Tuesday, 25 August 2020

திருத்தூதர்களின் பெயர்களும் அர்த்தங்களும்

 திருத்தூதர்களின் பெயர்களும் அர்த்தங்களும்



பேதுரு                      –  பாறை

அந்திரேயா            –          துணிச்சல்மிக்கவர், ஆண்மையுள்ளவர்

யாக்கோபு              –         குதிங்காலைப் பிடிப்பவன்

யோவான்               –          கடவுளின் கொடை, கடவுளின் அருள்

பிலிப்பு                    –           குதிரைகளின் நண்பர்

பர்த்தலமேயு                  தாலமியின் மகன்

தோமா                              இரட்டை

மத்தேயு                            கடவுளின் பரிசு

யாக்கோபு                       குதிங்காலைப் பிடிப்பவன்

யூதா ததேயு                    பாராட்டப்பட்டவர் 

சீமோன்                  –           கேட்கிறவர்

மத்தியா                           கடவுளின் பரிசு


Monday, 17 August 2020

உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையின் கர்தினால்கள்

 யார் இந்த கர்தினால்கள்?

கர்தினால்கள் என்பவர்கள் உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆட்சி பீடத்தினுடைய உயர்ந்த அதிகார அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். கர்தினால்களை நியமிக்கும் அதிகாரம் திருத்தந்தைக்கு மட்டுமே உண்டு. கர்தினால் பொறுப்பில் உள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் ‘கர்தினால் குழாம்’ (College of Cardinals) என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் ‘திரு அவையின் இளவரசர்கள்’ என்று அழைப்பதும் உண்டு.

பெயர் விளக்கம்

‘கர்தினால்’ என்னும் சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘அச்சாணி’ என்னும் அர்த்தம் உடையது. திரு அவையில் அச்சாணி போன்று மைய இடம் வகிப்பவர்கள் என்னும் பொருளில் ‘கர்தினால்’ என்னும் பட்டம் சிலருக்கு வழங்கப்படுகிறது. மத்திய காலங்களில் உரோமை மாநில எல்கைக்குள் திரு அவையின் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சிப் பொறுப்பில் பணிபுரியும் திருப்பணியாளர்களுக்கு மட்டுமே இத்தலைப்பு வழங்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் ஒட்டுமொத்த உலகளாவிய திரு அவை முழுவதற்கும் இது பரவியது.

கர்தினால்களின் அடையாளம்

கர்தினால்கள் தங்கள் தலையில் சிவப்பு நிற சிறு தொப்பியும், இடையில் சிவப்பு நிற கச்சையும் அணியும் தகுதி பெறுகின்றனர். இந்த சிவப்பு வண்ணம் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு துணிந்தவர்கள் என்பதைக் குறிக்கும். புதிய கர்தினால்களை நியமிக்கும் சடங்கின்போது, திருத்தந்தையினால் ஒரு முத்திரை மோதிரம் வழங்கப்படும். இதன் வெளிப்புறத்தில் திருத்தந்தையினால் தெரிவு செய்யப்படும் புனிதர்களின் படமும், உட்புறத்தில் திருத்தந்தையரின் ஆட்சி முத்திரையும் பொறிக்கப்பட்டிருக்கும்.

கர்தினாலின் பதவிக் கேடயம் 



கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். இத்தோடு அவர்களின் விருதுவாக்கும்  இணைக்கப்படுவது வழக்கம். 

கர்தினால்கள் நியமனம்

குறைந்த அளவு, குருத்துவ நிலையில் உள்ள மற்றும் கோட்பாடு, ஒழுக்கநெறி, பக்தி மற்றும் செயல் விவேகம் ஆகியவற்றில் உண்மையில் சிறந்து விளங்கும் ஆண்களை திருத்தந்தை தனது சொந்த விருப்பத்தால் கர்தினால்களாக உயர்த்தலாம். இவ்வாறு உயர்த்தபடும் நபர், ஏற்கனவே ஆயராக இல்லாதவர்கள் ஆயர் திருநிலைப்பாட்டைப் பெறவேண்டும்.  

கர்தினால்கள் திருத்தந்தையின் ஆணையால் உருவாக்கப்படுகின்றனர். இவ்வாணை கர்தினால்கள் குழாம் முன்னிலையில் திருத்தந்தையின் ஆலோசனைக்குழு கூடும் போது வெளியிடப்படும்; இவ்வெளியீடு செய்யப்பட்ட கணத்திலிருந்து சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கடமைகளையும் உரிமைகளையும் அவர்கள் பெறுகின்றனர். (திரு அவைச் சட்டம் எண்: 351)



மூவகை கர்தினால் அணிகள்

திருத்தந்தை இரண்டாம் உர்பன் காலத்தில் (1088 - 1099) ஏற்படுத்தப்பட்ட திரு அவைச் சீர்திருத்தத்தின் போது கர்தினால்கள் குழாமில் மூன்று அணிகள் அமைக்கப்பட்டன. அவை முறையே ஆயர்கள் அணி, குருக்கள் அணி மற்றும் திருத்தொண்டர்கள் அணி.

ஆயர்கள் அணி: ஆயர்கள் அணியானது திருத்தந்தையால் ஒரு புறநகர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள கர்தினால்களையும், கர்தினால்களாக்கப்பட்ட கீழைத் திருஅவைகளின் மறைமுதுவர்களையும் கொண்டுள்ளது.

குருக்கள் அணி: இவர்கள் உலகில் உள்ள முக்கிய மறைமாவட்டங்களை நிர்வகிக்கும் ஆயர்களாகவோ, பேராயர்களாகவே இருப்பர். ஆயினும் சிலர் உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராகவும் இருக்கின்றனர்.

திருத்தொண்டர்கள் அணி: இவர்கள் உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருப்பர்.

குருக்கள் அல்லது திருத்தொண்டர்கள் அணியின் ஒவ்வொரு கர்தினாலுக்கும் உரோமைத் தலைமைக்குருவால் ஓர் உரிமைத்தகுதி அல்லது உரோமை நகரின் திருத்தொண்டர்களின் ஒரு வட்டத் தொகுதி வழங்கப்படுகிறது. (திரு அவைச் சட்டம் எண்: 350)


உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி

கி.பி. 1059 இல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உரோமையின் முக்கிய குருக்களிடமும், உரோமையின் ஏழு புறநகர் ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள ஆயர்களிடமும் இருந்தது. இவ்வழக்கத்தாலேயே இன்று வரையும் கர்தினாலாக உயர்த்தப்படுபவருக்கு, உரோமையின் புறநகர் ஆலயத்தின் அல்லது உரோமையிலுள்ள மற்றோர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்படும். 

புறநகர் ஆலயத்தின் அல்லது உரோமையிலுள்ள மற்றோர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள கர்தினால்கள், அவற்றின் பொறுப்பேற்றபின், அந்த மறைமாவட்டங்கள் அல்லது ஆலயங்களின் நலனைத் தங்கள் ஆலோசனையாலும் ஆதரவாலும் மேம்படுத்த வேண்டும்; ஆயினும், அவற்றின் மீது அவர்களுக்கு எவ்வித ஆட்சி உரிமையும் இல்லை. அவற்றின் சொத்துக்கள் நிர்வாகம், ஒழுங்குமுறை அல்லது ஆலயங்கள் பணி ஆகியவற்றில் எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தலையிடவும் முடியாது. (திரு அவைச் சட்டம் எண்: 357)

கர்தினால் குழாமின் உறுப்பினர்களாக்கப்பட்ட கீழைத் திருஅவையின் மறைமுதுவர்கள் தங்களுடைய மறைமுதுவர் ஆட்சிப்பீடத்தை உரிமைத் தகுதியாய்க் கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்படுவதில்லை.

