Thursday, 23 July 2020

விவிலியத் தழுவல் நாடகம் - 1


காணாமற்போன மகன் உவமை 

(லூக்கா 15: 11-32)



காட்சி -1
(சொத்தைப் பிரித்தல்)

இடம்: தந்தையின் வீடு
பங்கேற்பாளர்கள்: அப்பா, மூத்தவன், இளையவன்

(தந்தை தனியாக செபித்துவிட்டு வருதல்)

அப்பா: மூத்தவனே, எங்கப்பா இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட? 

மூத்தவன்: இல்லப்பா, நம்ம தோட்டத்தில இன்னக்கு கோதுமை விதைக்கனும். அதனால நான் கொஞ்சம் சீக்கிரமா போக வேண்டியிருக்;கு. நீங்க சாப்பிட்டு நல்லா ஓய்வெடுங்க. 

அப்பா: நம் ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளுமானவர் உன்னுடைய உழைப்பை நிச்சயமா ஆசிர்வதிப்பார், நீ நல்லபடியா போய்ட்டு வா.

(சிறிது நேரம் கழித்து)

இளையவன்: அப்பா நான் ….உங்கிட்ட… கொஞ்சம் பேசனும்.…

அப்பா: இளையவனே, என்கிட்ட பேச உனக்கு என்னப்பா தயக்கம். என்னவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லுப்பா.

இளையவன்: அப்பா, உங்க எல்லோரடவும் இந்த வீட்ல இருக்க எனக்கு விருப்பமில்ல. நான் தனியா என் விருப்பப்படி வாழனும்னு ஆசப்படுறேன். அதனால சொத்துல என்னோட பங்க எனக்கு பிரிச்சு கொடுத்திடுங்க. 

அப்பா: என்னப்பா இது, நீ என்ன பேசுறனு யோசிச்சு தான் பேசுறியா?

இளையவன்: ரொம்ப நாளா நான் யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். தயவு செய்து என் மனச மாத்த நீங்க முயற்சிக்காம, நான் கேட்டபடி எனக்குரிய பங்கினை எனக்கு பிரிச்சு கொடுக்கிற வழிய பாருங்க. 

அப்பா: இல்ல, எதுக்கும் உங்க அண்ணன் வரட்டும் ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாம். 

இளையவன்: இல்லப்பா, எதுக்கு அண்ணன்கிட்ட எல்லாம் கேட்கனும். நான் என் பங்கைத்தான கேட்கிறேன். என்னால காத்திருக்க முடியாது. 

அப்பா: நம்ம குடும்பம் இந்த ஊருல ரொம்ப மதிப்போட இருக்கிற குடும்பம். உனக்கு என்ன வேனாலும் கேளுப்பா. நான் செய்றேன். ஆனா சொத்த மட்டும் பிரிக்க வேணாமே. 

இளையவன்: எப்ப இருந்தாலும் அது எனக்கு தான சேரப்போகுது. அத இப்பவே கொடுத்திடுங்க. என் வாழ்க்கைய எப்படி பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும். 

அப்பா: கடவுளே, நான் உயிரோடு இருக்கிறபோதே என் இளைய மகன் சொத்தை பிரித்து தர கேட்கிறானே. நான் என்ன செய்வேன்?

இளையவன்: அப்பா, சட்டப்படி சொத்தில் என்னுடைய பங்கைக் கேட்டு பெற்றுக் கொள்கிற வயது எனக்கு இருக்கிறது. எனவே நீங்கள் மறுப்பு சொல்ல முடியாது. சொத்தைப் பிரித்துக் கொடுக்கிற வழியை மட்டும் பாருங்கள்.

