்களும் தங்களை எளிதில் எடுத்தியம்பிட அடையாளங்களைப் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் கிறிஸ்தவர்களின் புனித அடையாளமாக சிலுவை உள்ளதுஏனெனில் அது கிறிஸ்து இயேசுவின் அடையாளம் ஆகும்நமக்காக மனிதராகப் பிறந்த இயேசு சிலுவையில் பலியானதால்சிலுவை நம்முடைய புனிதச் சின்னமாக திகழ்கிறதுசிலுவை கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மீட்பின் சின்னமாகவும்அருளின் வாய்க்காலாகவும் போற்றப்படுகிறது.


எங்கு சிலுவை இருந்தாலும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறதுசிலுவை அணிந்திருக்கும் மனிதர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாகவும்சிலுவை வைக்கப்பட்டுள்ள வீடுகளை கிறிஸ்தவர்களின் வீடுகள் எனவும்சிலுவை வைக்கப்பட்டுள்ள நிறுவனங்களை கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். (இன்று கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் சிலுவையை ‘பேஷனாக’  அணிந்துகொள்வதை பார்க்கிறோம்).

விவிலியமும் அடையாளமிடுதலும்

மனிதர்கள் தம்மீது அடையாளம் இட்டுக்கொள்வதும்இல்லங்களில் அடையாளம் இட்டுக்கொள்வதும் பழைய ஏற்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு விவிலிய மரபு ஆகும்எடுத்துக்காட்டாக:

1.            நெற்றியில் அடையாளமிடுதல்
நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு’ (எசே 9:4).

2.            வீடுகளில் அடையாளம் இடுதல்
ஈசோப்புக் கொத்தை எடுத்துகிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்துகதவின் மேல் சட்டத்திலும்இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள்’ (விப 12:22).

இவ்வாறு விவிலியத்தில் அடையாளங்கள் என்பவை அருள்வாழ்வுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பதை அறிகிறோம்இப்பின்னணியில் கிறிஸ்தவர்களாகிய நாமும் சிலுவை அடையாளத்தை நம்முடைய அருள்வாழ்வுக்கு உதவும் ஒன்றாகவே அணுகிட வேண்டும்.

சிலுவை அடையாளமிடுதல் தோன்றிய வரலாறு

கிறிஸ்தவர்கள் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதைப்பற்றி விவிலியத்தில் நேரடியான குறிப்புகள் இல்லைஆனால் திருத்தூதர்கள் காலம் தொட்டே இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்திருக்கிறதுபுனித பேசில் என்பவர் திரு அவையின் தொடக்க காலங்களில் திருமுழுக்கு கொடுக்கப்பட்டபோது இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார்அதிலிருந்துதான் சிலுவை அடையாளம் வரைவது எல்லோருக்கும் பொதுவான ஓர் கிறிஸ்தவ செய்கையாக மாறியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

திரு அவையின் தந்தையர்களுள் ஒருவரான தெர்த்தூலியன் (கி.பி. 211) என்பவர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்காக வாழ்கிறார்கள் என்பதை நினைவூட்டகிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியிலே சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளவேண்டும் என்று போதித்தார்மேலும் நாளின் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுங்கள் என்றும் இவர் கற்பித்தார்.

சிலுவை அடையாளம் - செபம் மற்றும் அருட்கருவி

புனித சிலுவை அடையாளம்’ என்பதை ஒரு முக்கியமான அடிப்படை செபமாக கத்தோலிக்கத் திரு அவை வைத்திருக்கிறது.  இந்த சிலுவை அடையாளம் என்கிற செபத்தை எல்லா அன்றாட மற்றம் ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்னதாகவும்இறுதியிலும் நாம் பயன்படுத்துகிறோம். ‘புனித சிலுவை அடையாளம்’ என்பது மிக முக்கியமான அருட்கருவியும் ஆகும்திரு அவையால் ஏற்படுத்தப்பட்டுஅருள் வாழ்வில் நாளும் வளர நமக்கு உதவிடக் கூடியவற்றை (செயல்கள்பொருட்கள்அருட்கருவிகள் என்கிறோம்அந்த அருட்கருவிகளில் முதன்மையான இடத்தை சிலுவை அடையாளம் பெறுகிறது.

சிலுவை அடையாளம் வரைவது ஏன்?
  
          

அர்ப்பணமும் புனிதப்படுத்துதலும்: சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் நம்மை மூவொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம்மூவொரு கடவுளின் பெயரால் நம்மையே நாம் புனிதப்படுத்திக்கொள்கிறோம்இச்செயல் அருள்வாழ்வில் வளர நமக்கு உதவுகிறது.