கர்தினால்களின் வசிப்பிடம்

கர்தினால்கள் உரோமைத் தலைமைக்குருவோடு ஆர்வமுடன் ஒத்துழைக்கக் கடமைப்பட்டுள்ளனர். எனவே, செயலகத்தில் ஏதாவது ஒரு பதவியைக் கொண்டிருக்கும் மறைமாவட்ட ஆயராக இல்லாத கர்தினால்கள் உரோமையில் வாழக் கடமைப்பட்டுள்ளனர். ஒரு மறைமாவட்டத்தில் ஆயராகப் பொறுப்பு வகிக்கும் கர்தினால்கள் உரோமைத் தலைமைக்குருவால் அழைக்கப்படும்போதெல்லாம் உரோமைக்குச் செல்ல வேண்டும். (திரு அவைச் சட்டம் எண்: 356)

கர்தினாலின் அதிகாரங்களும் பணிகளும்

புதிய திருத்தந்தையை தேர்வு செய்வது - திருப்பீடத் தேர்தல்

திருத்தந்தையின் இறப்பாலோ அல்லது பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகும் வேளையில் சட்ட விதிமுறைக்கேற்ப புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும். இக்காலத்தில், திருச்சபையின் அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும். 

திரு ஆட்சிப்பீடம் காலியானால், கர்தினால் குழாம் சிறப்புச் சட்டத்தில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுமே கொண்டிருள்ளது. (திரு அவைச் சட்டம் எண்: 359) 

இன்றைய திருச்சபைச் சட்டப்படி, திருத்தந்தைப் பணியிடம் வெறுமையாகின்ற வேளையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கூடும் திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்க வேண்டுமானால், கர்தினால் 80 வயதினைத் தாண்டாதவராக இருக்கவேண்டும்.

தனிப்பட்ட கர்தினால்களுக்கு, முந்தைய திருத்தந்தையால் கொடுக்கப்பட்டிருந்த உரோமைச் செயலகப் பொறுப்புகளையும், திருத்தந்தையின் தூதர்களாக அவர்கள் வகித்தப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் தானாகவே இழப்பர். இப்பொறுப்புகள் புதிதாய் தேர்வு செய்யப்படும் திருத்தந்தையால் மீண்டும் உறுதி செய்யப்படும் வரை அவர்களால் அவற்றை நிறைவேற்ற முடியாது.


திருத்தந்தையின் தூதர்களாக

ஒரு சில மிகச்சிறப்பு நிகழ்வுகளில் அல்லது ஒரு சில கூட்டங்களில் தம் பிரதிநிதியாகச் செயல்படத் தமது சிறப்புத் தூதராக அதாவது தமது ‘மறு பிம்பமாக’ இருக்கும் பணியானது திருத்தந்தையால் ஒரு கர்தினாலிடம் ஒப்படைக்கப்படலாம். அவ்வாறே மேய்ப்புப்பணி சார்ந்த குறிப்பிட்ட ஓர் அலுவலைத் தமது சிறப்புத் தூதுவராக நிறைவேற்ற அவர் ஒரு கர்தினாலைப் பணிக்கலாம்;. அத்தகைய கர்தினால்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் காரியங்களில் மட்டுமே சட்ட உரிமை பெற்றுள்ளனர். (திரு அவைச் சட்டம். எண்: 358)

அன்றாடப் பணிகள்

கர்தினால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதும், திருத்தந்தை வேண்டும்போது அவருக்கு தனியாகவோ, குழுவாகக் கூடியோ ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணிகளுள் அடங்கும். 

மேலும், கர்தினால்கள் அதிமுக்கிய ஆய்வுக்குரிய பொருள்களைப் பற்றி விவாதித்திட அழைக்கப்படும்போது உரோமைத் தலைமைக்குருவுக்குக் குழுவாக உதவி புரிகின்றனர். அல்லது சிறப்பாக அனைத்துலகத் திரு அவையின் அன்றாட அக்கறையில் பல்வேறு பதவிகள் மூலம் அவர்கள் தங்கள் உதவியை நல்குவதால் தனியாக உதவி புரிகின்றனர். (திரு அவைச் சட்டம் எண்: 349)

மறைமாவட்டங்களை நிர்வகித்தல், உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருத்தல் போன்ற பணிகளையும் கர்தினால்கள் செய்கின்றனர்.

பணித்துறப்பு

பேராயங்களுக்கும், உரோமைச் செயலகம் மற்றும் வத்திக்கான் நகரின் நிரந்தர நிறுவனங்களுக்கும் தலைமை ஏற்கும், 75 வயது நிறைவடைந்த கர்தினால்கள் தங்கள் பணித்துறப்பை திருத்தந்தையிடம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து அதற்கேற்ப ஏற்பாடு செய்வார். (திரு அவைச் சட்டம் எண்: 354)


Friday, 14 August 2020

மூன்று அருள் நிறைந்த மரியே

 மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சி 



வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது ஏறக்குறைய கி.பி. 13 ஆம் நூற்றாண்டளவில் ஜெர்மன் நாட்டில் இப்பக்தி முயற்சி பழக்கத்தில் இருந்தது என்பதை அறிகிறோம். தினமும் இரவில் தூங்கப்போகும் முன்பாக ஆன்ம சோதனை செய்துவிட்டு இந்த மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை செபிப்பது வழக்கத்தில் இருந்தது. 

மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை மரியன்னை தாமே 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பெனடிக்ட் துறவற சபையின் துறவியாகிய புனித மெக்டில்டாவுக்கு காட்சியளித்தபோது வழங்கினார். இது மரியன்னையோடு சேர்ந்து மூவொரு கடவுளுக்கு நன்றி செலுத்தும் பக்தி முயற்சி ஆகும். 

தந்தையாகிய இறைவன் மரியாவுக்கு வழங்கிய மேலான வல்லமைக்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும், இறைமகன் இயேசு மரியாவுக்கு வழங்கிய ஞானத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும், தூய ஆவியாராம் இறைவன் மரியாவுக்கு வழங்கிய அன்பு மற்றும் இரக்கத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும் இப்பக்தி முயற்சியில் செபிக்கப்படும். 


புனித மெக்டில்டாவுக்கு அன்னையின் காட்சி

புனித மெக்டில்டா 1241 இல் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். ஒரு நாள், தன் மரணத்தைப் பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தாள். அப்போது தன் வாழ்க்கையின் கடைசி தருணங்களில் அதாவது இறப்பின் வேளையில் தனக்கு உதவும்படி இறைவனின் தாயிடம் அன்பாய் வேண்டினார்.

அதற்கு இறைவனின் தாய் புனித மரியா இவ்வாறு பதிலளித்தார்: 

‘ஆம். நான் உனக்கு உதவி செய்வேன்;. ஆனால் அதற்காக நீ ஒவ்வொரு நாளும் மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டை என்னிடம் செபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதல் அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், தந்தையாகிய இறைவன் என்னை மாட்சியின் அரியணைக்கு உயர்த்தி, வானத்திலும் பூமியிலும் என்னை மிகவும் சக்திவாய்ந்த படைப்பாக ஆக்கியது போல, நானும் இப்பூமியில் உங்களை வலுப்படுத்தி, எதிரியின் ஒவ்வொரு சக்தியையும் உங்களிடமிருந்து விரட்டி, நான் உங்களுக்கு உதவ செபியுங்கள்.   

இரண்டாவது அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், இறைவனுடைய திருமகனாம் இயேசு எல்லா புனிதர்களையும் விட தூய்மைமிகு மூவொரு கடவுளைப் பற்றி அதிக அறிவைக் கொண்டிருக்கும் அளவிற்கு என்னை ஞானத்தால் நிரப்பியதைப் போல, உங்கள் வாழ்க்கையின் கடைசி தருணங்களில் தவறுகள் மற்றும் அறியாமையின் நிழல்கள் உங்களை இருளாக்கிடாமல் இருக்க, உங்கள் ஆன்மாவை விசுவாசத்தின் ஒளியினாலும் உண்மையான ஞானத்தினாலும் நிரப்பி நான் உங்களுக்கு உதவி செய்திட செபியுங்கள். 

மூன்றாவது அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், கடவுளுக்கு அடுத்து, நான் மிகவும் இனிமையானவராவும், இரக்கமுள்ளவராகவும் இருக்கும்படியாக, தூய ஆவியார் அவருடைய அன்பின் இனிமையால் என்னை நிரப்பி, என்னை மிகவும் அன்பானவராக்கியது போல, நானும் உங்கள் மரண நேரத்தில், உங்கள் மரணத்தின் துக்கமும் கசப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியாக மாறும்படிக்கு, தெய்வீக அன்பின் மேன்மையால் உங்கள் ஆன்மாவை நிரப்பி உங்களுக்கு உதவி செய்திட செபியுங்கள்.”


புனிதர்களும் திருத்தந்தையர்களும்

இப்பக்தி முயற்சி பல்வேறு புனிதர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று என்பதையும் நாம் பார்க்கிறோம். குறிப்பாக புனித தொன் போஸ்கோ, புனித பதுவை அந்தோனியார், புனித மரிய அல்போன்ஸ் லிகோரி போன்றோர் இப்பக்தி முயற்சியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். 

மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை ஒப்புரவு அருளடையாளத்தில் பாவப் பொறுத்தலாக வழங்கியவர் புனித போர்ட் மௌரீஸ் லியோனார்டு. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சிக்கு தனது திருத்தூது ஆசீரை வழங்கியவர் திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர்.


Wednesday, 12 August 2020

அருள் நிறைந்த மரியே மன்றாட்டு

 அருள் நிறைந்த மரியே மன்றாட்டு



திரு அவையின் தொன்மைச் சிறப்புமிக்க பாரம்பரியமான செபங்களுள் அருள் நிறைந்த மரியே வாழ்க எனும் மன்றாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மரியன்னையின் பரிந்துரையை நாடி வேண்டுவதாக அமைந்துள்ளது. 

பயன்பாடு

இச்செபத்தை செபமாலை செபிக்கும் போதும், மூவேளை மன்றாட்டை செபிக்கும் போதும் பயன்படுத்துகிறோம். இது மரியன்னைக்கு வணக்கம் செலுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட செபம் ஆகும். 

விவிலிய அடிப்படையும் விளக்கமும்

மங்கள வார்த்தை மன்றாட்டு முழுக்க முழுக்க விவிலிய அடிப்படை கொண்டதாகும். 

‘அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே’ -  லூக்கா 1:28

மரியா இறைவனின் அருளால் நிறைந்தவள் என்றும், ஆண்டவர் மரியாவோடு உடன் இருக்கிறார் என்றும் வானதூதர் கபிரியேல் கன்னி மரியாவைப் பார்த்து வாழ்த்துகிறார். இவ்வாழ்த்து தந்தையாம் கடவுளால் அவருடைய தூதரான கபிரியேலின் வழியாக மரியாவுக்கு வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்க வந்தபோது கபிரியேல் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவை வாழ்த்தினார். நாமும் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கும்போது, தந்தையாம் இறைவன் கபரியேல் வழியாக சொல்லியனுப்பிய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கிறிஸ்துவைப் பெற்றெடுக்க இசைவு தெரிவித்த அன்னைக்கு வணக்கம் செலுத்துகிறோம்.  

‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே’ – லூக்கா 1:42

இவ்வார்த்தைகள் கருவுற்றிருந்த எலிசபெத் மரியாவிடம் சொல்லியவை. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத் இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவுக்கு தனது வாழத்தையும் வணக்கத்தையும் தெரிவித்தாள். இஸ்ரயேல் இனத்துப் பெண்களில் பலர் மெசியாவின் தாயாக மாற ஏக்கம் கொண்டிருந்தாலும், மரியா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட எலிசபெத், கடவுளின் மகனையே கருவில் சுமக்கப்போகும் மரியா பெண்கள் அனைவரிலும் ஆசி பெற்றவள் என்று பாராட்டுகிறாள். மேலும் மரியாவின் வயிற்றில் பிறக்கப்போகும் இயேசுவும் ஆசி பெற்றவர் என்று பாராட்டுகிறாள்.  

‘புனித மரியே, இறைவனின் தாயே’ - லூக்கா 1:43

இந்த வார்த்தைகளும் மரியாவிடம் எலிசபெத் சொன்னவையே. மரியா புனிதமானவள் என்பதையும், அவள் மனிதரின் தாயல்ல. இறைவனின் தாய் என்பதையும் பறைசாற்றுகின்ற வார்த்தைகள் இவை. 

‘பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்’. -  யாக்கோபு 5:16

இச்செபத்தின் இறுதிப் பகுதியிலுள்ள இவ்வார்த்தைகள் நம்முடைய மன்றாட்டாக அமைந்துள்ளன. பரிந்துரை மன்றாட்டு என்பது கத்தோலிக்க திரு அவையில் முக்கியமான ஒன்று. இறைவனின் அன்னையாகிய மரியா அன்று கானாவில் நடைபெற்ற திருமணத்தில் திருமண வீட்டாராருக்காக இயேசுவிடம் பரிந்து பேசியதுபோல, இன்று நமக்காகவும் இறைவனிடம் பரிந்துபேசுவார் என்கிற நம்பிக்கையோடு நாம் இவ்வார்த்தைகளைச் சொல்லி செபிக்கிறோம். குறிப்பாக நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இப்பொழுது நமக்கான தேவைகளைக் குறித்தும், இறப்பின் வேளையில் நமக்குத் துணையாக இறைத்தாய் இருக்கும்படியாகவும் நாம் இறைஞ்சி செபிக்கிறோம். 



மூன்று பகுதிகள் தொகுக்கப்பட்ட வரலாறு

இச்செபத்தின் முதல் பகுதியில் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவை வாழ்த்துவதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:28). இந்த வார்த்தைகள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழிபாட்டு முறைகளில் காணப்பட்டன. 

இரண்டாவது பகுதியில் புனித திருமுழுக்கு யோவானின் தாயார் எலிசபெத் மரியாவைப் புகழ்வதற்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளன (லூக்கா 1:42). இந்த இரண்டு பகுதிகளும் கி.பி. 1000 க்குள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்து வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஏறக்குறைய திருத்தந்தை நான்காம் உர்பன் காலத்தில் (கி.பி. 1261-64) இந்த இணைப்பில் இயேசு என்கிற சொல்லும் சேர்க்கப்பட்டது. 

மூன்றாவது பகுதியில் நாம் செபிக்கும் விண்ணப்பம் என்பது சுமார் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் வழக்கதிற்கு வந்து பல பரிமாணங்களைப் பெற்றிருக்க வேண்டும். 

இறுதியாக கி.பி. 1568 ஆம் ஆண்டில் திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் திருப்புகழ்மாலையை சீர்திருத்திய போது இந்த செபத்தின் இப்போது நாம் பயன்படுத்தும் முழுமை வடிவம் உருவானது. 


Tuesday, 4 August 2020

புனிதர்களின் வரலாற்று நாடகம் - 1

 கடவுளைக் காட்டும் கண்ணாடி

 – புனித ஜான் மரிய வியான்னி

(வரலாறைத் தழுவிய கற்பனை கலந்த நாடகம்)




                                                                            காட்சி - 1

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தனர். இப்படிப்பட்ட காலகட்டத்தில் லயன்ஸ் நகருக்கு அருகில் டார்டில்லி என்ற ஊரில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் மத்தேயு – மேரி என்ற பெற்றோருக்கு, 1786 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி ஒரு மகன் பிறந்தான். அதற்கு ஜான் மரிய வியான்னி என்ற பெயரிட்டார்கள். ஏழு குழந்தைகள் கொண்ட அக்குடும்பத்தில் வியான்னி நான்காவது குழந்தை. இவரது குழந்தைப் பருவுத்தில் அவருடைய பெற்றோர்களே இவருக்கு மறைக்கல்வியை கற்றுக்கொடுத்தனர். 13 வயதில் முதல் நற்கருணையை பெற்ற இவர் அதன்பிறகு எப்போதும் தான் ஒரு குருவாகின்ற கனவையே சுமந்தவராக இருந்தார். வியான்னியின் புதுநன்மைக்குப் பிறகு ஒருநாள் …..


இடம் : வீடு

பங்கேற்போர்: அப்பா, அம்மா, வியான்னி


அப்பா: மேரி, நம்ம நாலாவது பையன் வியான்னி எங்க?

அம்மா:  கோவில்ல பாதர் கூப்பிட்டாருனு போயிருக்கான்.

அப்பா: அப்படியா. ரொம்ப நல்லது. நானும் அவன் புதுநன்மை வாங்கினதுல இருந்து பாத்துகிட்டுதான் இருக்கேன். ஆளு ரொம்பவே மாறிட்டான் மேரி.  

அம்மா:  ஆமாங்க. டெய்லி கோவிலுக்கு போறான். தனியா செபிக்கிறான். வீட்ல எனக்கு கூடமாட உதவி செய்றான். உண்மையிலேயே எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்குங்க. 

அப்பா: நேத்து என்கிட்ட வந்து செபமாலை எப்படி செபிக்கிறதுன்னு கேட்டுட்டு போனான். அதவிடு …எனக்கே பைபிள்ல இருந்து நிறைய கதையெல்லாம் இப்ப சொல்றான். 

வியான்னி: ஹாய் அப்பா, எப்ப வந்தீங்க. 

அப்பா: இப்பதான் வந்தேன் யா…. நீ எங்க…, பூசைக்கு போயிட்டு வரியா?

வியான்னி: ஆமாப்பா… இன்னொரு விஷயம் தெரியுமா??  இன்னைக்கு பூசைல நான் பீடத்துல பாதருக்கு பூசை உதவி செஞ்சேனே…

அம்மா: என் செல்லம்.. ஊருல பிள்ளகளெல்லாம் வீதில சுத்திக்கிட்டு இருக்குறப்ப.. என் புள்ள சாமி மேல எவ்வளவு பக்தியா இருக்கான்.

வியான்னி: அம்மா. நீங்களும் அப்பாவும் எனக்கு சின்ன வயசுல இருந்தே இயேசுவ பத்தி நிறைய சொல்லியிருக்கீங்க. அதெல்லாம் கேட்டு தான் எனக்கு புதுநன்மை வாங்க ஆசை வந்துச்சு. புதுநன்மை வாங்கின பின்னாடி கோவில் வேலை செய்றதுல்ல நிறைய ஆர்வமும் வந்திடுச்சு.

அப்பா:  பைபிள்ல கதை ஒன்னு இருக்கு. சாமுவேல்னு ஒரு சின்ன பையன் கடவுளோட கோவில்லதான் வளர்ந்தான். கடவுளுக்கும், குருவுக்கும் பணி செய்துட்டு கொவில்லயே அவன் தங்கிடுவானாம். 

அம்மா: ஓஓஓ.. எனக்கும் எம்புள்ள குட்டி சாமுவேல் மாறிதான். என்னடா ராசா..

வியான்னி: அம்மா, இன்னக்கி நம்ம வீட்ல நைட் பிரேயர்ல நான் பைபிள் வாசிக்கிறேன்மா..

அம்மா:  சமத்து…கண்டிப்பா நீ வாசிக்கலாம். திருப்பாடல் 23 எடுத்து வாசிச்சு பார்த்துக்கோ.. சரியா?

வியான்னி: சரிம்மா. அப்பா.. எனக்கு இன்னொரு ஆசையிருக்குப்பா… 

அப்பா:  என்னடா..  செல்லம்.. எனக்கிட்ட சொல்லுடா.. 

வியான்னி: நான் சாமியாரா ஆகனும்னு ஆசைப்படுறேன். 

அம்மா:  டே.. வியான்னி என்னடா சொல்லுற.. உன்னய போன ஞாயிற்றுக் கிழமை ஆல்டர் பாய் டிரெஸ்ல பார்த்ததுல இருந்து எனக்கும் அதே நினப்புதான்டா… உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தேன். 

வியான்னி: ஆமாம்மா.. நானும் நம்ம பங்கு சாமியார் மாறி ஆகனும்னு ஆசையாயிருக்கு. என்ன விடுவீங்களா?

அப்பா:  வியான்னி.. இப்படி வாய்யா.. நீ கடவுள் எங்களுக்கு கொடுத்த கொடை.. கடவுளுக்கு நீ தேவைப்பட்டா நான் உன்னய அந்த கடவுளுக்கு தரமாட்டேன்னு எப்படி சொல்ல முடியும்? குருவாக போறது தான் உன்னுடைய வாழ்க்கைக்கு கடவுள் வச்சுருக்க நோக்கம்னா நாங்க கண்டிப்பா தடுக்க மாட்டோம். 

அம்மா:  எம்புள்ள சாமுவேல்னு இப்பதான் சொன்னேன்… நீ குருமடத்துக்கு போறதுக்கு எங்களுக்கு முழு சம்மதம்ப்பா..

வியான்னி: அப்பா.. அப்ப நானு வர்ற ஜீன் மாசமே குருமடத்துல சேர ஏற்பாடு பண்ணுவீங்களா…

அப்பா: நிச்சயமா… நாளைக்கு காலைலயே நானும் உங்க அம்மாவும் போயி நம்ம பங்கு பாதர்ட்ட இது சம்மந்தமா பேசிட்டு வந்திடுறோம். 

வியான்னி: ரொம்ப நன்றிப்பா.. ரொம்ப நன்றிம்மா… 

அம்மா:  சரி.. வாங்க… செபம் சொல்லிட்டு சாப்பிடப்போவோம். 


காட்சி - 2

பெற்றோர்களின் சம்மத்தோடு வியான்னி தன்னுடைய 18 வது வயதில் குருமடத்தில் சேர்ந்தார். குருமடத்தில் சேர்ந்த வியான்னிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த காலகட்டத்தில் குருமடத்தில் பாடங்கள் எல்லாம் இலத்தீன் மொழியிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த வியான்னிக்கு அவற்றை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது ஒருமுறை குருமடத்தில் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?


இடம்: குருமடம்- ஆலயத்திற்கு முன்னால்

பங்கேற்பாளர்கள்: சார்லஸ்,டேவிட், மைக்கில், வியான்னி,பாதர்


சார்லஸ்: டே, அங்க பாருடா மரிய வியானி வர்றான்.

டேவிட்: ஆமாண்டா, சார்லஸ். ஆளு வளர்ந்த அளவுக்கு அவனுக்கு இன்னும் அறிவு வளரலடா. இலத்தீன் பாடத்துல இதுவரைக்கும் வியான்னி பாஸானதே இல்லடா. இவன் ஒரு சரியான மக்கு.

மைக்கில்: ஏ, வியானி, இங்க வாடா.

வியான்னி: மைக்கில் பிரதர். என்ன எதுக்கு கூப்பிட்டீங்க?

மைக்கில்: ஏன்டா, வியான்னி உனக்கு தான் இலத்தீன் சுத்தமா சுட்டுப் போட்டாலும் வரலனு தெரியுதுல்ல. பின்ன எதுக்குடா இன்னும் குருமடத்துல இருக்க. பேசாம வீட்டுக்கு போயிட வேண்டியது தான.

சார்லஸ்: இங்க பாருங்க பிரதர் வியான்னி, இந்த மைக்கில் நம்ம கிளாசிலயே பர்ஸ்ட். இங்க இருக்கானே இந்த டேவிட், இவன் நல்லா பாடுவான். ஏன் என்ன எடுத்துக்க, நான் நல்லா பேசுவேன். ஆனா உனக்குன்னு பாராட்டுற மாறி ஏதாவது திறமை இருக்கா?

டேவிட்: அட விடு சார்லஸ். இந்த வியானி பய எல்லாம் சாமியாராக ஒரு தகுதியும் இல்ல.

வியான்னி: பிரதர்ஸ், ஏன் இப்படி பேசுறீங்க. நீங்க எல்லாரும் சொல்ற மாறி எனக்கு திறமையோ, தகுதியோ இல்லாம இருக்கலாம். ஆனா கடவுள் மேல அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.

மைக்கில்: ஹா ஹா…….ஹா..ஹா… நம்பிக்கையாம் நம்பிக்கை. போடா டே.

சார்லஸ்: வியான்னி பிரதர், நீங்க திருந்தவே மாட்டீங்க. கோயிலே கதினு இருக்காம, போயி படிக்கிற வழிய பாருங்க. சரி வாங்கடா நாம எல்லோரும் கிளாசுக்கு போவோம்.

வியான்னி: (அழுதல்) ஆண்டவரே, இயேசுவே, இவுங்க பேசுறதெல்லாம், என்னை எவ்வளவோ காயப்படுத்துதே. இவர்களை மன்னிக்கிற மனச எனக்கு தாங்க. இவுங்க சொன்ன படி எனக்கு திறமைனு எதுவுமே இல்லயே, ஆனா உங்க மேல எனக்கு இருக்கிற நம்பிக்கை உங்களுக்கு தெரியுமே. உங்களுக்கு விருப்பம்னா நீங்க என்னயும் ஒரு குருவாக அபிசேகம் செய்யுங்க. (அழுதல்)

பாதர் : பிரதர் வியான்னி கிளாசுக்கு டைம் ஆயிடுச்சு. இன்னும் போகாம, கோயிலுக்கு முன்னால நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

வியான்னி: சாரி பாதர். (கண்ணை துடைத்தல்) இதோ கிளம்பிட்டேன்.

பாதர்: ஏற்கனவே நிறைய பாடத்துலு நீ பெயிலாகிற. இப்படியே நீ லேட்டா போயிட்டே இரு. கடைசியில நீ எதுக்கும் தேற மாட்ட. நீ ஒரு கழுதை.

வியான்னி: பாதர், பைபிள்ல ஒரு கழுதையோட தாடை எலும்ப வச்சு சிம்சோன் 1000 பேரைக் கொன்றாருனு படிக்கிறோமே. ஒரு கழுதையோட தாடையை வைச்சே கடவுளால் அப்படி செய்ய முடிஞ்சதுனா, ஒரு முழு கழுதையான என்ன வச்சு கடவுள் இன்னும் எவ்வளவு அதிகமாக செய்வாரு?

பாதர்: சாரி, பிரதர் வியான்னி. ஏதோ கோவத்துல பேசிட்டேன். இனிமேல் உங்களுக்கு படிப்புல ஏதும் சந்தேகம்னா, நீங்க எப்ப வேணாலும் என்கிட்ட வாங்க.

வியான்னி: ரொம்ப நன்றி பாதர்.


                                                                        காட்சி - 3

எவ்வளவு சிறப்பு கவனம் எடுத்தும் வியான்னிக்கு இலத்தீன் மொழியில் நடத்தப்படுகின்ற பாடங்கள் புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாகவே இருந்தன. இவ்வாறு ஒருவழியாக குருமடப் படிப்பை வியான்னி நிறைவு செய்தார். குருமடத்திலிருந்து வியான்னியைப் பற்றி வந்த தகவல்கள் வியான்னியின் மீது ஆயரை அதிருப்தி கொள்ள செய்தது. அவரைக் குறித்து மறைமாவட்ட முதன்மை குருவும் ஆயரும் என்ன முடிவு செய்தார்கள் தெரியுமா? 


இடம் : ஆயரின் அலுவலகம்

பங்கேற்போர்: ஆயர், முதன்மை குரு


முதன்மை குரு: வணக்கம் ஆயரே!

ஆயர் : வணக்கம் மொன்சிங்கோர். நானே உங்கள பார்க்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன். ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்களே வந்திட்டீங்க. இப்படி உட்காருங்க.

முதன்மை குரு: நன்றி ஆயரே. என்ன விசயமா என்னய பார்க்கணும்னு நினைச்சீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?

ஆயர் : குருமடத்தில் இருந்து நம்ம பிரதர்சோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்திருக்கு. நான் பார்த்திட்டேன். ஆனா பிரதர் மரிய வியான்னியோட ரிப்போர்ட் மட்டும் திருப்திகரமா இல்லயே. இந்தாங்க, குருமடத்தில இருந்து வந்த பிரதர் வியான்னியுடைய ரிப்போர்ட். நீஙகளே படிச்சு பாருங்க.

முதன்மை குரு : (வாங்கி படித்தல்)

ஆயர் : இப்ப என்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க. நீங்க சொல்லுங்க மொன்சிங்கோர்.

முதன்மை குரு: ஆயரே, நீங்க மரிய வியான்னியோட அறிவ மட்டும் வச்சு முடிவெடுக்காம, அவரோட பக்தியையும், நம்பிக்கையையும் கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கணும் அப்படினு ஆசைப்படுறேன்.

ஆயர் : கண்டிப்பா மொன்சிங்கோர், நீங்க சொல்ல விரும்புறத சொல்லுங்க.

முதன்மை குரு: இறைவனுடைய தோட்டத்தில வேலை செய்யறவரு தான் ஒரு குரு. ஆன்மாக்களை ஆண்டவரிடம் கொண்டுபோய் சேர்க்கிற இந்தப் பணிக்கு, அறிவு மட்டும் போதுமானதா இருக்காதுன்னு உங்களுக்கே தெரியும்.

ஆயர் :ஆமா, நீங்க சொல்றது ரொம்பவே சரிதான். அறிவைவிட ஆண்டவர் மீது கொண்ட நம்பிக்கைதான் முக்கியம். இறைவனுடைய பணியைச் செய்ய நாம விருப்பத்தோடவும், அவர்மீது நம்பிக்கையோடவும் வர்றப்ப, நிச்சயமா இறைவனோட அருளே, போதுமானதா இருக்கும். பிரதர் வியான்னிகிட்ட அப்படி ஏதும் இருக்குன்னு நினைக்கிறீங்களா?

முதன்மை குரு: நம்ம வியான்னி கிட்ட மாதா பக்தி ரொம்பவே இருக்கு. தினமும் செபமாலை சொல்லாம தூங்கவே போகமாட்டாரு.

ஆயர் : ரொம்ப நல்லதாக போச்சு. மாதா மேல பக்தியா இருக்கிற வியான்னி, கண்டிப்பா ஒரு குருவா ஆகுறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த ஆண்டே அவருக்கு குருப்பட்டம் கொடுத்துருவோம்.

முதன்மை குரு: இத கேட்கவே மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆயரே, நீங்க ஒரு நல்ல முடிவ தான் எடுத்திருக்கீங்க. கண்டிப்பா கடவுள் மரிய வியான்னி வழியா எத்தனையோ பெரிய காரியங்களை கண்டிப்பா செய்வாரு, பாருங்க.

ஆயர் : நிச்சயமா நடக்கும். நீங்க போய் தேவையான ஏற்பாடுகளை செய்யுங்க.

முதன்மை குரு: நன்றி ஆயரே. நான் புறப்படுறேன்.

ஆயர் : (ஆசி வழங்குதல்) இறைவன் உம்மை ஆசிர்வதிப்பாராக!


காட்சி – 4

இறைவனின் அருளால் 1815 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார் வியான்னி. அதற்கு பின்பு வெறும் 250 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்ற ஆர்ஸ் என்கிற ஊரின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆவலோடு ஆர்சுக்கு போன வியான்னிக்கு என்ன நடந்தது தெரியுமா?


இடம் : ஆர்ஸ் நகரின் முகப்பு

பங்கு பெறுவோர்: வியான்னி, சிறுவர்கள் - 3, ஜெனிபர், ரோசி


(சிறுவர்கள் விளையாடுதல்)

சிறுவன் 1 : டே, பந்த இங்க போடுடா.

சிறுவன் 2: டே, எனக்கு ஒரு சான்ஸ்டா,

சிறுவன் 3: ஏ, இந்தப் பக்கம் எறிடா.

வியான்னி: தம்பிங்களா, கொஞ்சம் இங்க வாங்கப்பா.

சிறுவன் 1: டே, அங்க பாருடா ஒரு புது பாதர்.

சிறுவன் 2: அவரு நம்பளத்தான் கூப்பிடுறாரு. வாங்கடா ஓடிடலாம்.

சிறுவன் 3: டே நம்பகிட்ட ஏதோ பேசத்தான் கூப்பிடுறாரு. வாங்கடா போய் என்னனு கேட்போம். (அருகே செல்லுதல்)

வியான்னி: தம்பிங்களா, உங்க பேரு என்னப்பா?

சிறுவன் 1: என் பேரு பீட்டர்

சிறுவன் 1: என்னுடைய பேரு ஜான்.

சிறுவன் 3: பாதர், என்னோட பேரு ஜேம்ஸ்.