அப்பா:  ஆண்டவரே, உம்முடைய திருவுளம் இதுதான் என்றால் அப்படியே நடக்கட்டும். மகனே, இதோ உன்னுடைய பங்கு. எடுத்துக்கொள். இஸ்ரயேலின் கடவுள் நீ எங்கிருந்தாலும் உன்னை காத்து வழிநடத்துவாராக. 
(இளையவன் சொத்தை பெற்று மகிழ்வோடு வெளியேறுதல்)

காட்சி -2
(சொத்தை விற்று செலவழித்தல்)

இடம்: கேளிக்கை விடுதி
பங்கேற்பாளர்கள்: இளையவன், நண்பன் 1, நண்பன் 2, பணியாளர், சூதாட்டக்காரன்

இளையவன்: நண்பர்களே, வாருங்கள். என்னிடம் கை நிறைய பணம் இருக்கிறது. மகிழ்ச்சியாய் செலவு செய்வோம்.

நண்பன்1 :  டே, அதோ ஒரு கேளிக்கை விடுதி தெரிகிறது பார். அங்கே போவோம். வாழ்க்கையில் இனி நாம் அனுபவிக்காத மகிழ்ச்சி என்று எதுவும் இருக்க கூடாது.

நண்பன்2 :  சரியாக சொன்னாய். இனி நம்மைப் பார்த்து இதை செய்யாதே, அதை செய்யாதே என்று சொல்வதற்கு யாரும் இல்ல.

இளையவன்: ஆமாம் நம் வாழ்க்கையில் இனி நம் விருப்பம் மட்டும்தான். நம் இஷ்டப்படி வாழ்வோம். சந்தோசம் நம் கைகளில் இருக்கிறது.

நண்பன்2 : இந்த விடுதியில் சூதாட்டம் பெயர் போனது  என்று கேள்வி பட்டிருக்கிறேன். வாருங்கள். அதையும் ஒருகை பார்த்துவிட்டு வருவோம். 

நண்பன்1 :  பேசிக்கொண்டே இருக்காமல் உள்ளே செல்வோம். எல்லா வகையிலும் வாழ்க்கையில் இனி இன்பம் அடைவோம். 

(விடுதிக்குள் சென்று மேசையில் அமர்தல்)

இளையவன்: பணியாளரே, எங்களுக்கு இருப்பதிலே விலை உயர்ந்த மதுவைப் பரிமாறு.

பணியாளர்: சரி அய்யா. 

(மதுக்கோப்பையை பெற்றுக் கொள்தல்)

சூதாட்டக்காரன்: இதோ அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீட்டின் கதவை தட்டுகிறாள். நீங்கள் குறைந்த தொகையை கட்டினால் போதும். நீங்கள் ஜெயித்தால் நீங்கள் எவ்வளவு கட்டுகிறீர்களோ அது நான்கு மடங்காக கொடுக்கப்படும்.  சுலபமாக பணக்காரனாக இது உங்களுக்கான வாய்ப்பு. வாங்க.. ஓடி வாங்க. 

நண்பன்1 :  நண்பா, இதோ சூதாட்டம் தொடங்கிவிட்டது. வாங்க. நாமும் சேர்ந்து கொள்வோம்.

இளையவன்: எவ்வளவு வேண்டுமானாலும் நான் பந்தயம் கட்டுகிறேன். இதெல்லாம் விளையாடும்போதுதான் நமக்கு சுவாரசியம் வரும்.

நண்பன்2 :  சரியாகச் சொன்னாய். வாழ்க்கையில் சுவாரசியம் சூதாட்டத்தில் தான் பிறக்கிறது. வா விளையாடித்தான் பார்ப்போம். 

(இசை)

(மயக்கம் - நண்பர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிடுதல்)

இளையவன்: ம்ம்… அய்யோ.. என்ன இது. நான் என்ன கோலத்தில் மயங்கி கிடக்கிறேன். எங்குபோனது என்னுடைய கைப்பை.. அய்யோ என்னுடைய நண்பர்களையும் காணோமே. இருந்த மீதி செல்வத்தை சுருட்டிக்கொண்டு அவர்கள் ஓடிப்போனார்களோ? என்ன செய்வேன் நான்? பசி வேறு வாட்டுகிறதே. என்ன கொடுமை இது? ஏதாவது பிழைப்பு தேடிப்போவது தான் சரி.

காட்சி -3
(வேலை தேடி போதல்)

இடம்: பண்ணை வீடு
பங்கேற்பாளர்கள்: இளையவன், முதலாளி, பன்றிகள்

இளையவன்: அய்யா… நான் சாப்பிட்டு நான்க நாள்கள் ஆகிவிட்டது. எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா?