மூவொரு கடவுள் மீதான நம்பிக்கை: சிலுவை அடையாளம் வரைகிற போது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் நற்செய்தியில் நாம் வாசிக்கிறபடி ‘தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால்’ (காண்மத் 28:19) என்கிற திருமுழுக்கின் வாய்பாடு ஆகும்இவ்வாறு சொல்வதன் வழியாகநாம் நம்முடைய கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையாகிய மூவொரு கடவுள் மீதான நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம்.

சிலுவையின் வழியில் மீட்பு: புனித பவுல் சொல்வதைப் போல கிறிஸ்தவர்களாகிய நமக்கு சிலுவையைப் பற்றிய வெட்கம் ஏதும் இல்லை. (காண்: 1 கொரி 1:18,23). எனவே சிலுவை அடையாளத்தை நம் மீது வரைகின்றபோது வெளிப்படையாக நாம் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்துகின்றோம்சிலுவையின் வழியாகவே இயேசு நமக்கு மீட்பு கொடுத்தார் என்பதையும் இதன் வழியாக நாம் அறிக்கையிடுகின்றோம்.

சிலுவை அடையாளம் வரைவதன் இறையியல்

சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதில் ஏராளமான கருத்துகளும் சிந்தனைகளும் இறையியல் அடிப்படையில் நிறுவப்படுகின்றனஇருப்பினும் நம்முடைய கற்றறிதலுக்காக ஆறு காரியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
  • நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
  • திருமுழுக்கின் நினைவூட்டல்
  • சீடத்துவத்தின் அடையாளம்
  • துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
  • அலகைக்கு எதிரான ஆயுதம்
  • தன்னலத்தின் மீதான வெற்றி

 1.            நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
நாம் சிலுவை அடையாளம் வருகிறபோது தந்தை கடவுள் இயேசு மற்றும் தூய ஆவியார் மீதான நம்முடைய நம்பிக்கையை அறிக்கை செய்கிறோம்நம் கடவுள் ஒரே கடவுள் என்றும் அவர் மூன்று ஆட்களாக இருக்கின்றார் என்றும் நம்முடைய நம்பிக்கை அறிக்கையின் சுருக்கத்தை இதன் வழியாக எளிய முறையில் பறைசாற்றுகிறோம்

2.            திருமுழுக்கின் நினைவூட்டல்
சிலுவை அடையாளம் வரைந்துகொள்வது நம்முடைய திருமுழுக்கை நமக்கு நினைவூட்டக்கூடியதாக இருக்கிறதுகிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் விதமாகவேதிருமுழுக்கின் போது நம்மீது சிலுவை அடையாளம் வரையப்பட்டதுஅதனால் நாம் ஒவ்வொரு முறையும் நம்மீது சிலுவை அடையாளம் வரையும் போது நம்முடைய திருமுழுக்கை நாம் மீண்டுமாக நினைவுபடுத்திக் கொள்கிறோம்நாம் இயேசுவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம்  என்கிற நம்பிக்கையையும் பெறுகிறோம்

3.            சீடத்துவத்தின் அடையாளம்
கிரேக்க கலாச்சாரத்தின்படி அடிமைகளின் உரிமையாளர்கள் தங்கள் அடிமைகளின் நெற்றியின் மீது ஏதேனும் அடையாளத்தையோ அல்லது முத்திரையையோ பதிப்பது வழக்கம்இது அந்த அடிமை அவருடைய உரிமையாளருக்குச் சொந்தம் என்பதை வெளிக்காட்டுகிறதுஅதேபோல கிறிஸ்துவின் சிலுவை அடையாளத்தை தம்மீது வரைந்துகொள்கிற கிறிஸ்தவர்கள் கிறிஸ்து இயேசுவுக்கு சொந்தமானவர்கள் என்பதையும் இது நமக்கு வெளிப்படுத்துகிறதுஅடிமை அவருடைய உரிமையாளர் சொல்வதற்குக் கட்டுப்பட்டும் கீழ்படிந்தும் வாழ்வதைப் போல நாமும் கிறிஸ்துவுக்கு கட்டுப்பட்டும் கீழ்ப்படிந்தும் வாழ வேண்டும் என்பதையும் நமக்கு இது தெரிவிக்கிறதுகிறிஸ்துவின் சீடர்கள் என்பவர்கள் அவருடைய கட்டளைகளை கடைபிடித்து அவரைப்போல வாழ முயல வேண்டும்எனவே சிலுவை அடையாளம் வரைவதன் மூலம் நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடித்துஇயேசுவைப் போன்று  வாழத் தயார் என்று தீர்மானித்துவிட்ட சீடத்துவத்தின் அடையாளமாகும்.

