ஆண்டவருக்கு செய்ய விரும்பவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!
மத்தேயு 25:31-46
மனிதர்கள் கடவுளின் சாயலாய் படைக்கப்பட்டுள்ளனர். மனிதம் இறைமையைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு மனிதனும் நமக்கு கடவுளின் முகத்தையே அடையாளம் காட்டுகின்றனர். கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு வந்தால் கடவுளை எவரும் விரட்டியடிக்கப்போவதில்லை. ஆனால் கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு ஒருபோதும் வருவதில்லை. கடவுள் தம் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்களின் வழியாகவே இம்மண்ணில் வலம் வருகிறார். மனிதர்களின் மாண்பைக் காக்கிறவர்கள் கடவுளையே மாட்சிப்படுத்துகிறார்கள்.
இயேசு சவுலை தமஸ்குக்கு செல்லும் பாதையில் சந்திக்கிறபோது ‘ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்கிற கேள்வியை எழுப்புகிறார். ஆனால் உண்மையில் பவுல் இயேசுவை அல்ல, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருந்த கிறிஸ்தவர்களையே துன்புறுத்தினார். துன்புறுவோரின் துன்பத்தை தம் துன்பமாகவே பாவிக்கிறவர் நம் கடவுள். ஆகவே கடவுளை நேரடியாக எவரும் துன்புறுத்த விரும்புவதில்லை. ஆனால் சக மனிதர்களை துன்பத்துக்கு உள்ளாக்குவதன் வழியாக கடவுளை நம்மால் துன்புறச் செய்ய முடியும்.
இறுதித் தீர்ப்பு குறித்த நற்செய்திப் பகுதியில் நிலைவாழ்வு என்பது அடுத்தவர் மீது அக்;கறைகொண்டு அவர்களின் தேவைகளை நிறைவு செய்கிறவர்களுக்கு வழங்கப்படும் கடவுளின் அன்புப் பரிசாகும் என்றும், அணையா நெருப்பு என்பது அடுத்தவர் மட்டில் அக்கறையற்று அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவிடும் மனமில்லாதவர்களுக்கு வழங்கப்படும் முடிவில்லாத் தண்டனையாகும் என்றும் சொல்லப்படுகிறது.
தேவையில் இருப்போருக்கு செய்யப்படும் எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படுவதாகும் என்றும், தேவையில் இருப்போருக்கு செய்யப்படாத எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படாததாகும் என்றும் இயேசுவின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆகவே கருணையுள்ளமே கடவுளுக்கு உகந்த இல்லிடம். ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் (நீமொ 19:17).
பசித்திருப்பவரும், தாகத்தோடு இருப்பவரும் இயேசுக்களே. ஆடையின்றி இருப்பவரும், அன்னியராய் இருப்பவரும் இயேசுக்களே. நோயுற்றிருப்பவரும், சிறையிலிருப்பவரும் இயேசுக்களே. இல்லாமையில் இழிவுறும் இந்த இயேசுக்களின் மீது நம் கண்களை திருப்புவோம். அடுத்தவருக்கு செய்யப்படும் நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் ஆராதனைகளே. அடுத்தவருக்கு செய்ய மறந்த நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் அவசங்கைகளே. ஆகவே ஆண்டவருக்கு செய்ய விரும்புவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!