ஈசாய்
எசாயா 11:1
இன்றைய நாளின் சிந்தனை : ஈசாய்
இன்றைய நாளின் அடையாளம் : மரம்
யார் இந்த ஈசாய்? தன்னிகரற்ற தனிப்பெரும் அரசராக ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டை உருவாக்கிய மற்றும் ஆட்சி செய்த பெருமை தாவீது அரசரைச் சேரும். அந்த தாவீது அரசருடைய தந்தையின் பெயர்தான் ஈசாய். இவரது வழி மரபில் தான் இறைமகன் இயேசு பிறப்பார் என்று இறைவாக்கினர் எசாயா முன்னிறிவித்தார்.
எதற்கு இந்த ஈசாய் மரம்? கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாட பல வகையான தயாரிப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் ஈசாய் மரம் பக்தி முயற்சி. இதன் வழியாக நாம், படைப்பின் தொடக்கத்திலிருந்து இவ்வுலகம் இறைமகன் இயேசுவின் வருகைக்காக எவ்வாறெல்லாம் காத்திருந்தது என்றும், எப்படியெல்லாம் தயாரித்தது என்றும் அறிய முடிகிறது. திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறியீடானது இந்த ஈசாய் மரத்திலே தொங்கவிடப்படும். இப்படி மெசியாவின் வருகைக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்களினம் எதிர்பார்த்திருந்தது என்பதை எண்பிக்க, இயேசுவின் முன்னோர்களை இந்த ஈசாய் மரத்தில் பதித்து தினமும் தியானிப்பது வழக்கம்.
இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவன் நட்டு வளர்த்த தோட்டம். அவ்வப்போது ஏற்பட்ட பகைவர்களின் படையெடுப்பால் ஆபத்தையும், அழிவையும் இஸ்ரயேல் இனம் சந்திக்க நேரிட்டது. தங்களைக் காப்பாற்ற கடவுள் வருவார், மீட்பதற்கு மெசியா பிறப்பார் என்ற நம்பிக்கையை மட்டும் இறுதி வரை அவர்கள் இழக்கவில்லை. இதைத்தான் இறைவாக்கினர் எசாயா ‘ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்’ என்று சொன்னார்.
எல்லாம் முடிந்தது என்று நாம் நினைத்தாலும், முடிவையும் தொடக்கமாக மாற்றக் கூடியவர் நம் கடவுள். கருகினாலும் கடவுளின் கருணையால் மீண்டும் உருவாவோம் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. நம் அழிவுகளுக்கு மத்தியிலும் நமக்கு ஆரம்பம் பிறக்கும் என்ற இறை நம்பிக்கைத் தளிரை நம் மனங்களிலும் துளிர்விடச் செய்யும் நாள் இந்நாள்.
செபம்: அன்பான இறைவா! எம் மீட்பராம் இயேசுவின் வருகைக்காக நாங்கள் எங்களைத் தகுதியாகத் தயாரிக்கவும், பொறுமையோடு காத்திருக்கவும், நம்பிக்கையோடு எதிர்நோக்கவும் அருள் தாரும். ஆமென்.