முதலாளி: இல்லை. நாடே பஞ்சத்தில் இருக்கிறது. இங்கு வேலை எல்லாம் எதுவும் இல்லை. 

இளையவன்: அப்படி சொல்லாதீர்கள் அய்யா. உங்களைவிட்டால் எனக்கு யாருமில்லை. நீங்கள் என்ன வேலை கொடுத்தாலும் நான் தட்டாமல் செய்வேன். 

முதலாளி: சரி. நீ இவ்வளவு கெஞ்சி கேட்பதால்; உனக்கு என்னுடைய பண்ணையில் பன்றிகளை மேய்கின்ற வேலையை கொடுக்கிறேன். ஒழுங்காக நடந்துகொள். 

இளையவன்: ரொம்ப நன்றி அய்யா. 

முதலாளி: இதோ ஒரு ரொட்டித் துண்டு. இதை நீ சாப்பிட்டுவிட்டு பன்றிகளை கவனித்துக்கொள். அந்த பன்றிகளுக்கான தொழுவத்திலே ஒரு ஓரத்தில் நீயும் தங்கிக்கொள்ளலாம். 

இளையவன்: சரிங்க அய்யா. அப்படியே செய்கிறேன். 

(தனிமையில்)

இளையவன்: தினமும் ஒரு வேளைக்கு சாப்பிட ஒரு ரொட்டி தானா.. என்ன செய்ய. சரி சாப்பிடலாம். ..அய்யோ.. நாற்றம் அடிக்கிறதே. இது பழையதாவும் கெட்டுப்போனதாகவும் இருக்குமோ. ஆனால் வேறு வழியில்லை. இதை சாப்பிடாவிட்டால் பட்டினியால் செத்துப்போகத்தான் வேண்டும். (சாப்பிட்டு முடித்தல்) அய்யோ இன்னும் பசியாய் இருக்கிறது. அதோ அங்கே பன்றிகளுக்கு வைக்கப்ட்ட நெற்றுகளில் கொஞ்சம் மீதி இருக்கிறது. அதையாவது சாப்பிட்டு பசியை அடக்கலாம். 

முதலாளி: அடே, மாடு மாதிரி வளர்ந்திருக்கியே. உனக்கு அறிவில்லையா.  உனக்கு தான் வேளாவேளை ரொட்டி கொடுக்கிறேனே. அதுபோதாதென்றா பன்றிகளுக்கு வைக்கிற உணவையும் திருடுகிறாய். இனி உனக்கு இங்கு வேலை இல்லை.  வெளியே போ. 
இளையவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். இனி இப்படி செய்ய மாட்டேன். 

முதலாளி: இல்லை. உன்னைவிட எனக்கு என்னுடைய பன்றிகள் முக்கியம். நீ மரியாதையாக உடனே இந்த இடத்தை காலி செய். 

(தனியாக அமர்ந்து சிந்தித்தல்)

இளையவன்: என்னுடைய அப்பாவோடு நான் இருந்த போது அறுசுவை உணவை மட்டுமே சாப்பிட்டேன். அங்கு எனக்கு வேலை செய்ய எத்தனை வேலை ஆட்கள் உண்டு. அப்பாவின் வீட்டில் எனக்கு நேரத்திற்கு உணவு, நாளுக்கொரு உடை, குறைவில்லாத பாசம். ஆனால் இன்றைக்கோ எல்லாரும் இருந்தும் நான் அனாதையாய் நிற்கிறேனே. எனக்கென்று யாருமில்லையே. என் தந்தையில் வீட்டில் வேலை செய்வோருக்குகூட தேவைக்கு அதிகமாய் உணவு உண்டே. ஆனால் நானோ இங்கு பசியால் சாகிறேனே. 
ஆம். நான் தவறு செய்துவிட்டேன். இனி கொஞ்சமும் காலம் தாழ்த்த மாட்டேன். என் தந்தையின் போகப்போகிறேன். அவரின் காலில் விழுந்து ‘ அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்துவிட்டேன். இனிமேல் உம்முடைய மகன் என்று சொல்லிக்கொள்கிற அருகதை எனக்கில்லை. என்னை உம்முடைய வேலையாட்களுள் ஒருவனாக வைத்துக்கொள்ளும்’ என்று சொல்லுவேன்’. ஆம். என்ன ஆனாலும் சரி, உடனே என் தந்தையிடம் நான் திரும்பிப் போகப்போகிறேன். 

