இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் பழங்கால ஓவியம்
பல நூற்றாண்டுகளாக இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீதான பக்தி கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீதான பக்தி கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், 17 ஆம் நூற்றாண்டு வரை குறிப்பாக புனித மார்கரெட் மேரி அலகோக்கிற்கு தனிப்பட்ட வெளிப்பாடுகள் வழங்கப்படும் வரையில் இது பிரபலமான ஒரு பக்திமுயற்சியாக இருக்கவில்லை. இருப்பினும் புனித மெக்டில்டா (இறப்பு 1298) மற்றும் புனித கெர்ட்ரூட் (இறப்பு 1302) ஆகியோர் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீது சிறப்பான பக்தி கொண்டிருந்தனர் என்பதும் தெரியவருகிறது. ஆனால் அதுவரை கிறிஸ்தவர்கள் ‘கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்களுக்கு’ வலுவான பக்தியைக் கொண்டிருந்தனர். இதற்கான முக்கியக் காரணம் யாதெனில் புனித பூமியிலிருந்து சிலுவைப்போருக்குப் பின்பாகத் திரும்பியவர்கள் இயேசுவின் திருப்பாடுகளின் மீது கொண்டிருந்த பேரார்வம் ஆகும். இடைக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் ஆழத்தை அவர் அனுபவித்த பல்வேறு காயங்கள் மூலம் உணர்ந்தனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இதயத்தைத் துளைத்த ‘மார்பு’ அல்லது ‘பக்க’ காயம் ஆகும்.
கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி, ‘கிறிஸ்துவின் காயங்களுக்கு வணக்கம் செலுத்தும் ஒரு திருவிழாவுக்கான ஆரம்ப சான்றுகள் துரிங்கியாவின் ஃபிரிட்ஸ்லரின் மடாலயத்திலிருந்து வந்தன. அங்கு பதினான்காம் நூற்றாண்டில் இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவின் எண்கிழமைகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு விழா கொண்டாடப்பட்டது. … பதினைந்தாம் நூற்றாண்டில் இத்திருவிழா வெவ்வேறு நாடுகளுக்கு, சாலிஸ்பரி (இங்கிலாந்து), ஹீஸ்கா மற்றும் ஜாகா (ஸ்பெயின்), வியன்னா மற்றும் டூர்ஸ் வரை பரவியது. மேலும் கார்மல் துறவற சபையினர், பிரான்சிஸ்கன் துறவற சபையினர், தோமினிகன் துறவற சபையினர் மற்றும் பிற துறவற சபையினரின் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டது.’
தொடக்கத்தில் இயேசுவின் காயங்களுக்கான விழா உலகளாவிய ஒன்றாக இல்லை. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த விழா நடந்த அதே நாளில் தனது தூய்மைமிகு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவை விரும்புவதாக இயேசு புனித மார்கரெட் மேரி அலகோக்கிற்கு வெளிப்படுத்தினார்.
புனித மார்கரெட் மேரியின் வெளிப்பாடுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்துவின் மற்ற காயங்களுடன் இயேசுவின் தூய்மைமிகு இருதயமும் பொதுவாக ஒரு குறியீட்டு முறையில் சித்தரிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்திலிருக்கும் இந்த ஓவியம் கி.பி. 1490 - 1500 ஆண்டைச் சார்ந்தது. இது இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் ஆரம்பகால ஓவியங்களுள் ஒன்றாகும். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலுள்ள போட்லியன் நூலக காப்பகத்தில் உள்ளது.
இப்படத்தில் இயேசுவின் ஐந்து காயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன, மையத்தில் ஓர் எளிய இதயம் மற்றும் அதிலிருந்து பீறிட்டு வழியும் இரத்தம் ஒரு கிண்ணத்தில் ஊற்றுகிறது. இது மீண்டும் இயேசுவின் திருப்பாடுகள், இயேசுவின் தூய்மைமிகு இருதயம் மற்றும் தூய்மைமிகு நற்கருணை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு தெளிவான தொடர்பை வெளிப்படுத்துகிறது.
பிற்காலத்தில் இயேசு தனது இருதயத்தை இவ்வுலகிற்கு வழங்குகிறார் என்கிற கருத்தின் அடிப்படையில், இயேசுவின் தூய்மைமிகு இருதயம் இயேசுவின் கைகளில் இருப்பதுபோன்று சித்தரிக்கப்பட்டது. இது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் வழக்கத்தில் இல்லை. இப்போது இதுவே உலகில் இயேசுவின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாகும்.
இருப்பினும் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தையும் கிறிஸ்துவின் பாடுகளினால் ஏற்பட்ட திருக்காயங்களையும் ஒன்றோடொன்று இணைத்தே நினைவில் கொள்வது மிகவே முக்கியம். ஏனெனில் இயேசுவின் அவலகரமான துன்பம் மனிதகுலத்தின் மீதான அவரது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
உதவி: