படைப்பு
தொடக்க நூல் 2:3
இன்றைய நாளின் குறியீடு : உலகமும் கோள்களும்
நாம் காணும் இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. தொடக்க நூலில் நாம் படிக்கிறோம்: ஆண்டவர் ஆறு நாள்களாக படைப்புகள் அனைத்தையும் படைத்தார். தான் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. இப்பிரபஞ்சம் கடவுளின் கைவண்ணம். மனிதரைப் படைப்பின் சிகரமாக படைக்க விரும்பிய இறைவன், அதற்கு முன்னதாகவே அனைத்தையும் படைத்துவிடுகிறார். இவ்வாறு அனைத்தும் மனிதருக்காகவே படைக்கப்பட்டன. எனவேதான் படைப்புகள் முழுவதையும் ஆண்டு நடத்துகிற பொறுப்பை கடவுள் மனிதருக்கு கொடுக்கிறார்.
படைப்பு என்பது உலகின் முதல் அதிசயம். அதுவே மூத்த அதிசயம். கடவுள் ஒன்றுமில்லாமையின்று இந்த அழகிய உலகைப் படைத்தார். தன்னுடைய வார்த்தையால் அனைத்தையும் வடிவமைத்தார். தொடக்கத்தில் உருவற்று, வெறுமையாய் இருந்த உலகம் கடவுளின் கை வண்ணத்தால், கவினுறு ஓவியமாய் காட்சி அளிக்கிறது.
படைப்பை புரிந்துகொள்ள அறிவியல் ஆசைப்படுகிறது. ஆனால் அணுவைக்கூட அப்பட்டமாக அப்படியே அறிந்துகொள்ள அறிவியலால் முடியவில்லை. அறிவால் ஆண்டவரைச் சிறைபிடிக்க முடியாது. பிரபஞ்சத்தின் படைப்பு இன்னும் நமக்கு வியப்பே. படைத்தவரை படைப்புகளில் பார்த்து மகிழ்கிறோம். படைப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் படைத்தவரின் பேராற்றல் நமக்கு நினைவுக்கு வருகிறது. படைப்புகளே இவ்வளவு இன்பம் என்றால் படைத்தவர் எவ்வளவு பேரின்பமயமானவர்?
அகிலம் அனைத்தும் இறைவனின் கைவண்ணம் என்பதை உணருவோம். படைப்புகளைக் காணும் போதெல்லாம் படைத்தவரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுவோம். நமக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்துப் படைத்த நல்லவரும், வல்லவருமான கடவுளை நன்றியோடு துதிக்க வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பான இறைவா! படைப்பு அனைத்தையும் படைத்தீர் மனிதருக்காக. மனிதரைப் படைத்தீர் உம்மைப் புகழ. நாங்கள் வாழும் இந்த அழகான உலகிற்காக உமக்கு நன்றி. நாங்கள் பார்க்கும், பயன்படுத்தும் அனைத்திலும் உமது பாசத்தையும், பராமரிப்பையும் கண்டுணர எமக்கு அருள்தாரும். ஆமென்.