காட்சி -4
(தந்தையின் வீட்டுக்குத் திரும்புதல்)

இடம்: தந்தையின் வீடு
பங்கேற்பாளர்கள்: அப்பா, இளையவன், மூத்தவன், பணியாளர்கள்

பணியாளர்: அய்யா, எவ்வளவு நாள்களுத்தான் நீங்கள் இப்படி வாசலையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். வாருங்கள். உள்ளே வந்து சாப்பிடுங்கள்.
அப்பா: இல்லை. ஒருநாள் என் சின்ன மகன் என்னைத்தேடி கண்டிப்பாக வருவான். அப்போது நான் அவனை வரவேற்க வாசலிலே இருக்க வேண்டும். அவன் வரும்போது ஒருவேளை நான் அவனை கவனிக்க மறந்துபோனால், அவன் மீது நான் வெறுப்பாய் இருப்பதாய் நினைத்து திரும்பிப் போய்விடக்கூடும்.  அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். நீ போ. நான் பிறகு வருகிறேன். 

(சிறிது நேரத்தில்)

அப்பா: அதோ தூரத்தில் யாரோ வருவது போலத் தெரிகிறது, நிச்சயம் அது என் இளைய மகனாகத்தான் இருக்கும். (வாசலுக்கு ஓடுதல்)

(கட்டித் தழுவி முத்தமிடுதல்)

என் அன்பு மகனே, என் உயிரே, என்ன கோலமடா இது. உன்னைக் காணாமல் நான் தவிதவித்துப்போனேனே. என் செல்லமே, இவ்வளவு நாள் இந்த அப்பாவை தவிக்கவைத்து விட்டு எங்கு போனாயடா?  

இளையவன்: அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் கடவுளுக்கும் உங்களுக்கும் எதிராக பாவம் செய்துவிட்டேன். இனிமேல் உங்களுடைய மகன் என்று சொல்லிக்கொள்கின்ற தகுதி எனக்கு இல்லை. என்னை மன்னியுங்கள் அப்பா. 

அப்பா: என் ஆசை மகனே நீ அழாதேயடா. நீ கண்ணீர் சிந்துவதைப் பார்க்கவா இத்தனை நாள் உன் தந்தை உனக்காக காத்துக்கிடந்தேன். போதும் பழையதை மறந்துவிடு. போனது போகட்டும். 

பணியாளர்களே… சீக்கிரம் வாருங்கள். இதோ என் இளைய மகன் வந்திருக்கிறான். முதல் தரமான ஆடையால் இவனை உடுத்துங்கள். நீ போய், பெட்டியிலிருந்து தங்க மோதிரத்தை கொண்டு வந்து என் பிள்ளைக்கு அணிவி. நீ ஏன் நின்று கொண்டிருக்கிறாய் ஓடிப்போய் காலுக்கு நல்ல மதியடியை எடுத்துக்கொண்டுவா. நீ சீக்கிரம் போ. கொழுத்த கன்றாகப் பார்த்து அடித்து விருந்து சமையுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாட வேண்டும். என் மகன் இறந்துபோயிருந்தான். மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமல் போயிருந்தான். மீண்டும் கிடைத்துள்ளான். 

(விருந்து நடை பெறுதல்)

மூத்தவன்: என்ன இது. நம்முடைய வீட்டில் தோரணங்கள் தொங்குகின்றன. இசையின் சத்தம் கேட்கிறது. என்னவாக இருக்கும்?

(பணியாளரை அழைத்து) எதற்கு இத்தனை விஷேசம் எல்லாம்.. என்ன நடக்கிறது நம்முடைய வீட்டில்? 

