கல்லறைப் பாடம் - 18
புனித ஜெம்மா கல்கானியும் உத்தரிக்கும் நிலையிலிருந்த ஓர் அருள்சகோதரியின் ஆன்மாவும்
இத்தாலியின் கார்னெட்டோவில் உள்ள ஓர் அருள்சகோதரிகளின் துறவு மடத்தில், கடவுளுக்கு மிகவும் பிரியமான ஓர் அருள்சகோதரி மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு செபங்கள் தேவை எனவும் புனித ஜெம்மா தமது செப வல்லமையால் அறிய வந்தார்.
பிறகு புனித ஜெம்மா அந்த மரணப் படுக்கையில் இருந்த அருள்சகோதரியின் பாவங்களை மன்னிக்குமாறு இயேசுவிடம் மன்றாடத் தொடங்கினார். இதனால் அந்த அருள்சகோதரி இறந்தவுடன் விண்ணகத்தில் நுழையலாம் என புனித ஜெம்மா நம்பினார்.
சில மாதங்களில், அந்தச் சகோதரி இறந்து போனார் என்று புனித ஜெம்மா தன் துறவு மடத்தில் இருந்தவர்களிடம் சொல்லியதோடு, இறந்தவருக்காக செபிக்க வேண்டும் என்பதற்காக, அச்சகோதரியின் பெயரைக் குழந்தை இயேசுவின் மரியா தெரசா என்று சொன்னார். இறந்த அந்த அருள்சகோதரியின் ஆன்மா உத்தரிக்கும் நிலையில் துன்புற்றுக்கொண்டிருந்ததை காட்சியில் கண்ணுற்ற புனித ஜெம்மா, அந்த அருள்சகோதரியின் ஆன்மாவுக்காக மிகுந்த செபங்களையும் ஒறுத்தல்களையும் மேற்கொண்டார்.
இந்தச் சூழலில் புனித ஜெம்மா தனது நாள்குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறார்:
“அன்று மணி 9:30 ஆயிற்று. நான் படித்துக் கொண்டிருந்தேன்; திடீரென்று என் இடது தோளில் யாரோ கை வைத்தது போல் இருந்தது. நான் பயந்து நடுங்கி, திரும்பினேன்;. அங்கு வெள்ளை உடை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்தேன். அவருடைய முகத் தோற்றத்திலிருந்து நான் பயப்பட ஒன்றுமில்லை என்று எனக்கு நம்பிக்கை பிறந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஜெம்மா, என்னைத் தெரியுமா?" என்று அவர் என்னைக் கேட்டார். நானோ “தெரியாது” என உண்மையை உரைத்தேன்.
அதற்கு அவர் “நான்தான் அருள்சகோதரி குழந்தை இயேசுவின் மரியா தெரசா. நீங்கள் என்னிடம் காட்டிய மிகுந்த அக்கறைக்கு மிக்க நன்றி. ஏனென்றால் விரைவில் நான் விண்ணக மகிழ்ச்சியை அடைய இருக்கிறேன்”.
இவை அனைத்தும் நான் விழிப்புடனும் முழு சுய உணர்வுடனும் இருந்தபோது நடந்தது. பின்னர் அச்சகோதரி மேலும் இவ்வாறு சொன்னார்: “இன்னும் எங்கள் செபம் தேவை. ஏனென்றால் எனக்கு இன்னும் சில நாள்கள் உத்தரிக்கும் நிலையில் துன்பம் உள்ளது."
அதிலிருந்து அவர் விரைவில் விண்ணகத்தை அடைய வேண்டும் என்று, நான் அவருடைய ஆன்மாவுக்காக என் செபங்களை இரட்டிப்பாக்கினேன்.
பதினாறு நாள்களுக்குப் பின்பு, அச்சகோதரியின் ஆன்மா உத்தரிக்கும் நிலையிலிருந்து விடுதலை பெற்று, விண்ணகத்தை அடைந்தது.