Wednesday, 22 July 2020

மூவொரு இறைவன் புகழ்


மூவொரு இறைவன் புகழ்





மூவொரு இறைவன் புகழ் என்னும் இச்செபம் நாம் மூவொரு கடவுளுக்கு நம்முடைய புகழ்ச்சியை செலுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எனவும், அவருக்கு நாம் செலுத்தும் மாட்சியும் எக்காலத்துக்கும் உரியது எனவும் இச்செபம் பறைசாற்றுகிறது. மூவொரு இறைவன் புகழ் என்னும் இச்செபமானது ‘சிறிய புகழ்ப்பா’ என்றும், வானவர் கீதம் ‘பெரிய புகழ்ப்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. 

தோற்றம்

மூவொரு கடவுளின் மாட்சிக்காக சொல்லப்படும் இச்செபம் தொடக்க காலத் திரு அவையிலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது. குறிப்பாக ஹிப்போலிட்டஸ் (கி.பி. 235) மற்றும் ஒரிஜன் (கி.பி. 231) ஆகிய திரு அவையின் தந்தையர்கள் இச்செபத்திலுள்ள வார்த்தைகளை ஒத்த வார்த்தைகளால் மூவொரு கடவுளை புகழ்ந்து செபித்திருக்கின்றனர் என்று திரு அவை வரலாறு கூறுகிறது. இப்போது நாம் செபிக்கும் இந்த மூவொரு இறைவன் புகழ் என்கிற செப வாய்பாடு கி.பி. நான்காம் நூற்றாண்டில் பரவிய ஆரிய தப்பறைக் கொள்கையின் எதிர்ப்பிலிருந்து உருவானதென அறிகிறோம். 

இறையியல் விளக்கம்

கத்தோலிக்க திரு அவையின் மிகவும் அடிப்படையானதும் முக்கியமானதுமான நம்பிக்கை கோட்பாடு மூவொரு கடவுள் கோட்பாடு ஆகும். கத்தோலிக்கர்களாகிய நாம் ஒரே கடவுளை நம்புகின்றோம். அவர் மூன்று ஆட்களாய் (தந்தை, மகன், தூய ஆவியார்) இருக்கின்றார். இதையே கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி ஏடு நமக்கு கற்பிக்கிறது. 

மூவொரு கடவுள் கோட்பாடு என்றால் என்ன?

கடவுள் ஒருவரே. அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூன்று ஆட்களாய் இருக்கிறார். இவர்களுக்குள் யாதொரு வேறுபாடுமின்றி ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. அதனை விளக்கும் மறைக்கோட்பாடே மூவொரு கடவுள் கோட்பாடு ஆகும். 


மீட்பின் வரலாற்றில் மூவொரு கடவுளின் செயல்கள்



தந்தை

மூவொரு இறைவனின் முதலாம் ஆள். பழைய ஏற்பாடு காட்டும் கடவுளின் முகம்.
இவர் அன்பும், நீதியும் உள்ளவர். நன்மைத்தனத்திற்கு ஊற்றானவர்.
உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர். படைப்பின் சிகரமாக மனிதரைப் படைத்தவர். 
படைப்புகள் அனைத்தையும் பராமரித்துக் காக்கிறவர்.
மனிதரை மீட்பதற்காக தம் ஒரே மகனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பியவர். 

மகன்

மூவொரு இறைவனின் இரண்டாம் ஆள். புதிய ஏற்பாடு காட்டும் கடவுளின் முகம்.
கடவுளின் ஒரே மகன். இவர் வழியாகவே அனைத்தும் உண்டாக்கப்பட்டன.
இவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதனாகப் பிறந்தார். பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப் போல் வாழ்ந்தார். 
இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு போதித்தார். மக்கள் மனந்திரும்பி தந்தையோடு ஒப்புரவாக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மனிதரைப் பாவத்திலிருந்து மீட்க பாடுகள் பட்டார். சிலுவையில் அறையுண்டு இறந்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 
வானகத்திற்கு எழுந்தருளிச் சென்று தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். இவர் மாட்சிமையின் ஆண்டவர். 

தூய ஆவியார்

இவர் மூவொரு கடவுளின் மூன்றாம் ஆள்.
படைப்பின்போதே செயல்பட்டவர். படைப்பை ஒழுங்குபடுத்தியவர்.
உலகிலுள்ள அனைத்தையும் புதுப்பிக்கிறவர். புதுப்படைப்பாக மாற்றுகிறவர்.
உறவை உருவாக்குபவர். ஒற்றுமையை வளர்ப்பவர்.
இயேசுவால் வாக்களிக்கப்பட்டவர். இவரே நம் துணையாளர். நம்மைத் தேற்றுபவர். உறுதிப்படுத்துபவர். நிறை உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துபவர். நமக்காகத் தந்தையிடம் பரிந்துபேசுபவர்.
திரு அவையை ஒன்றிணைப்பவர். அதைப் புனிதப்படுத்தி வழிநடத்துபவர்.

இச்செபத்திற்கு சிலுவை அடையாளம் வரையலாமா?

இச்செபத்தை செபிக்கும்போது நாம் சிலுவை அடையாளம் வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இது மூவொரு கடவுளுக்கு புகழ்ச்சியையும் மாட்சியையும் செலுத்தக்கூடியதாக இருப்பதால், இதைத் தலை வணங்கி செபிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். 

பயன்பாடு

இச்செபம் செபமாலை, திருப்புகழ்மாலை மற்றும் பல பக்தி முயற்சிகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.