இயேசுவும் சமாரியப் பெண்ணும்
காட்சி -1
(தண்ணீர் வாங்க அண்டை வீட்டுக்குச் செல்லுதல்)
இடம்: சாராவின் வீடு
பங்கு பெறுவோர்: சமாரியப்பெண், சாரா, ரூபா
ச.பெ: சாரா அக்கா, சாரா அக்கா, வீட்டுல குடிக்க தண்ணி இல்ல. பிள்ளைங்க வேற சாப்பிட வர்ற நேரம் ஆச்சு. கொஞ்சம் தண்ணி தர்றீங்களா?
சாரா: இங்க பாரு, என் வீட்டிலயும் தான் தண்ணி இல்ல. இதுல உனக்கு எங்க இருந்து நான் தண்ணி தர்றது?
ச.பெ: சரிங்க அக்கா, அப்ப நீங்களும் கூட குடத்தை எடுத்துக்கொண்டு என்னோட வாங்களேன், இரண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டே போய் கிணற்றுல இருந்து தண்ணீர் எடுத்துகிட்டு வரலாம்?
சாரா: அய்யோ ஆள விடு. அடிக்கிற வெயில்ல குடத்தை தூக்கிகிட்டு இந்நேரத்துல யாரு வருவா? அதெல்லாம் நம்மளால முடியாது. வேணும்னா நீ போய் தண்ணி எடுத்துக்கிட்டு வா.
ச.பெ: பரவாயில்லை சாரா அக்கா. நான் தனியா போயிருக்கிறேன். (செல்லுதல்)
ரூபா: அண்ணி, நான் வீட்ல சும்மா தானே இருக்கிறேன். நான் வேணா கூட போயிட்டு வரவா?
சாரா: அடியே ரூபா, சும்மா வாயை மூடிக்கிட்டு இரு. உனக்கு இவள பத்தி ஒன்னும் தெரியாது.
ரூபா: ஏன் அண்ணி இப்படி சொல்றீங்க. என்ன விசயம். எனக்கு ஒன்னுமே புரியலையே.
சாரா: ரூபா உனக்கு இவளோட விசயமெல்லாம் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. ஏன்னா நீ தான் இந்த ஊருக்குப் புதுசாச்சே. நான் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ.
ரூபா: ம்ம்ம்…. சொல்லுங்க அண்ணி.
சாரா: இப்ப வந்துட்டு போனாலே இவள் ஒரு சரியான நடத்தை கெட்டவ. இவளோட பேச்சும் சரி, நடத்தையும் சரி, எதுவுமே சரியில்லை. ஏற்கனவே இவளுக்கு 5 பேரோட கல்யாணம் ஆயிருந்துச்சு. இப்ப ஆறாவதா இன்னொருத்தரோட கல்யாணம் கூட பண்ணாம சேர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கா.
ரூபா: அய்யய்யோ, அடப்பாவமே. கேட்கவே காது கூசுது.
சாரா: அதனாலதான் இவளோட யாருமே இந்த ஊருல பேச்சு வார்த்தை வச்சுக்கிருது இல்ல.
ரூபா: ஓ, அதனாலதான் நம்ம வீட்டுல இருக்கிற தண்ணியக் கூட நீங்க அவளுக்கு கொடுக்க மாட்டேனு சொன்னீங்களோ!
சாரா: ஆமாம். நீ சரியாச் சொன்ன. அவ கூட நீயும் கொடுக்கல் வாங்கல எதுவும் வச்சுக்காத. அவ கிட்ட பேசும் போது கூட எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.
ரூபா: ம்ம்… சரிங்க அண்ணி
சாரா: சரி வா. சாப்பாட்டுக்கு நேரம் ஆகுது. நாம போயி ரொட்டி சுடுவோம்.
காட்சி – 2
(தண்ணீர் எடுக்க கிணற்றுக்குச் செல்லுதல்)
இடம்: கிணற்றடி
பங்கு பெறுவோர்: இயேசு, சீடர்கள், சமாரியப் பெண்
பேதுரு: அய்யோ, என்னா வெயிலு, என்னா வெயிலு.
யோவான்: ஆமாம் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு.
பிலிப்பு: எனக்கு பசிக்கவே ஆரம்பிச்சுடுச்சு
பேதுரு: இன்னும் நாம ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு. எப்படியும் ஏதாவது சாப்பிட்டாதான் இனிமே நம்மளால நடக்கவே முடியும்.
இயேசு: யூதாஸ், பணப்பை உன்னிடம் தானே இருக்கிறது. ஊருக்குள் சென்று இவர்கள் உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொடு.
