Thursday, 16 July 2020

புனித கார்மேல் அன்னை


புனித கார்மேல் அன்னை விழா (ஜூலை -16)





ஜூலை 16, 1251 அன்று, புனித கார்மேல் அன்னை புனித சைமன் ஸ்டாக் எனும் கார்மேல் சபைத் துறவிக்கு காட்சியளித்து, அவருக்கு பழுப்பு நிற உத்திரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “மிகவும் அன்பான மகனே! இதைப் பெற்றுக்கொள். இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.” 

பழுப்பு நிற உத்திரியத்தின் ஒரு முனையில் ‘இந்த உத்திரியத்தை அணிந்து இறந்த எவரும் முடிவில்லா நெருப்பை அனுபவிக்க மாட்டார்கள்’ என்ற வார்த்தைகளும், மறுமுனையில் ‘இதோ மீட்பின் அடையாளம்’ என்ற வார்த்தைகளும் அதில் தைக்கப்பட்டுள்ளன. 

ஒரு பொது நிலையினர் பழுப்பு நிற உத்தரியத்தை அணியக்கூடிய நிபந்தனைகள் வேறுபடுகின்றன: ஒரு நபர் ஒரு கார்மேல் துறவற சபையின் மூன்றாம் அங்கத்தினராக வரிசை சேரலாம், அல்லது அவர்கள் முறையான குழுவில் சேராமல் பழுப்பு உத்தரியத்தின் பக்தி கூட்டமைப்பில் சேர்க்கப்படலாம். மேலும், ஒரு அருள்பணியாளரால் ஆசீர்வதிக்கப்பட்டால் எவரும் பழுப்பு நிற உத்தரியத்தை அணியலாம். ஒழுங்கின் முறைப்படி உறுதியளித்தாலும் இல்லாவிட்டாலும், உத்தரியம் அணிபவர்கள் கார்மேல் சபையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள்.

கடவுளின் மக்களில் எந்தவொரு உறுப்பினரும் கவனக்குறைவாக உத்தரியத்தை அணிவதை நினைத்துப் பார்க்க முடியாது. வெறுமனே, உண்மையான பக்தி இல்லாமல் உத்தரியத்தை கண்மூடித்தனமாக அணிவது, ஒருவன் படைவீரனுக்குரிய சீருடையை அணிந்துகொண்டு, அந்த சீருடைக்கு தேவைப்படும் நடத்தை நெறியை புறக்கணிப்பது போன்றது ஆகும். எனவே பழுப்பு நிற உத்தரியத்தை அணிபவர், உத்தரியத்துடன் தொடர்புடைய நேர்மையான கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

உத்திரியம் ஒருபோதும்; ஓர் அதிர்ஷ்டக் கயிறோ அல்லது மந்திரக் கயிறோ அல்ல. மாறாக, நாம் இறைவனுடைய தாயிடம் நெருங்கி வந்தால், அவர் அளிக்கும் சிறப்பு விண்ணக அருளுக்கு நம் இருதயங்களைத் திறந்து, பூமிக்குரிய பாவத்திலிருந்தும் சோதனையிலிருந்தும் அவளுடைய பாதுகாப்பிற்கு நம்மை ஒப்புக் கொடுத்தால் அது நம்முடைய இரட்சிப்பின் அடையாளமாக மாறும். ஆகவே உத்தரியம் மரியாவின் இடைவிடாத, தாய்க்குரிய பராமரிப்பின் வெளிப்புற அடையாளம். இது மரியன்னை பக்தி முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய அருட்கருவி.  

பக்தியுடன் பழுப்பு நிற உத்தரியத்தை அணிந்துகொண்டு, அதை நம் இருதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்வது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றவும், புனிதர்களின் வீர நல்லொழுக்கத்துடன் நாமும் வாழவும் நம்மைத் தூண்டுகிறது. மேலும் இது நற்பண்புகளின் மீதான நமது உறுதிப்பாட்டின் நிலையான நினைவூட்டலாகும் இருக்கிறது. 

பழுப்பு உத்தரியம் அன்னையின் இரக்கத்தின் உன்னத ஆடை. இது நம் விண்ணகத் தாயிடமிருந்து நமக்கு கிடைத்த பரிசு. ஆம், உத்தரியம் மரியாவின் அன்பு பரிசு. நம்மை அன்னையின் உன்னத பாதுகாப்பில் ஒப்படைத்து, நம் மீட்பின் உறுதியை அவள் கைகளில் நாம் தருகிறோம். 

புனித கன்னி மரியாவுக்கான உண்மையான இந்த பக்தி முயற்சியானது அவர் மீது நாம் கொண்டிருக்கும் மூன்று விடயங்களைக் கொண்டுள்ளது: வணக்கம், நம்பிக்கை மற்றும் அன்பு. உத்தரியத்தை அணிவதன் மூலம், நாளின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவளை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம் என்று அவளிடம் சொல்கிறோம்.

கடவுளை தந்தை என்று அழைக்க நம் ஆண்டவர் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தது போல, புனித கன்னி மரியா உத்தரியத்தின் மதிப்பை நமக்குக் கற்றுக் கொடுத்தார். நாம் அதை ஒரு அமைதியான செபமாகப் பயன்படுத்தும்போது, நம் அன்னை தனது தெய்வீக மகனின் புனித இருதயத்திற்கு நம்மை ஈர்க்கிறார். எனவே, உத்தரியத்தை கையில் பிடித்திருப்பது நல்லது. உத்தரியத்தை கையில் வைத்தவாறு செபிக்கப்படும் ஒரு செபம் சிறந்த செபமாகவே அமையும். குறிப்பாக சோதனையின் போது தான் கடவுளின் தாயின் சக்திவாய்ந்த பரிந்துரை நமக்கு அதிகமாகத் தேவை. உத்தரியம் அணிந்தவர், இந்த அமைதியான பக்தியில் தூய கன்னியை அழைத்தவாறு, சோதனையை எதிர்கொள்ளும்போது தீய ஆவி முற்றிலும் சக்தியற்றதாகிவிடுகிறது. 

‘நீ என்னுடைய பரிந்துரையை வேண்டியிருந்தால், நீ ஒருபோதும் அத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்க மாட்டாய்’ என்று அன்னையின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களில் ஒருவரான முத்திபேறுபெற்ற ஆலன் டி லா ரோச்சிற்கு நம் அன்னை கூறினார். 

No comments:

Post a Comment