4.            துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
சிலுவை என்பது துன்பத்தின் குறியீடுதுன்பமாகிய சிலுவையின் வழியாகவே கிறிஸ்து மனிதருக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தார்எனவே கிறிஸ்து இயேசுவைப் போல நாமும் துன்பத்தை துணிவுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்கிற மனநிலையையும்உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது.

5.            அலகைக்கு எதிரான ஆயுதம்
சிலுவை என்பது கிறிஸ்துவின் வெற்றியின் சின்னமாகவும் இருக்கிறதுநம்மீது சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் எனத் தெரிவிக்கிறோம்அதனால் இது அலகையை மிகவே அச்சுறுத்துகின்றதுகிறிஸ்துவுக்கு சொந்தமானதை அலகையால் தீண்ட முடியாதுஎனவே சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நம்மை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்கிநம்மையே நாம் அலகையிடமிருந்து பாதுகாத்துக்கொள்கிறோம்.  

6.            தன்னலத்தின் மீதான வெற்றி
இறையன்போடும்பிறர் அன்போடும் வாழ்வதே சிலுவை வழி வாழ்வதாகும்இதற்கு தன்னலம் தடையாக இருக்கிறதுதன்னலத்தை தகர்த்து அன்பு வாழ்வு வாழஇயேசுவின் சிலுவை நமக்கு உதவுகிறதுஇவ்வாறு சிலுவை அடையாளமிடுவதுநம்மையும் இயேசுவைப் போல தன்னலம் இல்லாதவர்களாக வாழ அழைக்கிறதுசிலுவை இயேசு நம்மீது கொண்டிருந்த தன்னலமற்ற அன்பை நமக்கு உணர்த்துகிறதுநம்மையும் சுய விருப்பு வெறுப்புகளை அகற்றிஅன்புடன் பிறர் மைய வாழ்வு வாழ அழைப்பு தருகிறதுசிலுவை அடையாளம் வரைவது நம்முடைய தன்னலத்தின் மீது வெற்றிகொள்ளவும் நமக்கு உதவுகிறது.

சிலுவை அடையாளம் வரையும் முறை – சுருக்கமானது



இடது கையை மார்பின் மீது வைத்தவாறுதிறந்த வலது கையினுடைய ஐந்து விரல்களையும் சேர்த்த வண்ணம் முதலில் ‘தந்தை’ என்று சொல்லியவாறு நெற்றியைத் தொட வேண்டும்பின்பு ‘மகன்’ என்று சொல்லியவாறு மார்பைத் தொட வேண்டும்பின்பு ‘தூய’ என்று சொல்லியவாறு இடது பக்க தோள்பட்டையையும், ‘ஆவியாரின்’ என்று சொல்லியவாறு வலது பக்க தோள்பட்டையையும் தொட வேண்டும்இறுதியில் இரு கைகளையும் குவித்தவாறு ‘பெயராலேஆமென்’ என்று சொல்லி முடிக்க வேண்டும்.

சிலுவை அடையாளம் வரையும் முறை – விரிவானது

இடது கையை மார்பில் வைத்துக்கொண்டுவலது கையின் பெரு விரலால் கீழ்கண்டவாறு நெற்றியிலும்வாயிலும் மற்றும் மார்பிலும் சிலுவை அடையாளம் வரைய வேண்டும்.

புனித சிலுவை’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘அடையாளத்தினாலே’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடுஎன்று சொல்லியவாறு நெற்றியில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

எங்கள் எதிரிகளிடமிருந்து’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘எங்களை விடுவித்தருளும்’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடு)  என்று சொல்லியவாறு வாயில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

எங்கள்’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘இறைவா’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடுஎன்று சொல்லியவாறு மார்பினில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

குறியீடுகளின் அர்த்தமும் ஆழமும்
  • திறந்த வலது கை - நம்மை ஆசீர்வதிப்பதன் அடையாளம் 
  • ஐந்து விரல்கள் - இயேசுவின் ஐந்து காயங்களைக் குறிக்கின்றன.
  • நெற்றியில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை திறந்த மனதுடன் கேட்க
  • உதட்டில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை அறிவிக்க
  • மார்பில் வரையப்படும் சிலுவை - இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்க
  • நெற்றியைத் தொடுதல் - அறிவின் குறியீடு (கடவுளை அறிய)
  • மார்பினைத் தொடுதல் - அன்பின் குறியீடு (கடவுளை அன்பு செய்ய)
  • தோள்பட்டை – ஆற்றலின் (சக்தியின்குறியீடு (கடவுளுக்கு பணி செய்ய)