திருத்தந்தையின் சிவப்பு நிற காலணிகள் ஏன்?
திருத்தந்தையின் காலணிகளின் தோற்றம் குறித்த புரிதலுக்கு நாம் பைசாந்திய அரச காலத்திற்கு செல்ல வேண்டும். சிவப்பு வண்ண காலணிகள் தியாகத்தின் அடையாளங்களாக நார்மன் மன்னர்களால் அணியப்பட்டன. அவர்களின் வாரிசுகளான உரோமானிய பேரரசர்களும் இதே வழிமுறையைப் பின்பற்றினார்கள். காலணிகள் சிவப்பு நிறமாக இருந்தால், அவர் சமூகத்தால் மதிக்கத்தக்க ஒருவராக அவர் கருதப்படுவதுண்டு. சிவப்பு நிற காலணிகள் அணிவது ஒருவரின் மதிப்பையும், தகுதியையும், செல்வாக்கையும் காட்டக்கூடியதாக உள்ளது. இப்பின்னணியில் திரு அவையின் தலைவர்களும் சிவப்பு நிற காலணிகளைப் பயன்படுத்தினர்.
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்த திரு அவையின் வரலாறு முழுவதும், பல நூற்றாண்டுகளாக சிந்தப்பட்ட கத்தோலிக்க மறைசாட்சிகளின் இரத்தத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் திருத்தந்தையின் காலணிகளுக்கு சிவப்பு நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருத்தந்தையின் சிவப்பு நிற காலணிகள் கிறிஸ்துவின் இரத்தக் கறைபடிந்த கால்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. ஏனெனில் பாடுகளின் பாதையில் கல்வாரி நோக்கி நடந்து சென்ற, இரத்தத்தால் தோய்ந்த இயேசுவின் கால்களையும் திருத்தந்தையின் சிவப்பு நிற காலணிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. இதோடு கூட, பெந்தகோஸ்தே நாளில் திருத்தூதர்கள் மீது எரியும் நாக்குகளாய் இறங்கிய, தூய ஆவியாரின் அருள்பொழிவை நினைவுகூரும் வகையிலும், மனித குலத்தின் மீது பற்றி எரியும் கடவுளின் அன்பையும் சிவப்பு திருத்தந்தையின் காலணிகள் குறிக்கின்றன. சிவப்பு காலணிகள் இயேசு கிறிஸ்துவின் இறுதி அதிகாரத்திற்கு திருத்தந்தை முற்றிலும் அடிபணிந்திருப்பதையும் குறிக்கிறது.
பழமையான பாரம்பரியத்தின்படி திருத்தந்தைக்கு மொத்தம் மூன்று வகையான காலணிகள் இருக்கும். வத்திக்கானுக்குள் பயன்படுத்திட சிவப்பு பட்டால் ஆன காலணிகள், திருப்பலி மற்றும் வழிபாட்டு கொண்டாட்டங்களுக்கான சிவப்பு காலணிகள், வத்திக்கானுக்கு வெளியில் செல்லும்போது அணிவதற்கான சிவப்பு காலணிகள்.
வெவ்வேறு திருத்தந்தையர்களின் காலத்தில் அவர்களுடைய காலணிகளின் தோற்றத்தில் பல மாற்றங்கள் இருந்தன. உதாரணமாக, திருத்தந்தை ஆறாம் பவுல் தன்னுடைய சிவப்பு காலணியில் சேர்க்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றும்படி உத்தரவிட்டார். மேலும் வத்திக்கானுக்குள் இனி பட்டு காலணியைப் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் முடிவு செய்தார்.
அவருக்குப் பின் வந்த திருத்தந்தையர் சிலர் பழைய மரபுக்குத் திரும்பினர். திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் போன்றோர் தங்கள் சிவப்பு காலணியுடன் புதைக்கப்பட்டனர்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பிரகாசமான சிவப்பு காலணிகளையே பயன்படுத்தினார். மனத்தாழ்மையால் தூண்டப்பட்டவராய் நம் இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் சிவப்பு வண்ண காலணிக்கு பதிலாக அவர் எப்போதும் வழக்கமாக அணியும் கருப்பு வண்ண காலணியை மட்டுமே அணிய முடிவு செய்து, இன்றளவும் கருப்பு வண்ண காலணிகளையே பயன்படுத்திவருகிறார்.