Thursday, 2 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 3

முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்



தொடக்கநூல் 1: 27

இன்றைய நாளின் சிந்தனை    :     முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்

இன்றைய நாளின் குறியீடு     :     பாம்பும் கனியும்


படைப்புகள் அனைத்தின் சிகரமாக கடவுள் மனிதரைப் படைத்தார். யாவற்றையும் தன் வாய்ச் சொல்லால் உண்டாக்கிய கடவுள், தன்னுடைய கைகளால் மண்ணைப் பிசைந்து மனிதனை உண்டாக்கினார். இறைவனின் உருவிலும், சாயலிலும் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இறைவனது உயிர் மூச்சு, மனிதருக்குள் இருக்கிறது. இவ்வாறு மிகச் சிறப்புக்குரிய விதத்தில் முதல் பெற்றோரான ஆதாமையும், ஏவாளையும் இறைவன் படைத்தார். அவர்களைத் தன்னுடைய ஏதேன் தோட்டத்தில், தன்னோடு வைத்திருந்து, தன்னுடைய பேரின்பத்தில் பங்களித்திருந்தார். ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் மரத்தின் கனியை மட்டும் முதல் பெற்றோர் உண்ணக்கூடாது என்பதை கடவுள் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தார்.

ஆனால் ‘கடவுளைப் போல் ஆவீர்கள்’ என்ற பாம்பின் பொய்யுரையைக் கேட்டு விலக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்கள் விரும்பிப் பறித்து உண்டார்கள். அலகையின் ஆசை வார்த்தைகளை நம்பி பாவப் படுகுழியில் விழுந்தனர். கடவுளால் முதல் பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனித இனம் தவறிழைத்தாலும், அவர்கள் மீது ஆண்டவருக்கு இன்னும் அக்கறை இருக்கத்தான் செய்தது. ‘உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்’ (தொநூ 3:15) என்று பாம்பிடம் கடவுள் கூறிய வார்த்தைகளில் மனித இனத்தின் மீட்புத் திட்டம் முதன் முதலாக அப்போதே முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பது நமக்குப் புலப்படுகிறது.

கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவோம் என உணருவோம். இனி பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளைவிட்டு விலகி நிற்போம் என்றும் உளப்பூர்வமாகத் தீர்மானிப்போம். கடவுளின் கட்டளைகளைக் கருத்தாய்க் கடைபிடித்து கடவுளின் அன்புப் பிள்ளைகளாய் வாழ முயல வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! உம்முடைய உருவிலும், சாயலிலும் எங்களைப் படைத்ததற்காக நன்றி. நீதியின்படி நீர் எங்கள் குற்றங்களைத் தண்டித்தாலும், உம்முடைய இரக்கத்தை எங்களுக்குக்காட்ட நீர் ஒருபோதும் தவறியதில்லை. உம் கட்டளைகளின்படி நாங்கள் தொடர்ந்து வாழவும், எங்கள் பலவீன நேரங்களில், உம் இரக்கத்தால் நீர் எங்களைத் தாங்கிடவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.


ஈசாய் மரம் - டிசம்பர் : 2

 படைப்பு



தொடக்க நூல் 2:3

இன்றைய நாளின் சிந்தனை :படைப்பு

இன்றைய நாளின் குறியீடு : உலகமும் கோள்களும்


நாம் காணும் இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. தொடக்க நூலில் நாம் படிக்கிறோம்: ஆண்டவர் ஆறு நாள்களாக படைப்புகள் அனைத்தையும் படைத்தார். தான் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. இப்பிரபஞ்சம் கடவுளின் கைவண்ணம். மனிதரைப் படைப்பின் சிகரமாக படைக்க விரும்பிய இறைவன், அதற்கு முன்னதாகவே அனைத்தையும் படைத்துவிடுகிறார். இவ்வாறு அனைத்தும் மனிதருக்காகவே படைக்கப்பட்டன. எனவேதான் படைப்புகள் முழுவதையும் ஆண்டு நடத்துகிற பொறுப்பை கடவுள் மனிதருக்கு கொடுக்கிறார்.

படைப்பு என்பது உலகின் முதல் அதிசயம். அதுவே மூத்த அதிசயம். கடவுள் ஒன்றுமில்லாமையின்று இந்த அழகிய உலகைப் படைத்தார். தன்னுடைய வார்த்தையால் அனைத்தையும் வடிவமைத்தார். தொடக்கத்தில் உருவற்று, வெறுமையாய் இருந்த உலகம் கடவுளின் கை வண்ணத்தால், கவினுறு ஓவியமாய் காட்சி அளிக்கிறது. 

