புனித நீர் ( தீர்த்தம் )
பாரம்பரியமாக, நமது கத்தோலிக்க தேவாலயங்களின் நுழைவாயில்களுக்கு அருகில் புனித நீரின் (தீர்த்தம்) தொட்டிகளை வைத்திருக்கிறோம். இதன் பயன்பாடு பழைய ஏற்பாட்டின் யூத தூய்மைச் சடங்குகளின் நடைமுறைகளுக்கு ஒத்திருக்கிறது. லேவியர் புத்தகம் உடலோடு தொடர்புடைய “அசுத்தத்தை” அகற்ற, தண்ணீரைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான தூய்மைச் சடங்குகளை பரிந்துரைத்தது. (காண்: லேவியர் 12-15).
யூதர்களின் தூய்மைச் சடங்கில் மிகவும் முக்கியமான இருவகையான செயல்பாடுகள் இருந்தன. முதலாவதாக, தண்ணீரில் முழு உடலோடு முழ்கி எழுதல்: ‘அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும் அவனது தீட்டு அகலும்’. (லேவி 15:13). இரண்டாவதாக, கைகளைக் கழுவுதல்: ‘மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன். ஆண்டவரே உம் பலிபீடத்தை வலம் வருவேன்’. (திபா 26:6).
யூத மரபுகளின் பின்புலத்தில் பார்க்கையில் ஒரு நபர் ஆலயத்திற்குள் நுழைவதற்கும், இறைவேண்டல் மற்றும் தியாகம் செய்வதற்கும், சாப்பிடுவதற்கும் முன்பு தண்ணீரில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டார். இந்த காரணத்திற்காக, எருசலேம் ஆலயத்தில் குருக்களின் முற்றத்தில் ஒரு படுகை இருந்தது. அது தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு வெண்கலப் படுகை. இங்கேதான் குருக்கள் அருகிலுள்ள பலிபீடத்தில் பலியிடுவதற்கு முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் தூய்மைப்படுத்தினர். ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்பு குளித்தார்கள், யூதச் சடங்குகளில் பரிந்துரைக்கப்பட்ட பிற தூய்மைச் சடங்குகளுக்கு தேவையான தண்ணீரையும் அங்கிருந்தே எடுத்தார்கள்.
பாவத்திலிருந்து நாம் மனந்திரும்புதலின் அடையாளமாகவும், தீமையிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்காகவும், நம்முடைய திருமுழுக்கை நினைவூட்டுவதற்காகவும் ஆகிய முக்கியமான மூன்று காரணங்களுக்காக ஆலயங்களின் நுழைவாயிலில் புனித நீரால் நிரப்பப்பட்ட தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
1. மனந்திரும்புதலின் அடையாளம்
பாவத்திலிருந்து மனந்திரும்புதல் தண்ணீரால் கழுவப்படுவதோடு அடையாளப்படுத்தப்படுவதை திருப்பாடல் 51 பிரதிபலிக்கிறது: “கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும். நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும். உறைபனியிலும் வெண்மையாவேன்.” (திபா 51: 2-3,7). (ஈசோப் என்பது தண்ணீரைத் தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய புல் வகை).
இயேசுவின் காலத்தில் யோர்தான் ஆற்றில் புனித திருமுழுக்கு யோவான் வழங்கிய திருமுழுக்கு அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்தது. பாவத்திலிருந்து மனந்திரும்புதலையும், தூய்மைப்படுத்தப்படுதலையும் குறித்துக்காட்டுவதற்கான வெளி அடையாளச் சடங்காகவும் தண்ணீரால் கழுவப்படுவது அமைந்திருந்தது.
இந்த செயல்பாடுகள் நம்முடைய திருப்பலி கொண்டாட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருப்பலியின் தொடக்கத்தில் வரும் மனத்துயர் வழிபாட்டில், புனித நீருக்கு ஆசீர் வழங்குதல் மற்றும் இறை மக்கள் மீது புனித நீரைத் தெளித்தல் ஆகியவை இடம் பெறும். அருள்பணியாளர் புனித நீரை இறைமக்கள் மீது தெளித்தவாறு மக்களிடையே செல்லும்போது, அவர்கள் 51 ஆம் திருப்பாடலை பாடுவது வழக்கமாக இருக்கிறது. இப்பாடலைப் பாடுவதன் வழியாக இறைமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்புதலை அறிக்கையிடுகிறார்கள்.
2. பாதுகாப்பின் அடையாளம்
புனித நீர் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திருப்பலி நூலில் தண்ணீரை ஆசீர்வதிப்பதற்கான செபத்தில், அருள்பணியாளர் இவ்வாறு செபிக்கிறார்:
‘ஆண்டவரே எல்லாம் வல்ல இறைவா, உடல், ஆன்ம வாழ்வு அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமும் நீரே. இத்தண்ணீரைப் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் பாவங்களுக்;கு மன்னிப்பு வேண்டவும், எல்லா நோய்களையும் மாற்றானின் சூழ்ச்சிகளையும் எதிர்த்து உமது அருளின் பாதுகாப்பை அடையவும் நாங்கள் இத்தண்ணீரை நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றோம். ஆண்டவரே உமது இரக்கத்தின் உதவியால் உயிருள்ள தண்ணீர் எங்களில் பொங்கி எழுந்து மீட்பு அளிப்பதாக. இவ்வாறு நாங்கள் தூய இதயத்தோடு உம்மை அணுகிவந்து எங்கள் உடலுக்கும் ஆன்மாவுக்கும் வரும் இடர்கள் அனைத்தையும் விலக்குவோமாக’.
