உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்)
இயேசுவின் உயிர்ப்பையே ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையின் தோற்றம்
• கிபி 29 லிருந்து இயேசுவின் உயிர்ப்பு நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்டதென்று வரலாறு சொல்கிறது.
• ஆனாலும், கிபி 325 இல் உரோமையை ஆட்சி செய்த மன்னன் கான்ஸ்டன்டைன் என்பவன் காலத்திலேதான் இது பரவலானதாகவும், பிரபலமாகதாகவும் வரலாறு கூறுகிறது.
ஈஸ்டர் என்பதன் பொருள் என்ன?
• கிரேக்கத் தொன்மங்களிலே ‘ஈஸ்டர்’ என்பது விடியலுக்கான பெண் தேவதையின் பெயராகும்.
• இந்த வார்த்தைக்கு வசந்த காலம் என்ற அர்த்தமும் உண்டு.
• வசந்த காலத்தின் தொடக்கத்தில்தான் ஈஸ்டர் தேவதையின் பண்டிகையும் கொண்டாடப்பட்டது.
ஈஸ்டரும் முயலும்
• ஈஸ்டர் தேவதையின் விலங்கு முயல்.
• இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்கள் புல்வெளிகளில் முயல்கள் துள்ளிவிளையாடுவதைப் பார்த்தால் வசந்தகாலம் ஆரம்பமானதென அறிந்துகொண்டனர்.
• இவ்வாறு முயல்களின் மகிழ்வையும், வசந்தகாலத்தின் வருகையையும் தொடர்புபடுத்தி இதையே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடத்தொடங்கினர்.
• இன்றும் ஐரோப்பியாவில் மதச்சார்பற்ற நாடுகள்கூட ஈஸ்டர் பண்டிகையின்போது முயல் வடிவிலான தின்பண்டங்களைச் செய்து உண்பது வழக்கம்.
ஈஸ்டரும் முட்டையும்
• முட்டை என்பது வாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது ஐரோப்பியரின் பாரம்பரிய நம்பிக்கை.
• புதுவாழ்வு மற்றும் புதுப்பிறப்பின் குறியீடாக முட்டை கருதப்பட்டது.
• முட்டை அடைகாக்கப்பட்டு புதிய உயிர் உருவாவதுபோன்று, வசந்த காலத்தில் பூமி மீண்டும் பிறக்கிறதென்று கருதிய ஐரோப்பியர்கள் ஈஸ்டர் நாளில் சாயம் பூசப்பட்ட அல்லது வண்ணம் தீட்டப்பட்ட முட்டைகளை பரிசளித்துக் கொண்டாடினர்.
• கிறிஸ்தவ சமயக் கண்ணோட்டத்தில் முட்டை கல்லறையின் குறியீடாகவும், முட்டை உடைபடுவது இயேசுவின் உயிர்ப்பிற்கான குறியீடாகவும் வழங்கப்படுகிறது.
• முட்டைகளின் மீது பெரும்பாலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. இது இயேசு நமக்காக இரத்தம் சிந்தியதைக் குறித்துக்காட்டுகிறது.
விவிலியமும் இயேசுவின் உயிர்ப்பும்
• விவிலியத்தில் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் உயிர்ப்பு பற்றிய பல்வேறு தரவுகளைத் தருகின்றன.
• இயேசு எவ்வாறு உயிர்த்தார் என்பதையும், உயிர்ப்பு எப்படி நிகழ்ந்தது என்னும் செய்திகளைத் தருவதைவிட, அது ஏன் நிகழ்ந்தது என்பதற்கே நற்செய்தி நூல்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
• தன் உயிர்ப்பு நிகழ்வின் மூலமாக இயேசு உலகின் எல்லாவற்றையும் வெற்றிக்கொண்டார் என்பதே அது குறித்துக் காட்டும் செய்தி.
• இயேசுவின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய சீடர்கள் நம்பிக்கையற்று, சோர்வுற்று, தளர்ந்திருந்த சமயத்தில் இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை சந்தித்து தைரியமும், ஊக்கமும் அளித்து, இறைப்பணிக்காக மீண்டும் அவர்களை நியமித்தார்.
• இயேசுவின் உயிர்த்த தோற்றத்தை ஓர் உண்மை நிகழ்வாக விவிலியம் நமக்குக் காட்டுகிறது.
• சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் ஒரு கனவோ, உளவியல் மாற்றமோ அல்ல, மாறாக இது உண்மை நிகழ்வு ஆகும்.
உயிர்ப்புக்கான மூன்று சான்றுகள்
1) காலியாயிருந்த இயேசுவின் கல்லறை
2) உயிர்ப்புக்குப் பிறகான இயேசுவின் தோற்ற நிகழ்வுகள்
3) திருத்தூதர்கள் வாழ்வில் காணப்பட்ட திடீர் மாற்றம்