நினைவாற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்த
திருத்தந்தை 9 ஆம் பயஸ்
வணக்கத்திற்குரிய திருத்தந்தை 9 ஆம் பயஸ் பக்தியான நேர்மையான தோமாசா என்கிற அருள்பணியாளரை, ஆயராக ஒரு மறைமாவட்டத்திற்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த அருள்பணியாளரோ, பெரும் பொறுப்புகளை எண்ணி அச்சமுற்றவராய் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். ஆனால் அந்த அருள்பணியாளரின் பல நற்குணங்களை அறிந்திருந்த திருத்தந்தையோ மறுத்துவிட்டார்.
பின்பு திருத்தந்தையிடம் நேரில் பேசுவதற்கு அனுமதி பெற்றுச் சென்ற அருள்பணியாளர் தோமாசா, மீண்டும் தன் கோரிக்கையை ஏற்க வேண்டினார். ஆனால் மிகுந்த அன்போடு அவரை வரவேற்ற திருத்தந்தையோ, தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.
இறுதியில் அருள்பணியாளர் தோமாசா திருத்தந்தையிடம் தனக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அது உயர்ந்த பொறுப்பலிருந்து பணியாற்றுவதற்கு பெரும் தடையாக இருக்கும் என்பதாலேயே தனக்கு ஆயர் பொறுப்பு வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.
அதற்கு திருத்தந்தை 9 ஆம் பயஸ் சிரித்தவாறு, “அன்பான அருள்பணியாளரே, என் தோளில் நான் ஏற்றிருக்கும் உலக திரு அவையின் பொறுப்புகளை ஒப்பிட்டால் உமது மறைமாவட்டம் மிகவும் சிறியது. அதன் பொறுப்புகளும் எளியதே. நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல நினைவாற்றல் குறைபாட்டால் அதிக சிரமப்பட்டேன். ஆனால் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக நான் தினமும் தீவிரமாக செபம் செய்து வந்தேன். அவர்கள் அதற்கு ஈடாக எனக்கு நல்ல நினைவாற்றலை பெற்றுத் தந்துள்ளார்கள். நீங்களும் என்னைப் போலவே செய்யுங்கள். ஒரு நாள் கண்டிப்பாக பலன் பெற்று மகிழ்வீர்கள்” என்றார்.
உத்தரிக்கும் நிலையிலுள்ள புனித ஆன்மாக்கள் நமக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் சிறந்த பரிந்துரையாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், நாம் அவர்களுக்காக செபிப்பதன் மூலம், அவர்கள் நம்முடைய தேவைகளில் நமக்காக செபிக்க முடியும். புனித ஆன்மாக்கள் ஒருபோதும் தங்களுக்காக செபிக்க முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக செய்யப்படும் அவர்களின் செபங்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. இந்த ஆன்மாக்களிடம் செபம் செய்வதன் மூலமும், அவர்களின் சில துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதன் மூலமும், நாம் கடவுளின் சிறப்பு அருளைப் பெறமுடியும். ஏனெனில் “இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.”