வியான்னி: ஆகா, ரொம்ப அருமை. இயேசுவோட மூணு முக்கியமான சீடர்களுடைய பேரை வச்சுருக்கீங்க. சரி. நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணுமே.

சிறுவன் 1: சொல்லுங்க பாதர். செய்றோம்.

வியான்னி: நான் ஆர்ஸ் ஊருக்கு போகணும்.

சிறுவன் 2: ஆர்சுக்காக. . . . நீங்களா. . . . .

வியான்னி: ஏன்ப்பா, என்ன ஆச்சு?

சிறுவன் 3: இல்ல, ஆர்ஸ்ல தான் கோவில் எல்லாம் இடிஞ்சு கிடக்கே.

வியான்னி: பரவாயில்லப்பா. இறைவனின் இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்பதான் நான் வந்திருக்கேன்.

சிறுவன் 1: நீங்க தான் அப்ப ஆர்சுக்கு வந்திருக்க புது பங்கு பாதர் ஆ?

வியான்னி: ம்ம்….. ஆர்சுக்கு போகுற வழிய நீங்க எனக்கு காட்டினீங்களா, விண்ணகம் போறதுக்கான வழிய நான் உங்களுக்கு காட்டுவேன்.

சிறுவன் 2: பாதர், இந்த பக்கமாக தான் ஆர்சுக்கு போகணும்.

சிறுவன் 3: பாதர். எங்க வீடும் அந்த பக்கம் தான் இருக்கு. வாங்க நாங்களும் உங்களோட வர்றோம்.

வியான்னி: ரொம்ப நன்றி தம்பிங்களா. வாங்க போகலாம்.

ரோசி : ஏ, ஜெனிபர் அங்க பாரு. புது பாதர் ஒருத்தர் பசங்கள கூட்டிக்கிட்டு கோவில் பக்கமா போறாரு.

ஜெனிபர்: அட ஆமா ரோசி. ஆர்சுல இருக்கிற நம்ம மக்கள் இதுவரை கோவில் பக்கம் தலை வச்சுகூட படுக்கிறதில்ல. இதுல இந்த ஊருக்கு புதுசா ஒரு பங்கு சாமியாரு வேறயா.

ரோசி: ஏற்கனவே இங்க இருந்த எந்த சாமியாராலும் ஒன்னும் செய்ய முடியல. இவரு மட்டும் என்னத்த புதுசா பண்ணிடப் போறாருனு பார்க்கத்தான போறோம்.

ஜெனிபர்: ஒரு மாசத்துல துண்ட காணோம், துணிய காணோம்னு ஒடுறாரா இல்லையானு பாரு.


காட்சி – 5

கடவுள் நம்பிக்கையே காணாமல் போயிருந்த ஆர்ஸ் நகரில் உண்மையில் வியான்னியின் அருள்பணி மிகுந்த சவால் நிறைந்ததாகவே இருந்தது. ஏற்றுக்கொள்ளாத மக்கள், புரிந்துகொள்ளாத குருக்கள் என எப்பக்கமும் தனிமையையும் தவிப்பையும் மட்டுமே சந்தித்த வியான்னியின் பணி வாழ்வு எப்படி அமைந்தது தெரியுமா? 


இடம் - ஆலயம்

பங்கேற்போர்: வியான்னி, சிறுவர்கள் 3, ஜெனிபர், குடிகாரர், ரிச்சர்ட், சாத்தான்


வியான்னி: (முழந்தாளிட்டு வேண்டுதல்) என் ஆண்டவரே! உம் பணி செய்ய தகுதியற்ற அடியேன் என்னை தெரிந்தீரே! நன்றி இயேசுவே! உம் பிள்ளைகளாகிய இந்த ஆர்சு நகர மக்கள் குடிவெறி, களியாட்டம், கேளிக்கை நடனங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு, உம்மிடமிருந்து விலகி நிற்கிறார்களே. பங்கின் ஆலயம் இடிந்து கிடப்பது கூட இவர்களுக்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லையே. இறைவார்த்தை மீதும், நற்கருணை மீதும் கொஞ்சமும் ஆர்வமும் தாகமும் இல்லாமல் இருக்கிறார்களே. இவர்களை உம் பக்கம் திருப்பவும், ஆலயத்தை மீண்டும் சீர் செய்யவும் எனக்கு அருள் செய்வீராக. ஆமென்.

சிறுவன் 1: டே, அங்க பாருடா. பாதர் முழங்கால் போட்டிருக்காரு.

சிறுவன் 2: ஏன்டா, யாரும் பனி~;மென்ட் கொடுத்திட்டாங்களா?

சிறுவன் 3: டே – அதுக்குப் பேரு செபிக்கிறது டா. பாதர் கடவுள்ட்ட செபிக்கிறாரு.

( பாதர் கோவிலை சுத்தம் செய்ய தொடங்குதல் )

சிறுவன் 1: ஜேம்சு, ஜானு, பாதரு கோவில சுத்தம் பண்ண ஆரம்பிச்சுட்டாருடா.

சிறுவன் 2: எப்படிடா இவ்வளவு பெரிய கோவில தனியா கிளீன் பண்ணுவாரு.

சிறுவன் 3: டே, நாம வேணா பாதருக்கு ஹெல்ப பண்ணலாம்டா. வாங்கடா. அவரோட சேர்ந்து நாமளும் கோவில சுத்தம் பண்ணலாம்.

சிறுவன் 1,2: ஆமான்டா. அதுதான் சரி. வாங்கடா போலாம்.

வியான்னி: பசங்களா, இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

சிறுவன் 1: அது வந்து பாதர், நீங்க மட்டும் தனியா சுத்தம் பண்ணிக்கிட்டு இருக்கீங்கள்ல, அதான், நாங்களும் கொஞ்சம் சேர்ந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்னு…..

வியான்னி: இல்லப்பா, நீங்க எல்லாம் சின்ன பசங்க. உங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத சிரமம்?

சிறுவன் 2: போங்க பாதர், இதுல சிரமம் எல்லாம் ஒன்னுமில்ல. 

சிறுவன் 3: நீங்களே செய்யும் போது, நாங்களும் சேர்ந்து செஞ்சா தான் அது சரியா இருக்கும்.

வியான்னி: சரி வாங்க. ஆனா பாத்து பத்திரமா வேலை செய்யனும்.

சிறுவர்கள்: சரிங்க பாதர்.

ஜெனிபர்: (உள்ளே நுழைதல்) டே, ஜேம்ஸ், இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க. கை எல்லாம் ஒரே அழுக்கு. என்னடா இது கோலம் ?

சிறுவன் 3: அம்மா, அது ஒன்னுமில்ல. பாதர் கூட சேர்ந்து கோவில சுத்தம் செய்யலாம்னு வந்தோம்.

வியான்னி: அம்மா, இப்படி வாங்க. நான் அப்பவே வேணாம் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன். பசங்க தான் கோவிலுக்கு வேலை செய்றதுக்கு ரொம்ப ஆசைப்பட்டாங்க.

ஜெனிபர்: பாதர், உண்மையிலேயே, என் பையன இப்படி பொறுப்பா, அமைதியா பார்க்குறதுக்கு, ரொம்ப மனசுக்கு ஆறுதலா இருக்கு. அவன் ஊரெல்லாம் சண்டை இழுத்துட்டுதான் வருவான். ஆனா இப்ப எல்லாம் உங்களை பாத்த பிறகு, நானும் நம்ம வியான்னி பாதர் மாறி ஒரு பாதரா ஆகனும்னு வீட்ல எப்பவும் சொல்லிக்கிட்டு இருக்கிறான்.

வியான்னி: அப்படியா, ரொம்ப சந்தோசம். பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் ஜேம்ச குருமடத்துக்கு அனுப்பிட்டா போச்சு.

ஜெனிபர்: கண்டிப்பா பாதர். கொஞ்சம் அந்த துடைப்பத்தை என் கையில கொடுங்க. நானும் உங்களோட சேர்ந்து சுத்தம் பண்றேன்.

வியான்னி: காட் பிளஸ் யூ மா.

குடிகாரர்: ஏ, சாமியாரு, இங்க வெளிய வாயா!

வியான்னி: ஆண்ட்ரு, ஏன்ப்பா இப்படி குடிச்சு வந்து சத்தம் போடுற?