யூதாஸ்: அப்படியே செய்கிறேன் போதகரே. அதோடு உங்களுக்கும் உணவை கையோடு வாங்கி வந்து விடுகிறோம்.
இயேசு: சரி. நீங்கள் போய் வாருங்கள். நான் இங்கு சற்று இளைப்பாறுகிறேன்.
யூதாஸ்: நண்பர்களே, எல்லாரும் வாங்க போகலாம்.
(இயேசு மட்டும் தனியே கிணற்றடியில் அமர்ந்திருத்தல்)
ச.பெ: அங்க யாரோ ஒரு ஆள் கிணத்தடியில உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு. ம்ம்.. பார்க்குறதுக்கு ஒரு யூதர் மாதிரில்ல தெரியுது. சரி, யாரா இருந்தா என்ன? நாம இப்ப சீக்கிரமா தண்ணி எடுத்துகிட்டு வீட்டுக்குப் போயாகணும்.
(கிணற்றுக்கு அருகே போதல்)
இயேசு: அம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுப்பாயா?
ச.பெ: (மேலும் கீழும் பார்த்துவிட்டு) ஐயா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்னப் பார்த்தால் என்ன மாதிரி தெரியுது? நீர் ஒரு யூதர். நான் ஒரு சமாரியப் பெண். நீங்கள் என்னிடம் தண்ணீர் கேட்பது முறையாகுமா?
இயேசு: அதனால் என்ன? நான் தாகத்தோடு இருக்கிறேன். உன்னிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டேன். அவ்வளவு தான்.
ச.பெ: என்ன பேசுகிறீர் என்று தெரிந்துதான் பேசுகிறீரா? யூதர்கள் எவரும் சமாரியராகிய எங்களோடு பழகுவது இல்லை என்பது நீர் அறியாத வி~யமா? நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களைக் கூட யூதர்களாகிய நீங்கள் பயன்படுத்த விரும்புவதில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?
இயேசு: கடவுளுடைய கொடை எது என்பதையும், குடிக்கத் தண்ணீர் கேட்கும் நான் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். நானும் உனக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்.
ச.பெ: ஐயா, என்ன விளையாடுகிறீரா? இப்படி கொஞ்சம் வாங்க. கிணத்த பாத்தீங்களா? எவ்வளவு ஆழமா இருக்குன்னு தெரியுதா? கிணத்துல இருந்து தண்ணீர் மொள்ள உங்ககிட்ட கயிறும் இல்ல, குடமும் இல்ல. இதுல நீங்க எனக்கு வாழ்வு தரும் தண்ணீர் தரப் போறீங்களா?
இயேசு: அம்மா, என்னால் கண்டிப்பாக வாழ்வு தரும் தண்ணீரை உனக்கு கொடுக்க முடியும்.
ச.பெ: இங்க பாருங்க. இந்த கிணற்றை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்த கிணற்றை வெட்டுனவர் எங்க தந்தை யாக்கோபு. அவரு, அவரோட பிள்ளைகள், கால்நடைகள் எல்லாம் இந்த கிணற்றுல இருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம். நீங்க என்ன, எங்க தந்தை யாக்கோபை விட பெரியவருன்னு நினைப்போ?
இயேசு: இந்த கிணத்து தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது.
ச.பெ: உண்மையாகவா சொல்றீங்க? அது எப்படி தாகம் வராம இருக்கும்?
இயேசு: நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்.
ச.பெ: ஐயா, அப்படின்னா, அந்த தண்ணீரை எனக்கும் தாங்க. அப்ப தான் எனக்கும் தாகம் வராமல் இருக்கும். தண்ணீர் மொள்ள இவ்வளவு தூரம் நான் இங்க வர்றதுக்கு அவசியமும் இருக்காது.
இயேசு: சரி, நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வா.
ச.பெ: (வருத்தத்தோடு) இல்லை ஐயா. எனக்கு. . . . கணவர் இல்லை.
இயேசு: ஆம் பெண்ணே, உனக்கு கணவர் இல்லை என்று நீர் சொல்வது சரிதான். முன்பு உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது உம்முடன் இருப்பவர்கூட உம் கணவர் இல்லை. நீ உண்மையைத் தான் சொல்லியிருக்கின்றாய்.
ச.பெ: (அழுதவாறு) ஐயா நீர் ஓர் இறைவாக்கினர். ஆம் சந்தேகமே இல்லை. நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். (காலில் விழுதல்)
இயேசு: பெண்ணே, எழுந்திரு. கடவுள் தன்னை உனக்கு வெளிப்படுத்தும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை.