இவ்வாறு புனித நீர் ஆபத்துகள், தீமைகள் ஆகியவற்றிலிருந்து நம்மைக் பாதுகாக்கவும், காப்பாற்றவும் வல்லமை உடையதாக இருக்கிறது.
3. திருமுழுக்கின் நினைவூட்டல்
புனித நீர் நாம் பெற்ற திருமுழுக்கினை நமக்கு நினைவுபடுத்துகிறது. தூய்மைமிகு மூவொரு இறைவனாகிய தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரைச் சொல்லி அருள்பணியாளர் நம் தலையின் மீது தண்ணீர் ஊற்றும்போது பிறப்புநிலைப் பாவத்திலிருந்தும், செயல்வழிப் பாவங்களிலிருந்தும் நாம் விடுவிக்கப்படுகிறோம். புனிதமாக்கும் அருளால் தூண்டப்பட்டு, திரு அவையில் உறுப்பினராக இணைக்கப்படுகிறோம். கடவுளின் மகன் அல்லது மகள் என்கிற உரிமையைப் பெறுகிறோம்.
புனித நீரால் நம்மீது நாம் சிலுவையின் அடையாளத்தை வரையும் போது, அது நம்முடைய திருமுழுக்கை நினைவூட்டுகிறது. அத்தோடு சாத்தானையும், அவனுடைய எல்லா செயல்களையும், அவனுடைய வெற்று வாக்குறுதிகளையும் நிராகரிப்பதும், இறைவன் மீதான நமது நம்பிக்கையை அறிக்கையிடுவதுமான நம்முடைய திருமுழுக்கு வாக்குறுதிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்காக அழைக்கப்படுகிறோம் என்பதையும் இதன் வழியாக நினைவில் கொள்கிறோம். இதன்மூலம் நம்முடைய செபங்களையும் பலிகளையும் கடவுளுக்கு தூய்மையான மற்றும் நேர்மையான இதயங்களுடன் வழங்க முடியும்.
நம்முடைய ஆண்டவரின் திருவிலாவிலிருந்து தண்ணீரும் இரத்தமும் வழிந்தோடியது, திருமுழுக்கு மற்றும் நற்கருணை ஆகிய இருபெரும் அருளடையாளங்களைக் குறிக்கின்றது. இதனால் புனித நீரை எடுத்து நம்மீது சிலுவையின் அடையாளத்தை வரைந்துகொள்வது நமது திருமுழுக்கை நமக்கு நினைவுபடுத்தி, தூய்மைமிகு நற்கருணையைப் பெறுவதற்கு நம்மைத் தயாரிக்கிறது.
புனித அவிலா தெரசா தனது சுயசரிதையான ‘அவளுடைய வாழ்க்கை’ (தி புக் ஆஃப் ஹெர் லைப்) என்னும் புத்தகத்தில் புனித நீரின் சக்தியைப் பற்றி எழுதி உள்ளார்: “ஒரு முறை அருவருப்பான வடிவத்தில் பிசாசு என் இடது பக்கத்தில் எனக்குத் தோன்றினான். அவன் என்னிடம் பேசினான். அப்போது குறிப்பாக நான் அவனது வாயைப் பார்த்தேன். அது என்னை மிகவும் பயமுறுத்தியது. அவனது உடலில் இருந்து நிழல் இல்லாத பிரகாசமாக இருந்த ஒரு பெரிய தீச்சுடர் வெளிவந்தது. அவன் என்னை பயமுறுத்தும் விதத்தில் பேசியபடியே என்னைப் பிடித்தான். நான் அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்தேன், ஆனால் அவன் என்னை மீண்டும் அவனுடைய கைகளுக்குள்ளாக பிடித்துக்கொள்வான். நான் மிகுந்த அச்சத்தால் நடுங்கி, என்னால் முடிந்தவரை என்னை நானே ஆசீர்வதித்துக்கொண்டேன். அவன் மறைந்துவிட்டான். ஆனால் உடனே அவன் மீண்டும் திரும்பி வந்தான். இவ்வாறு இரண்டு முறை நடந்தது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அங்கே கொஞ்சம் புனித நீர் இருந்தது. நான் அதை அவன் நின்றிருந்த அந்த திசையில் தெளித்தேன்;. அவன் மீண்டும் திரும்பி வரவில்லை. ... பிசாசுகள் மீண்டும் திரும்பி வராமல் தப்பி ஓடுவது, புனித நீரைக் காட்டிலும் வேறொன்றுக்கும் இல்லை என்பதை நான் அடிக்கடி அனுபவிக்கிறேன்." (அவளுடைய வாழ்க்கை - அத்தியாயம் 31).
இந்த புனித நீரின் மாபெரும் சக்தியை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது. இத்தகைய ஒரு புனித துறவியின் சாட்சியத்தின் அடிப்படையில், நாம் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேறும்போது புனித நீரால் நம்மை ஆசீர்வதித்துக்கொள்வதோடு மட்டும் அல்லாமல், நம்முடைய வீடுகளிலும் புனித நீரை வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்வோம்.