குடிகாரர்: என்னய்யா, நடிக்கிற. ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கியா? நானும் நீ வந்ததுல இருந்து பார்க்கிறேன். ரொம்ப தான் பண்ணிக்கிட்டு இருக்க. தொலைச்சுடுவேன், தொலைச்சு. 

ஜெனிபர்: ஆண்ட்ரு அண்ணா, என்னனா இது. சாமியாரைப் போயி மரியாதை இல்லாம பேசிக்கிட்டு. இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

குடிகாரர்:ஏ ஜெனிபர் மரியாதையா நீ ஒன் வேலைய பார்த்துக்கிட்டு போயிடு. நீ என்ன சாமியாருக்கு வக்காலத்து வாங்க வரியா? இந்த ஆளோட பித்தலாட்டம் எல்லாம் எனக்கு நல்லா தெரியும். 

ஜெனிபர்: அண்ணா, வேணாம்ண்ணா,  இப்படி எல்லாம் பேசுறது நல்லதில்லை. வாங்கண்ணா… வீட்டுக்கு போகலாம். (மக்கள் கூடுதல்)

குடிகாரர்: ஓ.. நீயும் இந்த சாமியாரோட கூட்டாளியா? எனக்கே நல்லது கெட்டது சொல்லித்தரியா? நீயும் உன் புத்திமதியும்…. ஏ சாமியாரு… நல்லா கேட்டுக்கோ… இது எங்க ஊரு… நாங்க இதுவரைக்கும் எப்படி இருந்தோமோ அப்படிதான் இனியும் இருப்போம்… சும்மா மாத்திருவேன்னு அப்படி, இப்படின்னு எதையாவது பிரசங்கத்துல சொல்லிக்கிட்டு, புதுசு புதுசா எதையாது பண்ணிக்கிட்டு இருக்கிறத பாத்தேன்னு வச்சுக்க … உன்ன உண்டு இல்லனு ஆக்கிடுவேன். (கீழே தள்ளிவிடுதல்… மக்கள் தூக்கிவிடுதல்…. குடிகாரார் சென்றுவிடுதல்) 

மக்கள்: அய்யோ …பாதர்…

வியான்னி: ஒன்னும் இல்ல..பயப்படாதீங்க…விடுங்க.

ரிச்சர்ட்: பாதர்.. இந்த ஆண்ட்ரு ரொம்ப மோசமானவன். ஏற்கனவே நாங்க உங்ககிட்ட சொல்லனும்னு நினைச்சதுதான். ஊரெல்லாம் உங்கள பத்தி அசிங்க அசிங்கமா எழுதி போட்டது, மொட்டக் கடுதாசி எழுதுறது, கோவிலுக்கு நல்லது நடக்குறதை எல்லாம் தடுக்குறது, இதை எல்லாம் இவனும் இவனுடைய கூட்டாளிகளும்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க ஏதுக்கும் பாத்து ஜாக்கிரதையா இருங்க…

வியான்னி: இதுல என்ன இருக்கு. ஆண்ட்ரு அவன் நெனச்சத செய்யிரான். தான் தப்பு செய்றோம்னு தெரிஞ்சா கண்டிப்பா திருந்திடுவான். நீங்க வேணா பாருங்க. நான் அவனுக்காக நோன்பிருந்து செபிக்கிறேன். கூடிய சீக்கிரம் அவன் திருந்தி கோவிலுக்கு வருவான்.. எனக்கு நம்பிக்கை இருக்கு. 

மக்கள்: அதுதான் எங்கள் விருப்பமும் பாதர். 

வியான்னி: சரி. லேட்டாகிடுச்சு. நீங்க எல்லாம் வீட்டுக்குப் போங்க. காலைல திருப்பலி இருக்கு. மறக்காம வந்திடுங்க. 

மக்கள்:கண்டிப்பா வருவோம் பாதர்.

வியான்னி: ஜேம்ஸ், நாளைக்கு நீதான் பீடத்துல உதவி செய்யனும். சரியா. 

சிறுவன் 3: நிச்சயமா பாதர். 

வியான்னி: காட் பிளஸ் யூ. போயிட்டு வாங்க.

(தனியாக செபித்தல்)

சாத்தான்: (பலமாக சிரித்தல்) ஹா ஹா ஹா ஹா..இந்த வியான்னி பாதர் ..தவம் தவம்னு வெறும் உருளைக் கிழங்கை மட்டும் சாப்பிட்டு இருக்காராமே. இவருக்கு அதையும் விட்டு வைக்கக் கூடாது. இந்த சாமியாரு கொலைப் பட்டினி கிடந்தா தான் இவருடைய வேலைகள் எல்லாம் நின்னு போகும்.பாவிகளுடைய மனமாற்றத்திற்காக இவர் செய்யிற இந்த ஒறுத்தல் முயற்சியை ஒன்னும் இல்லாம பண்ணிடனும். இந்த பாத்திரத்தில இருக்குற எல்லா உருளைக் கிழங்கையும் நானே சாப்பிட்டுடுறேன். வியான்னி சாமியாரு பசியால துடிக்கட்டும். ஹா ஹா ஹா ஹா. (சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தை கவிழ்த்து வைத்தல்)

வியான்னி: (செபித்துவிட்டு, உண்பதற்குப் பாத்திரத்தை எடுத்து பார்த்தல்) ஏ பிசாசே… இது எல்லாம் உன் வேலையா? உருளைக்கிழங்கை தின்னு பாத்திரத்த கவிழ்த்து வச்சுட்டா நான் நோன்ப முடிச்சுக்குவேன்னு நினச்சியா?... ம்ம்ம்.. நான் உண்ணா நோன்பு இருந்து பாவிகளோட மனமாற்றத்திற்காக செபிக்க போறேன். சாத்தானே, உன்னால என்ன செயிக்க முடியாது. (மௌனமாக கட்டிலில் அமர்ந்து செபித்துவிட்டு தூங்குதல்)

சாத்தான்: (பலமாக சிரித்தல்)ஹி ஹி ஹி ஹி.. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பாவசங்கீர்தனம் கேட்டு களைப்பா வந்து தூங்குறியா… உன்னய நிம்மதியா தூங்க விட்டுடுவேனா.. பாவிகளுக்கு மன்னிப்பு கொடுத்து நீ அவுங்களுக்கு மோட்ச வாசல திறந்துவிட்டு, நீ என்னய ரொம்ப கோபப்படுத்திக்கிட்டு இருக்க. உனக்கு எதுக்கு இந்த கட்டில்ல தூக்கம். இந்த கட்டில கீழே தள்ளிவிடுறேன் பாரு… (தள்ளிவிட்டு சிரித்தல்) 

வியான்னி: ஏ கொடூர பேயே… கட்டில்ல இருந்து என்னய தள்ளிவிட்டா நான் பயந்துடுவேன்னு நினச்சியா?? நான் கட்டாந்தரையில் கடும் குளிரிலே படுத்து இதையும் ஆன்மாக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுக்க போறேன். நீ என்கிட்ட தோத்து தான் போகனும். (செபமாலையை உயர்த்தி) இயேசுவின் பெயரால் சொல்லுகிறேன் விலகிப் போ பிசாசே…

சாத்தான்: (பலமாக கத்திக்கொண்டு ஓடுதல்) ஆ ஆ ஆ ஆ….


காட்சி –6

ஆரம்பத்தில் எவருமே எட்டிப் பார்க்காத ஆர்சின் ஆலயம் வியான்னியின் வருகைக்குப் பிறகு நிரம்பப் தொடங்கியது. ஒப்புரவு அருளடையாளத்தில் மக்களின் மனங்களை ஊடுருவிப் பார்ப்பார் வியான்னி. வியான்னியின் இந்;;த கடவுள் பணியால் அவர் சாத்தனுடைய சோதனைகள் பலவற்றை நாளும் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டே வந்தார். கடைசி வரை ஓய்வறியாமல் இறைவனுக்காகவே உழைத்து, கடவுளின் அரசில் பாவிகளைச் சேர்க்கும் பாலமாகவே வியான்னி தன்னை மாற்றிக் கொண்டார். வியான்னி தன்னுடைய மண்ணக வாழ்வை நிறைவு செய்யப் போகிற நேரமும் வந்தது. அப்போது…


இடம் -வியான்னியின் அறை

பங்கேற்போர்: வியான்னி, சிறுவர்கள் 3, ஜெனிபர், ரோசி, குடிகாரர், ரூபன், ரிச்சர்ட்.


