Wednesday, 17 February 2021

திருநீற்றுப் புதன்

 திருநீற்றுப் புதன் 




திருநீற்றுப் புதன் 

- இது தவக்காலத்தின் தொடக்க நாள்.

- இன்று இறைமக்கள் தங்கள் நெற்றியில் திருநீறு பூசி பாஸ்காவிற்காக தங்களையே தயாரிக்க ஆரம்பிப்பர்.

- இது ‘சாம்பல் புதன்’ என்றும் ‘விபூதி புதன்’ என்றும் அழைக்கப்படுகிறது. 


சாம்பல் ஆன்மீகம்

- திருநீறு அல்லது விபூதி எனப்படுவது அடிப்படையில் சாம்பல்.

- இறப்பு, நிலையாமை, ஒன்றுமில்லாமை, வெறுமை, சூன்யம் ஆகியவற்றை சாம்பல் நினைவூட்டுகிறது.

- எல்லாம் முடிந்த பிறகு எஞ்சுவது சாம்பல் மட்டுமே என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.

- விபூதி நல்ல அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறன் கொண்டது.

- நெற்றி உடலின் முக்கியமான பாகம். இங்குதான் வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகிறது மற்றும் உள்ளிழுக்கவும்படுகிறது. ஆகவே நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) பூசப்படும் சாம்பலானது விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பலன் தரக்கூடியது.



திருநீற்றுப் புதனின் வரலாறு

- சாம்பல் பூசி தவக்காலத்தைத் தொடங்கும் வழக்கம் ஏறத்தாழ கி.பி 6-ஆம் நூற்றாண்டிலேயே பழக்கத்தில் இருந்ததாகக் காண்கிறோம்.

- தொடக்க காலத்தில் தனி நபர் ஒருவர் திருமுழுக்குப் பெறும் முன் கடைபிடிக்கப்பட்ட தயாரிப்பு

- சடங்குகளுள் சாம்பல் அணிவதும் ஒன்று. காலப்போக்கில் இது ஒட்டுமொத்த இறைமக்களுக்குமான அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சடங்காக மாறியது.

- கி.பி.1091 -இல் நடைபெற்ற பெனெவென்டோ மாமன்றத்தில் மேலைத் திரு அவை முழுவதற்குமான தவக்காலத்தின் தொடக்கத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய பொது தயாரிப்புச் சடங்காக அறிவிக்கப்பட்டது.


திருநீறு தயாரிக்கப்படும் விதம்

- கடந்த குருத்தோலை ஞாயிறு அன்று புனிதம் செய்யப்பட்டு,நம் இல்லங்களில் வைக்கப்பட்டிருந்த குருத்தோலைகளை எரித்து சாம்பல் தயாரிக்கப்படும்.

- இது அருள்பணியாளரால் புனித நீர் கொண்டு மந்திரிக்கப்படும்.


திருநீறு பூசப்படும் விதம்

- இறைமக்கள் நெற்றியில் புனிதப்படுத்தப்பட்ட திருநீறானது பூசப்படும் போது இரு வகையான வாய்பாடுகள் பயன்படுத்தப்படும்.


(1) ‘மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’ - இது மனித வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நமக்கு நினைவுபடுத்தி, இறைவன் மட்டுமே நிரந்தரம் என்றும், அவரையே நாம் பற்றிப் பிடிக்க வேண்டுமென்றும் நமக்குத் தரப்படுகிற அழைப்பு இது.

(2) ‘மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ - இது இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவரால் பயன்படுத்தப்பட்ட வாக்கியம் (மாற்கு 1:15) ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப பாவத்தை களைந்துவிட்டு, புனிதத்தைப் போர்த்திக்கொள்ள மனமாற்றமும், நற்செய்தியை ஏற்றுக்கொள்வதுமே சிறந்த வழிகளென நம்மை நெறிப்படுத்தும் அழைப்பு இது.


விவிலியமும் சாம்பலும்

- சாம்பலைப் பூசிக்கொள்வது மனமாற்றத்தை வெளிப்படுத்துகின்ற ஓர் அடையாளம்.

