Thursday, 30 July 2020

கூப்பிய கரங்கள்


இறைவேண்டல் செய்வதற்கு ஏன் கூப்பிய கரங்கள்?




எல்லா சமயங்களிலும் அவற்றின் சமயம் சார்ந்த வழிபாட்டு சடங்குகளில் உடல்மொழிகள் என்பவை மிகவும் முக்கியமானவை. தனிப்பட்ட பிரார்த்தனையில், அவை விருப்பமானவை, ஆனால் சமூக திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், அவை சடங்கின் ஓர் உள்ளார்ந்த பகுதியாக மாறும்.  மிகக் குறிப்பாக சமூக திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் எல்லா மக்களும் கட்டாயமாக இணைந்து கடைபிடிக்க வேண்டிய பொதுவான உடல்மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கத்தோலிக்கர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் பொதுவான செப வேளைகளில் கடைபிடிக்கும் உடல்மொழிகளுள் முதன்மையானது கூப்பிய கைகள். 

நம்பிக்கையாளர்கள் தங்கள் இரு உள்ளங்கைகளையும் குவித்து, கூப்பிய நிலையில் அக்கைகளை மேல்நோக்கி வைத்தவாறு செபிப்பதை நாம் ஆலயங்களில் காண்கிறோம். இது செபத்தின் ஓர் அடிப்படை அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதன் பயன்பாட்டின் பின்னணியை பண்பாட்டு ரீதியாக வரலாற்றின் பக்கங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.  மேலும் நம்பிக்கையாளர்கள் தங்கள் பண்டைய மரபுகளில் வேரூன்றியுள்ள, பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் வித்திடும் இதுபோன்ற செயல்பாடுகளின் அர்த்தத்தையும், ஆழத்தையும் கண்டறிந்து அதற்கிணங்க செயல்பட அழைக்கப்படுகின்றனர்.

கூப்பிய கைகளோடு செபிக்க வேண்டும் என்று நம்முடைய மறைக்கல்வி வகுப்புகளில் நமக்கு கற்பிக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ளலாம். இவ்வழக்கம் எங்கிருந்து வந்தது?

யூத மரபில், இஸ்ரயேலின் அடிமைத்தன காலத்திற்கு பிந்தைய காலத்திலேயே சிலர் கைகளைக் குவித்து பிரார்த்தனை செய்ததாகவும், தொடக்ககால கிறிஸ்தவர்கள் இந்த வழக்கத்தை தங்கள் யூத பாரம்பரியத்திலிருந்து பெற்றனர் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் மற்றொரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், இரு கைகளையும் மடித்து கூப்பிய தோரணையில் வைத்திருப்பது சரணடைந்துவிட்டதைக் குறிக்கும் உரோமானிய நடைமுறையிலிருந்து பெறப்பட்டது என்பதாகும். ஒரு கைதியின் கைகளை கொடியாலோ அல்லது கயிற்றாலோ பிணைத்து வைக்கும் செயல் அவர்களின் சரணடைந்த நிலையைக் குறிக்கக் கூடியதாக இருந்ததென்றும், இதுவே செபத்தின்போது இரு கைகளையும் இணைத்து கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வதற்கான தொடக்கமாக இருந்திருக்க வேண்டும் என்றும் சமய வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பண்டைய உரோமையில், போரில் தோற்றுப்போய், கைதுசெய்யப்பட்ட ஒரு படைவீரன் தன்னுடைய கைகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் உடனடி மரணத்தைத் தவிர்க்க முடியும். இன்றைய நாட்களில் ஒரு வெள்ளைக் கொடியை அசைப்பது ‘நான் சரணடைகிறேன்’ என்பதை எப்படி உணர்த்துகிறதோ, அதைப் போலவே,  அன்றைய காலத்தில் கூப்பிய கரங்களும் ‘நான் சரணடைகிறேன்’ என்ற செய்தியை தெளிவாக வெளிப்படுத்தக் கூடிய அடையாளமாக இருந்தது.




பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, குடிமக்கள் தங்கள் அரசப்பற்றையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தங்கள் ஆட்சியாளர்களுக்கு கைகளைக் கோர்த்து, கூப்பிய நிலையில் மரியாதை செலுத்தினர். காலப்போக்கில், கைகளை ஒன்றிணைத்து கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வது  மற்றொருவரின் அதிகாரத்தை ஒப்புக்கொள்வது மற்றும் அந்த அதிகாரத்திற்கு தன்னை முற்றிலும் சமர்ப்பிப்பது ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் செயலாக அமைந்தது என்பதை கலாச்சார ஆய்வுகளிலிருந்து அறியலாம்.

கீழ்ப்படிதல் மற்றும் வணக்கத்தை வெளிப்படுத்த இந்த வகையான கைகளைக் கோர்த்து, கூப்பிய நிலையில் வைத்துக்கொள்வது கத்தோலிக்க திருவழிபாட்டு முறைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக குருத்துவ திருநிலைப்பாட்டு திருவழிபாட்டு சடங்கில், ஓர் ஆயர் தான் அருள்பொழிவு செய்யும் திருத்தொண்டரின் கூப்பிய கைகளை தன்னுடைய கைகளுக்குள் பிடித்தவாறு, ‘எனக்கும் என் வழிவரும் ஆயருக்கும் நீர் வணக்கம் செலுத்தவும், கீழ்ப்படியவும் வாக்களிக்கிறீரா?’ என்று வினவுவார். இவ்வாறு வணக்கத்தின் வெளிப்பாடாகவும், கீழ்ப்படிதலின் அம்சமாகவும் கூப்பிய கைகள் எடுத்தியம்புகின்றன. 



கத்தோலிக்க திரு அவையின் பாரம்பரிய திருவழிபாட்டு படிப்பினை கூப்பிய கைகளைப் பற்றி குறிப்பிடும்போது இரு உள்ளங்கைகளையும் விரித்து, ஒன்றோடு ஒன்றாக இணைத்தவாறு, வலது கையின் கட்டை விரலை இடது கையின் கட்டை விரலின் மேல் சிலுவை வடிவத்தில் குறுக்காக வைத்து, மார்பின் முன்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.





அன்னை மரியாவும் தன்னுடைய பெரும்பான்மையான திருக்காட்சிகளில் குவித்த அல்லது கூப்பிய கரங்களுடன் காட்சியளித்துள்ளார் என்பதும் இங்கே நினைவுகூறத்தக்கது. 

இவற்றை உணர்ந்தவர்களாக குவித்த கைகளோடு கடவுளிடம் செபிப்போம். கூப்பிய கைகள் நம்முடைய தாழ்ச்சியையும், சரணடைதலையும் இறைவனுக்கு முன்பு எடுத்துக்காட்டும் அடையாளமாக இனி அமையட்டும்.