படைப்பை புரிந்துகொள்ள அறிவியல் ஆசைப்படுகிறது. ஆனால் அணுவைக்கூட அப்பட்டமாக அப்படியே அறிந்துகொள்ள அறிவியலால் முடியவில்லை. அறிவால் ஆண்டவரைச் சிறைபிடிக்க முடியாது. பிரபஞ்சத்தின் படைப்பு இன்னும் நமக்கு வியப்பே. படைத்தவரை படைப்புகளில் பார்த்து மகிழ்கிறோம். படைப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் படைத்தவரின் பேராற்றல் நமக்கு நினைவுக்கு வருகிறது. படைப்புகளே இவ்வளவு இன்பம் என்றால் படைத்தவர் எவ்வளவு பேரின்பமயமானவர்? 

அகிலம் அனைத்தும் இறைவனின் கைவண்ணம் என்பதை உணருவோம். படைப்புகளைக் காணும் போதெல்லாம் படைத்தவரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுவோம். நமக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்துப் படைத்த நல்லவரும், வல்லவருமான கடவுளை நன்றியோடு துதிக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! படைப்பு அனைத்தையும் படைத்தீர் மனிதருக்காக. மனிதரைப் படைத்தீர் உம்மைப் புகழ. நாங்கள் வாழும் இந்த அழகான உலகிற்காக உமக்கு நன்றி. நாங்கள் பார்க்கும், பயன்படுத்தும் அனைத்திலும் உமது பாசத்தையும், பராமரிப்பையும் கண்டுணர எமக்கு அருள்தாரும். ஆமென்.


Wednesday, 1 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 1

 ஈசாய் 



எசாயா 11:1

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாய்

இன்றைய நாளின் அடையாளம் : மரம் 


யார் இந்த ஈசாய்? தன்னிகரற்ற தனிப்பெரும் அரசராக ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டை உருவாக்கிய மற்றும் ஆட்சி செய்த பெருமை தாவீது அரசரைச் சேரும். அந்த தாவீது அரசருடைய தந்தையின் பெயர்தான் ஈசாய். இவரது வழி மரபில் தான் இறைமகன் இயேசு பிறப்பார் என்று இறைவாக்கினர் எசாயா முன்னிறிவித்தார். 

எதற்கு இந்த ஈசாய் மரம்? கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாட பல வகையான தயாரிப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் ஈசாய் மரம் பக்தி முயற்சி. இதன் வழியாக நாம், படைப்பின் தொடக்கத்திலிருந்து இவ்வுலகம் இறைமகன் இயேசுவின் வருகைக்காக எவ்வாறெல்லாம் காத்திருந்தது என்றும், எப்படியெல்லாம் தயாரித்தது என்றும் அறிய முடிகிறது. திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறியீடானது இந்த ஈசாய் மரத்திலே தொங்கவிடப்படும். இப்படி மெசியாவின் வருகைக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்களினம் எதிர்பார்த்திருந்தது என்பதை எண்பிக்க, இயேசுவின் முன்னோர்களை இந்த ஈசாய் மரத்தில் பதித்து தினமும் தியானிப்பது வழக்கம்.

இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவன் நட்டு வளர்த்த தோட்டம். அவ்வப்போது ஏற்பட்ட பகைவர்களின் படையெடுப்பால் ஆபத்தையும், அழிவையும் இஸ்ரயேல் இனம் சந்திக்க நேரிட்டது. தங்களைக் காப்பாற்ற கடவுள் வருவார், மீட்பதற்கு மெசியா பிறப்பார் என்ற நம்பிக்கையை மட்டும் இறுதி வரை அவர்கள் இழக்கவில்லை. இதைத்தான் இறைவாக்கினர் எசாயா ‘ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்’ என்று சொன்னார்.

எல்லாம் முடிந்தது என்று நாம் நினைத்தாலும், முடிவையும் தொடக்கமாக மாற்றக் கூடியவர் நம் கடவுள். கருகினாலும் கடவுளின் கருணையால் மீண்டும் உருவாவோம் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. நம் அழிவுகளுக்கு மத்தியிலும் நமக்கு ஆரம்பம் பிறக்கும் என்ற இறை நம்பிக்கைத் தளிரை நம் மனங்களிலும் துளிர்விடச் செய்யும் நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! எம் மீட்பராம் இயேசுவின் வருகைக்காக நாங்கள் எங்களைத் தகுதியாகத் தயாரிக்கவும், பொறுமையோடு காத்திருக்கவும், நம்பிக்கையோடு எதிர்நோக்கவும் அருள் தாரும். ஆமென்.