இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்!
யோவா 8:51-59
நாம் வாழும் வாழ்க்கைக்கு தொடக்கமும் முடிவும் உண்டு. ஆனால் இவ்வாழ்வைக் கொடுத்த கடவுளின் வார்த்தைக்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. இவ்வாறு தொடக்கமும் முடிவும் இல்லாத இந்த இறைவார்த்தையே நம்முடைய வாழ்வுக்கு வழியும் ஒளியும் என்கிறது திருப்பாடல். காலம் நிறைவுற்றபோது இந்த இறைவனின் வார்த்தையே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்தது. முதலும் முடிவும் இல்லாத வார்த்தை மனிதரானதன் நோக்கம் நாமும் இறைவனைப் போன்று இறவாமையில் இணைந்திட வேண்டுமென்பதே ஆகும்.
உடல் கொண்ட அனைத்தும் சாவை சந்திக்க வேண்டும். இந்த சாவு உடலைத் தீண்டமே ஒழிய ஆன்மாவை அல்ல. உடலுக்குள் உறையும் ஆன்மா சாகாது. அந்த சாகாத ஆன்மா இறைவனின் இறவாமையில் இணைந்து இன்புற்றிட வழி சொன்னவர்தான் இயேசு. ஆம், மனிதர்களும் சாவைக் கடந்து வாழ முடியும் என்பது மனிதராகப் பிறந்த இயேசு நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பது நிலைவாழ்வை உறுதி செய்யும் என்கிறார் இயேசு. என்றும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தையை கடைப்பிடிப்பது மட்டுமே நமக்கான வழி.
திருச்சட்டத்தை நிறைவேற்றவே வந்தேன் என்றார் இயேசு. திருச்சட்டமும் அனைத்து இறைவாக்குகளும் இயேசுவில்தான் நிறைவேறின. தந்தையாம் கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ இயேசு ஒருபோதும் தயங்கியதுமில்லை, அதைத் தவிர்த்ததுமில்லை. கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வது எப்படி என்பதை இயேசுவே கற்றுக்கொடுத்துள்ளார். சடங்காச்சாரமாகவோ, சம்பிரதாயத்திற்காகவோ அன்று, மாறாக உண்மை அர்த்தம் உணர்ந்து உளப்பூர்வமாக உறுதிப்பாட்டுணர்வோடு இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ இயேசுவின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
இறவாமையை அடைய இறைவார்த்தையைக் கடைப்பிடிக்க கற்றுத்தரும் இயேசு, இவ்வாறு கடைப்பிடிப்போர் அடையும் சவால்களையும், சிரமங்களையும் முன்னுணர்த்துகிறார். மனிதர்களின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்போர் பலர் இருக்கையில் இறைவனது வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவும் அதனால் சிரமப்படவும் இயேசு அழைக்கிறார். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்போரை மனிதர்கள் மட்டம் தட்டலாம். ஆனால் இறைவனோ அவர்களுக்கு பெருமை சூட்டுகிறார் என்றும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இறவாமை நமது இலக்கென்றால், இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பதே நம்முடைய வழியாகட்டும். நிலை வாழ்வு நமக்கான பரிசாகிட, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோம். இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்!