தூணின் அன்னை
(சரகோசா – ஸ்பெயின்)
திரு அவையின் வரலாற்றில் புனித மரியன்னை முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள எப்ரோ ஆற்றின் கரையில் அமைந்துள்ள சரகோசா என்னுமிடத்தில் புனித யாக்கோபுவிற்கு (நற்செய்தியாளரான புனித யோவானின் சகோதரர்) காட்சியளித்தார் என்று திரு அவையின் மரபுவழிச் செய்திகளின்படி நாம் அறிகிறோம். பதிவுசெய்யப்பட்ட மற்ற எல்லா மரியன்னையின் திருக்காட்சிகளைப் போலல்லாமல், இது மரியாவின் மண்ணக வாழ்க்கையின் போதே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரு அவையின் பாரம்பரியத்தின்படி, இன்றைய ஸ்பெயினில் உள்ள பிறசமயத்தினருக்கான புனித யாக்கோபுவின் கடினமான மறைபரப்புப் பணியில் அவருக்கு மிகவும் தேவை ஏற்படும்போது, அவரை ஊக்குவிக்க மரியன்னை அவருக்குத் தோன்றுவார் என்று மரியன்னையே அவருக்கு அக்காட்சியில் உறுதியளித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
கி.பி 40 ஆம் ஆண்டில், சனவரி இரண்டாம் நாள், டோபர்ட் கரையில் ஓர் இரவு புனித யாக்கோபு மற்றும் அவரது எட்டு சீடர்கள் செபம் செய்துகொண்டிருந்தபோது, தன் கையில் குழந்தை இயேசுவுடன் ஒரு தூணில் நின்றவாறு காட்சியளித்த புனித மரியன்னை, அவர்களிடம் அந்த இடத்தில் ஓர் ஆலயத்தை கட்டும்படி கேட்டுக்கொண்டார். ‘என் பாதுகாப்பின் கீழ் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அனைவருக்கும், கடவுள் என் பரிந்துரையின் மூலம் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்காக, அவ்வாலயம் அத்தருணத்திலிருந்து உலகின் இறுதிக் காலம் வரையிலும் நிலைத்து நிற்கும்.’ என்ற வாக்குறுதியையும் புனித மரியன்னை வழங்கினார்.
சராகோசாவில் உள்ள தூணின் அன்னை ஆலயம் தான், வரலாற்றில் புனித மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் ஆகும். அன்னையின் வாக்கின்படியே, இவ்வாலயம் படையெடுப்புகள் மற்றும் போர்களில் இருந்து தப்பித்து இன்றுவரை நிலைத்திருக்கிறது. 1936 முதல் 1939 வரையிலான ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் மூன்று குண்டுகள் இந்த ஆலயத்தில் வீசப்பட்டன. ஆனால் அவை எதுவும் வெடிக்கவில்லை.
இப்போது ஆலயத்தில் ஒரு தூணில் நிற்கும் அன்னையின் சிறிய மரத்தாலான திருவுருவச் சிலையானது புனித யாக்கோபுவிற்கு புனித மரியன்னை காட்சியளித்தபோது வழங்கியதாக கூறப்படுகிறது.
திருவிழா கொண்டாடப்படும் நாள்: அக்டோபர் 12
செபம்: தூணின் அன்னை என்று பெருமையோடு அழைக்கப்படும் இறைவனின் புனித அன்னையே! தாழ்மையுடன் உம்மை அணுகி, உம்மிடம் வேண்டுதல் செய்யும் எனக்கு நீர் ஒரு பரிந்துரையாளராகவும், அருளின் வாய்க்காலாகவும் இருந்து, இறைவனின் மீதான என் நம்பிக்கையை தூணைப் போல் உறுதிப்படுத்தியருளும். ஆமென்.