தவக்காலத் திருவுரைகள்
பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!
நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒருபோதும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஆகவே நமது பாதுகாப்பு என்பது நம்முடைய அடிப்படை எதிர்பார்ப்பாகவும், அத்தோடு நம்முடைய சுகமான வாழ்வு என்பது நம்முடைய அடிப்படை ஏக்கமாகவும் எல்லோருக்கும் இருக்கிறது. எதிர்பாராமல் நம் வாழ்க்கையில் வரும் பாதுகாப்பற்ற சூழலை சந்திப்பதில் பலரும் சோர்ந்து போகிறார்கள் அல்லது சோடை போகிறார்கள்.
நம்முடைய பாதுகாப்புக்காவும் வசதிக்காகவும் நாம் பலவற்றை விரும்பிச் செய்கிறோம். எவையெல்லாம் நம்மை எவ்வித தொல்லையும் தொந்தரவும் இல்லாமல் வைத்திருக்குமோ அவற்றையே விரும்பிச் செய்ய எண்ணுகிறோம். எவையெல்லாம் நமக்கு வருத்தமும் வேதனையும் தராதோ அவற்றையே விரும்பித் தேடுகிறோம். எவையெல்லாம் நம் வாழ்வில் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தாதோ அவற்றையே நமது அன்றாட பழக்க வழக்கங்களாக்கிவிடுகிறோம்.
பாதுகாப்பு வளையத்தினுள்ளேயே எப்போதும் இருப்பவர்களின் வாழ்க்கை ஆமைக்கு ஒப்பானது. சிறிது ஆபத்து வருவதை உணர்ந்ததும் ஆமை தன்னுடைய ஓட்டுக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். அதைப் போலவே நம்மில் பலரும் ஆபத்தான சூழலை, பாதுகாப்பற்ற சூழலை, வசதி குறைவான சூழலை சந்திக்க தயக்கம் காட்டுவதுண்டு. ஆபத்தை விரும்பாத ஆமை நல்ல ஆளுமையை உருவாக்க சரியான எடுத்துக்காட்டு அல்ல. பாதுகாப்பையும், வசதியான சூழலையும் எப்போதும் விரும்புகிற ஆமையின் மனநிலை கிறிஸ்துவின் மனநிலைக்கு ஏற்புடையதாகாது.
பாதுகாப்பற்ற சூழல்கள் மட்டுமே நமது வாழ்வுக்கு வளர்ச்சியைக் கொணரும். சவாலான நேரங்கள் மட்டுமே நமது வாழ்வை சிகரத்திற்கு அழைத்துப்போகும். சிரமமான தருணங்கள் மட்டுமே நமது வாழ்வில் முன்னேற்றத்தை வழங்கும். ஆக, பாதுகாப்பு வளையங்களுக்கு வெளியே அடியெடுத்து வைப்பவர்களே, தங்கள் வாழ்வுக்கு மகத்தான பாதையை அமைத்துக்கொள்கிறார்கள்.
இயேசுவைக் கொல்ல யூதர்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் வெளிப்படையாக திருவிழாவில் மக்களுக்கு போதிக்கிறார். அனைவரும் அதைக் குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். சாவு துரத்துகிறது என்பதற்காக, வாழ்வை பிறருக்கு பயன் தரும் விதத்தில் வாழ இயேசு எப்போதும் மறந்ததே இல்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் ஒரு நாளும் பதுங்கி இருந்தவர் அல்ல இயேசு. தன்னுடைய வசதிகளை முன்னிறுத்தி இயேசு என்றும் செயல்பட்டதே இல்லை. கிறிஸ்துவின் பணி வாழ்வும் பலி வாழ்வும் பாதுகாப்பு வளையத்தை துறப்பதை வலியுறுத்துகிறது. நாமும் இனி நம்முடைய பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!