பணியாளர்: அய்யா உங்க தம்பி இன்னக்கு வீட்டுக்கு வந்திருக்கிறாரு. அத தான் நம்ம பெரிய அய்யா கொழுத்த கன்றை அடித்து விருந்து எல்லாம் வைத்து இவ்வளவு மகிழ்ச்சியா கொண்டாடனும்னு சொல்லிட்டாரு. சரி வாங்க நாம வீட்டுக்குள்ள போயி பேசுவோம். 

மூத்தவன்: என்னது.. சொத்த பிரிச்சுக்கிட்டு போனவன் திரும்ப வீட்டுக்கு வருவான் ..அதுக்கு இப்படி தடபுடலா விருந்தா… ம்… நீ போ.. (வெளியிலே நின்று விடுதல்)

பணியாளர்: சரிங்கய்யா..

(உள்ளே)

பணியாளர்: அய்யா, விருந்தெல்லாம் தயாராக இருக்கிறது. முதல் பந்தியும் தொடங்கப்பட்டுவிட்டது. 

அப்பா: மிக்க மகிழ்ச்சி… ஆனால் இவ்வளவு நேரம் ஆகியும் இன்று இன்னும் பெரியவன் வீட்டுக்கு வரலயே. நீ ஏதும் செய்தி அறிவாயா?

பணியாளர்: அய்யா, அவர் அப்போதே வந்துவிட்டார். வாசலில் நான் அவரைப் பார்த்தேனே.

அப்பா: ஆனால் வந்தவன் இன்னும் ஏன் வீட்டுக்குள் வரவில்லை.. சரி நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். 

(வெளியே வந்து)

அப்பா: மூத்தவனே, என்னப்பா ஏதோ மூணாவது மனுசனப்போல இப்படி வீட்டுக்கு வெளியிலேயே நிற்கிறாயே..

மூத்தவன்: அப்பா… நீங்கள் செய்வதில் எனக்கு துளியும் இ~;டமில்லை. ஊதாரியாய் ஊர் சுற்றியவனுக்கு இதெல்லாம் அவசியமா?

அப்பா: என்னதான் இருந்தாலும் அவன் எனக்கு மகனல்லவா… உனக்கும் தம்பி தானே. இப்போது நாமே அவனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எப்படி? திருந்தியும் திரும்பியும் வருகிற போது மன்னித்து ஏற்றுக்கொள்வதுதானே நம்முடைய யாவே இறைவனின் இரக்க குணம். நாமும் அப்படித்தானே இருக்க வேண்டும். 

மூத்தவன்: அப்பா, நீங்கள் என்ன சொன்னாலும் சரி என்னுடைய மனம் சமாதானம் அடையாது. இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போல உமக்கும், இந்த வீட்டுக்கும் வேலை செய்தேனே. உம் பேச்சை என்றைக்காவது நான் மீறியிருக்கிறேனா? ஆனால் நீர் என்றைக்காவது நான் என் நண்பர்களோடு மகிழ்ந்து விருந்துகொண்டாட,  ஓர் ஆட்டுக் குட்டியையாவது கொடுத்திருக்கிறீரா, இல்லையே. ஆனால் பாரும். விலை மகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட உம்முடைய மகன் இன்று திரும்பி வந்தவுடனே, இவனுக்காக நீர் கொழுத்த கன்றை அல்லவா அடித்திருக்கிறீர்? 

அப்பா: மூத்தவனே, நீயே இப்படி பேசலாமா? நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்கு உரியதெல்லாம் உனக்கும் உரியதுதானே. அது உனக்கு விளங்கவில்லையா? ஆனால் இன்று நாம் உண்மையில் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனென்றால் உன் தம்பி இவன் இத்தனை நாள் இறந்துபோயிருந்தான். மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமல் போயிருந்தான், மீண்டும் கிடைத்துள்ளான். வா.. எதையும் நினைத்து குழப்பிக் கொள்ளாதே. இறைவன் நமக்கு இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நாமும் இரக்ககமுள்ளவர்களாய் இருப்பது தானே முறை. சரி வா… உன் தம்பி உனக்காக காத்திருக்கிறான். . வா உள்ளே போவோம்.


--------------------