ச.பெ: கடவுளின் வெளிப்பாடா.. எனக்கு கிடைக்குமா. ரொம்ப சந்தோசம். ரபி, இதோ தெரிகிறதே இந்த கெரிசிம் மலை. இந்த மலையில் தான் எங்கள் முன்னோர் வழிபட்டு வந்தனர். நாங்களும் இங்கே தான் கடவுளுக்கு வழிபாடு செய்கிறோம். ஆனால் யூதர்களாகிய நீங்களோ கடவுளை எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்று சொல்கிறீர்களே?
இயேசு: அம்மா என்னை நம்பும். ஒரு காலம் வரும். அப்போது தந்தையாம் கடவுளை நீங்கள் இந்த கெரிசிம் மலையிலும் வழிபடமாட்டீர்கள். எருசலேம் மலையிலும் வழிபடமாட்டீர்கள். இப்போது யாரை வழிபடுகின்றீர்கள் என்றே தெரியாமல் நீங்கள் வழிபடுகின்றீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகின்றோம்.
ச.பெ: பிறகு கடவுளை எப்படித்தான் வழிபட வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
இயேசு: பெண்ணே, நீ ஒன்றை நிச்சயமாகப் புரிந்துகொள்ள வேண்டும். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது. ஏன், வந்தேவிட்டது. அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.
ச.பெ: ஐயா, கடவுளை உள்ளத்தில் வழிபட வேண்டும் என்கிறீர்கள். அப்படின்னா என்ன?
இயேசு: கடவுள் உருவம் அற்றவராக இருக்கிறார். எனவே அவரை வழிபடுவோர் அவருடைய உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும். தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகையோராக இருக்க வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.
ச.பெ: போதகரே, நீர் சொல்வது சரியே. கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என்று எனக்குத் தெரியும். அவர் வருகிறபோது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்.
இயேசு: (நிதானமாக) அம்மா, உம்மோடு பேசும் நானே அவர்.
ச.பெ: (பதட்டத்துடன்) என்ன சொன்னீர். . . . . . மெசியாவா? நீரா?
இயேசு: ஆம் நானே வரவிருக்கின்ற மெசியா.
ச.பெ: (இயேசுவின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு) ஆனந்தம். ஆம், எனக்கு பேரானந்தம். பாhத்துவிட்டேன், மெசியாவை என் கண்களால் பார்த்துவிட்டேன். என் பிறப்பின் பயனை அடைந்துவிட்டேன். இது போதும். (குடத்தை கீழே போட்டுவிட்டு) ஐயா இங்கேயே இருங்கள். எங்கும் போய்விடாதீர்கள். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வந்துவிடுகிறேன். (ஊருக்குள் ஓடுதல்) கண்டுகொண்டேன். நான் மெசியாவை கண்டு கொண்டேன்.
காட்சி -3
(உணவுடன் சீடர்கள் இயேசுவிடம் திரும்புதல்)
இடம்: கிணற்றடி
பங்கு பெறுவோர்: இயேசு, சீடர்கள்
யூதாஸ்: எல்லாரும் நன்றாக வயிறு நிறைய சாப்பிட்டீர்களா?
பேதுரு: சாப்பிட்டோம். இனி கலிலேயாவுக்கு போகிறவரை எல்லாரும் தெம்பாக நடக்க முடியும்.
யூதாஸ்: ஆனால் எனக்கு சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. காரணம் பணப்பையில் இப்போது வெறும் இரண்டு தெனாரியங்கள் மடடும் தான் இருக்கு.
யோவான்: யூதாஸ், எப்பப்பாரு பணம், பணம்னு பேசுற. உன் இதயம் கூட பணம் பணம்னு தான் துடிக்குமோ?
பேதுரு: அட பணமாம் பெரிய பணம். அத விடுங்க. அங்க பாருங்க நம்ம போதகர் எவ்வளவு களைப்பா உட்கார்ந்துருக்கார். அவருக்கு வாங்குன அப்பம் யாருகிட்ட இருக்கு?
பிலிப்பு: அந்த அப்பம் என்கிட்டதான் இருக்கு. நானே போதகர்கிட்ட கொடுக்கிறேன்.
(எல்லோரும் இயேசுவுக்கு அருகில் செல்லுதல்)
யோவான்: ரபி, நீங்க ரொம்ப களைப்பா இருக்குற மாதிரி தெரியுது.
பிலிப்பு: ஆமாம் போதகரே. இந்தாங்க. (அப்பத்தை நீட்டுதல்) இந்த அப்பத்தை நாங்க உங்களுக்காகத்தான் வாங்கிட்டு வந்தோம். இத சாப்பிடுங்க. வெயில் கொஞ்சம் குறைஞ்ச பிறகு நாம கலிலேயாவுக்கு நடக்க ஆரம்பிக்கலாம்.
