கல்லறைப் பாடம் - 19
உத்தரியமும் உத்தரிக்கும் நிலையும்
பல பிரபலமான புனிதர்களும், பல்வேறு காட்சிகளில் புனித கன்னி மரியாவும் உத்தரிக்கும் நிலையில் துன்பப்படும் ஆன்மாக்களின் சார்பாக மன்றாடுபவர்களாக திரு அவையால் குறிப்பிடப்படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக கார்மல் அன்னை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பவராக உள்ளார்.
மணிமுடி சூட்டப்பட்ட கார்மல் அன்னை தம் கையில் ஒரு பழுப்பு நிற உத்தரியத்தை வைத்திருப்பார். இது கார்மல் சபைத் துறவியரின் சிறப்பு வாய்ந்த பக்தி ஆடைகளின் ஒரு வடிவம். இந்த உத்தரியம் பரிபூரணபலன்களைப் பெற்றிடவும் அதன் வழியாக மீட்கப்படவும் நமக்கு உதவக் கூடியதாக உள்ளது.
முதல் வாக்குறுதி
“இந்த உத்தரியத்தை அணிந்துகொண்டு பக்தியுடன் இறப்பவர், முடிவில்லா நரக நெருப்பிற்கு ஆளாகமாட்டார்".
(புனித சைமன் ஸ்டாக் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது)
இதுவே உத்தரியம் அணிவோருக்கு கார்மெல் அன்னை அளித்த முதலாவதும் நன்கு அறியப்பட்டதுமான வாக்குறுதிகளில் ஒன்றாகும். இறக்கும் நேரத்தில் உத்தரியத்தை அணிந்த எவரும் அன்னையின் தயவைப் பெறுவார்கள் என்று கத்தோலிக்க இறையியலாளர்கள் இந்த வாக்குறுதியை விளக்குகிறார்கள்,
இரண்டாவது வாக்குறுதி
“ஒரு கனிவான தாயாக, நான் அவர்களின் மரணத்திற்குப் பிறகு சனிக்கிழமையன்று உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன், அங்கிருந்து அவர்களை விடுவிப்பேன், புனித மலைக்கு, நிலைவாழ்வின் மகிழ்ச்சியான விண்ணகத்திற்கு கொண்டு வருவேன்."
(திருத்தந்தை 22 ஆம் ஜான் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது)
இந்த வாக்குறுதியே சனிக்கிழமை சிறப்புரிமை என்று அழைக்கப்படுகிறது.