ஈசாய் மரம்
திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி
• இது திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி.
• காலத்தால் மிகப் பழமையான ஒரு மரபும் சடங்கும் ஆகும்.
• ஆதாம் முதல் இயேசு வரை வாழ்ந்த பழைய ஏற்பாட்டின் மிகமுக்கியமான இயேசுவின் முன்னோர்களை நினைவு கூரும் வழிமுறை.
• இயேசுவின் வருகைக்காக காத்திருந்த பழைய ஏற்பாட்டு மனிதர்களை, அன்றாடம் அடையாள வடிவில் ஒரு மரத்தில் தொங்கவிடச் செய்வதன் வழியாக, மெசியாவின் வருகைக்காக பழைய ஏற்பாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்ததை நாமும் தியானிக்க முடிகிறது.
• இம்மரத்தில் தொங்கவிடப்படும் விவிலிய மாந்தர்கள் மூலமாக, இயேசுவின் பிறப்புக்கு முந்தைய பழைய ஏற்பாட்டின் மீட்பின் வரலாற்றினை இப்பக்தி முயற்சி திரும்பிப் பார்க்க வைக்கிறது.
• கிறிஸ்துமஸ் மரத்தினை விவிலிய ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அடையாளப்படுத்தும் அர்த்தமுள்ள பக்தி முயற்சி.
வரலாறு
• மத்தியக் காலங்களில் திரு அவையில் காணப்பட்ட மரபு இது.
• ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில பேராலயங்களில் காணப்படும் ஓவியங்களில் இது பற்றி பார்க்க முடியும்.
• குறிப்பாக கி.பி. 1260 இல் அர்ப்பணிக்கப்பட்ட சார்ட்ரஸ் பேராலயத்தின் சன்னல் கண்ணாடியில் ஈசாய் மரத்தின் மரபைச் சுட்டிக்காட்டும் ஓவியத்தைக் காணமுடியும்.
• இவ்வகையான ஓவியங்களில் காணப்படும் மரத்தின் கிளைகளில் பழைய ஏற்பாட்டு மனிதர்களின் படங்களும், மரத்தின் உச்சியில் இயேசுவின் தாய் மரியா மற்றும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் படங்களும், அதற்கு மேலாக இயேசுவின் படமும் வரையப்பட்டிருக்கும்.
பயன்பாடு
• குடும்பங்களில் அனைவரும் இணைந்து செபிக்கவும், தியானிக்கவும் இது உதவுகிறது.
• குழந்தைகளுக்கு பழைய ஏற்பாட்டின் முக்கியமான மனிதர்களைப் பற்றிக் கற்றுத்தர இது பயன்படுகிறது.
• குடும்பங்கள், குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் பங்குகள் ஆகியவற்றில் கிறிஸ்து பிறப்பை தகுந்த விதத்தில் கொண்டாடுவதற்கான நல்ல தயாரிப்பாக இது அமைகிறது.
• மீட்பின் வரலாற்றை மீண்டுமாக மீள்பார்வை செய்வதற்கான நல்ல வாய்ப்பாக இது இருக்கிறது.
• கதையாடல்கள் வடிவிலும், அடையாளங்கள் வடிவிலும், குறியீடுகள் வடிவிலும் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதத்தில் பழைய ஏற்பாட்டு மாந்தர்களை நமக்கு இது அறிமுகப்படுத்துகிறது.
• விவிலியத்தை மையப்படுத்தியதாகவும், இறைவார்த்தையின் ஒளியில் அமைக்கப்பட்டதாகவும் இம்மரபு அமைந்துள்ளது.
• குறிப்பு: டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை கிறிஸ்து பிறப்புக்கு தகுந்த விதத்தில் நம்மைத் தயாரிப்பு செய்வதற்காக 24 அடையாளங்களும், அவற்றிற்கான தியானச் சிந்தனைகளும் தொடர்ந்து கொடுக்கப்படும்.