இயேசு: எனக்கு அப்பம் வேண்டாம் நண்பர்களே. நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது.
யோவான்: பேதுரு, போதகர், ஏன் அப்பத்தை வேண்டாம் என்று சொல்கிறார்? என்ன காரணமாக இருக்கும்?
பேதுரு: ஒரு வேளை யாரேனும் அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?
பிலிப்பு: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். யூதாஸ் நீர் என்ன சொல்கிறீர்?
யூதாஸ்: போதகர் வேணாம்னு சொல்லிட்டார். ஆனா இந்த அப்பம் இப்போது வீணாகப் போகுதே. பேசமா வாங்காமல் இருந்திருந்தா அந்த பணமாவது மிச்சமாக இருந்திருக்கும்.
பேதுரு: யூதாஸ், நீ மீண்டும் பணம், பணம் என்று புலம்பத் தொடங்கிவிட்டாயா?
யோவான்: சற்று அமைதியாக இருங்கள். நான் போதகரிடம் பேசுகிறேன். ரபி, யாரேனும் உங்களுக்கு உணவு தந்தார்களா? நாங்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டுவிட்டீர்களா?
இயேசு: என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே எனது உணவு.
காட்சி – 4
(சமாரியப்பெண் இயேசுவைப் பற்றி சமாரியரிடம் கூறுதல்)
இடம்: தெரு
பங்கு பெறுவோர்: சமாரியப் பெண், சாரா, ரூபி, ஆண் - 2
ச.பெ: எல்லாரும் இங்க வாங்க. உங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்லப் போறேன். (எல்லோரும் கூடுதல்)
ஆண்-1: பெண்ணே, இப்படி நில். ஏன் இப்படி கத்திக்கொண்டிருக்கிறாய்?
ச.பெ: ஐயா, நான் சொல்வதைக் கேட்டால் நீங்களும் கூட சந்தோசத்தில் என்னை விட சத்தமாக கத்துவீர்கள்.
ஆண்-2: எல்லோருக்கும் மகிழ்ச்சியான சேதின்னா ஒரு வேளை நம் பாலஸ்தீன நாடு உரோமானியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டதா?
ச.பெ: இல்லை அண்ணா, அதைவிட நல்ல சேதி.
சாரா: புதிர் போடாதே. உன்னைச் சுற்றி இவ்வளவு பேர் கூடி நிற்கிறோம். அப்படி என்னதான் நல்ல சேதி?
ரூபி: சீக்கிரம் சொல். அதை கேட்காவிட்டால் எனக்கு மண்டை வெடித்துவிடும் போல இருக்கிறது.
ஆண்-1: எல்லோரும் சற்று சத்தம் போடாமல் இருங்கள். பெண்ணே, சொல் அப்படி எல்லோரும் மகிழ்ச்சி அடையக்கூடிய நல்ல செய்தி தான் என்ன?
ச.பெ: நான்…. நான் மெசியாவைக் கண்டேன்.
ஆண்-1: என்ன சொல்கிறாய் நீ ?
ச.பெ: ஐயா, நான் உண்மையில் மெசியாவைக் கண்டேன்.
ஆண்-2: விளையாடாதே. எங்கள் எல்லோருக்கும் வேலை இல்லை என்று நினைத்தாயா?
சாரா: ஆமாம். இவளை இந்த சமாரியாவில் எவருமே மதிப்பதில்லை அல்லவா? அதனால் தான் இப்படி எல்லாம் எதையாவது உளறி ஊரையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க திட்டம் போடுகிறாள்.
ச.பெ: ஐயோ, இல்லை சாரா அக்கா. நான் உளறவில்லை. நான் பார்த்ததை சொல்கிறேன்.
ஆண்-1: பெண்ணே, கொஞ்சம் பொறு. மெசியாவின் வருகை எப்படி நடக்கும் என்று நம்முடைய திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதை நீ அறிந்திருக்கிறாய் அல்லவா? அப்படி மெசியாவின் வருகைக்கான எந்த அடையாளங்களும் ஏற்படவில்லை என்பது உனக்குப் புரிகிறதா?
ச.பெ: ஐயா, நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை. உண்மையைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஆண்-2: எந்த அடிப்படையில் நீ இதைச் சொல்கிறாய்?
ச.பெ: நான் செய்தவை அனைத்தையும் அவர் என்னிடம் சொன்னார். என் வாழ்க்கையின் இரகசியங்கள் அனைத்தும் அவருக்கு வெளிச்சமாயிருக்கிறது.