வியான்னி: (உடல் நலமின்றி படுத்திருத்தல்) ரூபன், ரூபன் …என்னது வெளில ஒரே சத்தமா இருக்கு. 

ரூபன்: பாதர் மக்கள் எல்லாரும் உங்கள பார்கக்கனும்னு வெளில ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்காங்க. எவ்வளவு சொன்னாலும் போக மாட்டோம்னு பிடிவாதமா இருக்காங்க. உங்கள ஒருதடவை பாத்தாதான் போவாங்களாம். 

வியான்னி: இந்த மக்களுக்கு என் மேலதான் எவ்வளவு அன்பு. சரி, வரச்சொல்லு ரூபன்.

ரூபன்: (வெளியே சென்று) பாதர் உங்கள பாக்கனும்னு சொல்லுராரு. உள்ள வாங்க. 

ரிச்சர்ட்: பாதர், உங்கள இந்த நிலமைல பாக்கவே ரொம்ப கஸ்டமா இருக்கு, டாக்டர போயி நான் கையோட கூட்டிட்டு வரவா பாதர்?

வியான்னி: வேணாம் ரிச்சர்ட்…பரலோகம் என் பக்கத்துல இருக்கு. கடவுள் என்ன கூப்பிட்டா நான் வர மாட்டேன்னு சொல்லக்கூடாது. (இருமுதல்)

ஜெனிபர்: ஐயோ பாதர் அப்படி பேசாதீங்க. இந்த ஆர்சுக்கு ஆண்டவரை கூட்டிட்டு வந்ததே நீங்கதான். கடவுளை நாங்க உங்க வழியா தான் பாத்தோம். 

ரோசி: ஆமா பாதர்... டாக்டர கூப்பிடலாம் பாதர். 

வியான்னி: இல்லமா…வேணாம்… என்னுடைய வாழ்க்கையின் ஓட்டத்தை நல்ல படியா முடிச்சிட்டேங்குற திருப்தி எனக்கு இருக்கு. 

குடிகாரர்: பாதர் ....

வியான்னி: ஆண்ட்ரு… நல்லா இருக்கியா… பையன் நல்லா படிக்கிறானா?

குடிகாரர்: பாதர்…என்ன மன்னிச்சிடுங்க பாதர்,..  நான் உங்களுக்கு எதிரா எவ்வளவோ செஞ்சும் நீங்க எனக்காக எப்பவும் செபிச்சீங்களே… உங்கள போய் நான் ரொம்பவே கஷ்டப்படுத்திருக்கேன். நான் எவ்வளவு அசிங்கமாக உங்கள பேசிருந்தாலும், நீங்க எனக்கு எப்பவும் அன்பு காட்டினீங்களே….அய்யோ.. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்… என்னய மன்னிச்சிடுங்க பாதர். 

வியான்னி: எவ்வளவோ பேருக்கு மன்னிப்பு கொடுத்த நான் உன்ன மன்னிக்காம இருப்பேனா… கடவுளுடைய இரகக்கமும் என்னோட அன்பும் உனக்கு எப்பவும் இருக்கும். (இருமுதல்)

ரூபன்: பாதர் பாத்து,… இந்தாங்க தண்ணி….

சிறுவன் 1: கொஞ்சம் வழிவிடுங்க. பி~ப் வராரு.

முதன்மை குரு: பாதர் வியான்னி… கொஞ்சம் கண்ண திறந்து பாருங்க.. உங்கள பார்க்க நம்ம ஆயர் வந்திருக்காரு.

வியான்னி: ஆண்டவரே… (எழ முயற்சித்தல்)

ஆயர்: பாதர் வியான்னி…நீங்க பதட்டப்படாம இருங்க. உங்க முகத்த பார்க்கும் போது எனக்கு வானதூதரோட முகத்த பார்க்கிறமாறி இருக்கு. பாவிகளோட மனமாற்றத்திற்காக கடைசிவரை செபம் தவம்னு நீங்க வாழ்ந்த புனிதமான வாழ்க்கைய பார்க்கும்போது, உண்மையிலேயே ஒரு ஆயரா எனக்கு ரொம்பவே பெருமையாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. யாருமே வர விரும்பாத இந்த ஆர்சுக்கு இன்னக்கி வருசத்துக்கு 20 ஆயிரம் பேரு திருப்பயணிகளா பல இடங்கள்ல இருந்து வர்றாங்கன்னா அதுக்கு நீங்க மட்டும் தான் காரணம்…

வியான்னி: (இருமுதல்)

முதன்மை குரு: வியான்னி நீங்க இந்த ஆர்சுக்காக 41 வருசம் உழைச்சுருக்கீங்க. கடவுளின் நல்ல ஊழியரா நீங்க வாழ்ந்திருக்கீங்க. அதுக்கு இதோ உங்கள சுத்தியிருக்க இந்த மக்கள்தான் சாட்சி.

ரிச்சர்ட்: ஆமாம் பாதர். இந்த ஆர்சுக்கு அடையாளமே எங்க பங்கு பாதர் தான். அவரு எங்களவிட்டு நிரந்தரமா பிரியப் போறாருங்கிறத எங்களால நினைச்சுகூட பார்க்க முடியல.

ரூபன்: அய்யோ பாதரோட நாடித்துடிப்பு குறைஞ்சுகிட்டே வருது.

முதன்மை குரு: எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க… பாதர் வியான்னி நீங்க கடைசியா எங்களுக்கு ஏதும் சொல்ல விரும்புறீங்களா?

வியான்னி: கடவுளோட இரக்கம் மிகப் பெரிது. ஆன்மாக்களை கடவுள்கிட்ட சேர்க்க (இருமுதல்) என்னால முடிந்ததை செஞ்சேன். எல்லாரும் சேர்ந்து இறைவனோட அரசை கட்டியெழுப்பனும். (இருமல்) கடவுளுக்காக உழைக்க நிறைய குருக்கள் முன் வரணும். கடவுளரசு கண்டிப்பா இம்மண்ணில் மலரணும். இறைவா… அனைத்திற்கும் நன்றி. (உயிர் விடுதல்).

ஆயர்: இறைவா. எங்களுக்கு வியான்னியை ஓர் உத்தம குருவாக கொடுத்து, எத்தனையோ ஆன்மாக்களை உம் பக்கம் சேர்த்தீரே… இவர் இப்போது இறந்து போனாலும் இவர் வழியாய் எங்களுக்கு இன்னும் நிறைய ஆன்மீக மறுமலர்ச்சியை எங்கள் திருச்சபைக்கு தாரும். இவரைப்போல புனிதமான குருக்களை திருச்சபைக்கு அதிகமாகத் தாரும். (மக்கள் பக்கம் திரும்பி) வியான்னி, இந்த ஆர்சு மக்களுக்கு கடவுளை காட்டிய கண்ணாடி. அவரைப் போல எல்லாரும் அடுத்தவருக்கு கடவுளைக் காட்டும் கண்ணாடிகளாக வாழட்டும். (கை கூப்பி) வியான்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 


இறுதியாக…..

1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வியான்னி தன் மண்ணக வாழ்வை மகிமைக்குரிய வகையில் நிறைவு செய்தார்;. 1905 ஆம் ஆண்டு திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் வியான்னிக்கு அருளாளர் பட்டம் அளித்தார். 1925 ஆண்டு அவருக்கு திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் வியான்னிக்கு புனிதர் பட்டம் அளித்தார். 

இன்றளவும் இவருடைய உடல் அழிவுறாமல் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. பங்கு குருக்களுக்கும் அனைத்து குருக்களுக்கும் பாதுகாவலராக இருக்கும் புனித ஜான் மரிய வியான்னியைப் போல இன்னும் நிறைய குருக்கள் திரு அவையில் உருவாகவும், இறையழைத்தல் பெருகவும் இறைவன் அருள் செய்வாராக!