சாரா: உன்னுடைய வாழ்க்கையை உனக்கே சொன்னாரா. அதிசயமாக இருக்கிறதே.
ச.பெ: ஆம், அவர் முழுமையாகவே ஓர் அதிசயப்பிறவி தான். மறைபொருள்களை அனைத்தையும் அவர் எனக்கு தெளிவாகப் புரியும்படி கற்றுக்கொடுத்தார். அப்படி ஒரு போதனையை நான் இதுவரை கேட்டதே இல்லை.
ரூபி: அப்படியா, திருச்சட்டத்தை உனக்கு விளக்கி கற்பித்தாரா? எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றுகிறது.
ஆண்-1: நானும் கூட அவரைப் பார்க்க ஆசைப்படுகிறேன்.
சாரா: நானும் உங்களோடு வருகிறேன்.
ஆண்-2: இப்போது அவர் எங்கே இருக்கிறார்?
ச.பெ: நம் முது பெரும் தந்தை யாக்கோபின் கிணற்றுக்கு அருகேதான் அவர் இருக்கிறார்.
ஆண்-1: பிறகு என்ன வாருங்கள் நாமும் போய்ப பார்ப்போம்.
எல்லோரும் : நாங்களும் வருகிறோம்.
காட்சி – 5
(இயேசுவைப் பார்க்க சமாரியர் அனைவரும் வருதல்)
இடம்: யாக்கோபின் கிணற்றடி
பங்கு பெறுவோர்: இயேசு, சமாரியப் பெண், சீடர்கள், மக்கள்
ச.பெ: அதோ, அங்கே கிணற்றின் ஓரமாக ஒருவர் அமர்ந்திருக்கிறாறே. அவர் தான், நான் சொன்ன மெசியா.
இயேசு: ஏன் அங்கேயே நின்று விட்டீர்கள்? கடவுள் உங்களைத் தேடி வந்திருக்கிறார். இனி எதுவும் உங்களை கடவுளிடமிருந்து பிரிக்க முடியாது.
ஆண்-1: ரபி, சமாரியரோடு யூதர்கள் பழகுவதில்லை என்பது உமக்குத் தெரியும் தானே? அப்படி இருந்தும் . . . .
இயேசு: கடவுள் நம் எல்லோருக்கும் தந்தை. நாம் அனைவருமே அவருடைய பிள்ளைகள்.
ஆண்-2: போதகரே, உம் வார்த்தைகள் எங்கள் மனதிற்கு ஆறுதலாய் இருக்கின்றன.
சாரா: ரபி, நீங்கள் எங்கள் ஊருக்கு வருவீர்களா?
இயேசு: கண்டிப்பாக வருகிறேன்.
ரூபி: ரபி, நீங்கள் எங்களோடு இரண்டு நாட்கள் தங்கி, எங்களுக்கு நிறைய போதித்துவிட்டுதான் செல்ல வேண்டும்.
ச.பெ: ஆம் போதகரே, நீர் இப்போதே எங்களோடு எங்கள் ஊருக்கு வர வேண்டும்.
இயேசு: வாழ்வு தரும் நீரூற்றுகளிலிருந்து நீங்கள் நிச்சயமாக முகந்து கொள்வீர்கள்.
சாரா: உண்மையில் இவர் மீட்பர் தான்.
ஆண்-1: ஆமாம். இவர் மெசியாவே தான்.
ச.பெ: நான் தான் அப்போதே சொன்னேனே. இவர் மெசியாவாகத் தான் இருப்பாரென்று!
ஆண்-1: பெண்ணே, உம்முடைய பேச்சைக் கேட்டதால் அல்ல. நாங்களே இவருடைய பேச்சைக் கேட்டோம். எனவே இப்போது நம்புகிறோம். இவர் உண்மையிலேயே உலகின் மீட்பர் தான்.
ரூபி: ஆமாம், மெசியாவே தான்.
ஆண்-2: போதும் போதும் வாருங்கள். மெசியாவைக் கூட்டிக் கொண்டு நம் ஊருக்குள் போவோம்.
ச.பெ: கொஞ்சம் வழிவிடுங்கள். மெசியா முன்னே வருகிறார்.
இயேசு: சீடர்களே, என்னோடு வாருங்கள். சமாரியாவுக்குப் போவோம். இறைவனின் ஆட்சியை அங்கேயும் நாம் கட்டி எழுப்ப வேண்டும்.
சீடர்கள்: அப்படியே செய்வோம் போதகரே.
(பாடல் இசைத்து நடனம் ஆடி இயேசுவை ஊருக்கு அழைத்துச் செல்லுதல்)
-----------------