- இறைவாக்கினர் யோனா கூறிய நினிவே நகருடைய அழிவின் செய்தியைக் கேட்டு மன்னனும் மக்களும் சாம்பல் பூசி, சாக்கு உடை அணிந்து தங்கள் மனமாற்றத்தை வெளிப்படுத்தினர். (யோனா 3:6-8)

- யோபு தன்னுடைய மனவருத்தத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் சாம்பலில் உட்கார்ந்தார். (யோபு 2:8, 42:6)

- இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களுக்குக் கூறிய ஆண்டவரின் வாக்கு: ‘என் மக்களே!  சாக்கு உடை உடுத்துங்கள்;;; சாம்பலில் புரளுங்கள்’. (எரே 6:26)

- இவ்வாறு விவிலிய மரபில் சாம்பல் அணிவது என்பது துக்கம், துயரம், பரிகாரம் போன்றவற்றைக் குறிக்கும்.


Wednesday, 11 November 2020

இஸ்ரயேலின் பனிரெண்டு குலங்கள்

 இஸ்ரயேலின் பனிரெண்டு குலங்களின் பெயர்களும் 

எபிரேய மொழியில் அவற்றிற்கான அர்த்தங்களும்



யாக்கோபுவிற்கு லேயா மூலம் பிறந்த குழந்தைகள் 6

1. ரூபன் - இதோ ஒரு மகன். (அ) என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். (தொநூ 29: 32)

2. சிமியோன் - கேட்டல் (தொநூ 29: 33)

3. லேவி - இணைதல் (தொநூ 29: 34)

4. யூதா – மாட்சிமை (தொநூ 29: 35)

5. இசக்கார் - ஈடு (தொநூ 30: 18)

6. செபுலோன் - பெருமை (தொநூ 30: 20)


யாக்கோபுவிற்கு ராகேலின் பணிப்பெண் பில்கா மூலம் பிறந்த குழந்தைகள் 2

1. தாண் - நீதி வழங்கினார் (தொநூ 30: 6) 

2. நப்தலி – போராடினேன் (தொநூ 30: 8)


யாக்கோபுவிற்கு லேயாவின் பணிப்பெண் சில்பா மூலம் பிறந்த குழந்தைகள் 2

1. காத்து – நற்பேறு (தொநூ 30:11)

2. ஆசேர் - மகிழ்ச்சி (தொநூ 30:13)


யாக்கோபுவிற்கு ராகேல் மூலம் பிறந்த குழந்தைகள் 2

1. யோசேப்பு – சேர்த்துத் தருகிறார் (தொநூ 30: 24)

2. பென்யமின் - என் வேதனையின் மகன் (தொநூ 35: 18)


யோசேப்புவிற்கு ஆசினத்து மூலம் பிறந்த குழந்தைகள் 2

(யோசேப்பின் வழிமரபு அவருடைய தலைமகன் மனாசேயின் வழிமரபின் வழியிலேயே அறியப்படுகிறது)

1. மனாசே – மறத்தல் (தொநூ 41:51)

2. எப்ராயிம்  - பலுகுதல் (தொநூ 41:52)



Saturday, 10 October 2020

கார்லோ அகுடிஸ்

 அருளாளர். கார்லோ அகுடிஸ் 
(21 ஆம் நூற்றாண்டின் முதல் இளம் அருளாளர்)



பிறப்பு

1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி கார்லோ அகுடிஸ் இலண்டனில் பிறந்தார். இவரது பிறப்பின் போது இவருடைய பெற்றோர் இலண்டனில் பணிபுரிந்து வந்தனர். கார்லோ அகுடிஸ் பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, அவரது பெற்றோர்களான ஆண்ட்ரியா அகுடிஸ் மற்றும் அன்டோனியா சல்சானோ ஆகியோர் மிலான் நகருக்கு குடிபெயர்ந்தனர். 


இறை நம்பிக்கையில் வளர்ந்த கார்லோ

சிறுவயதிலேயே கார்லோ கடவுள் மீது தனிச்சிறப்பான அன்பு கொண்டு விளங்கினார். ஒரு சிறு குழந்தையாக இருந்த நாளிலிருந்து கார்லோ அன்னை மரியாவின் மீது கொண்டிருந்த பக்தியின் காரணமாக செபமாலை செபிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். தன்னுடைய ஏழாம் வயதில் கார்லோ முதல் நற்கருணை பெற்றார். கார்லோ தனது முதல் நற்கருணைத் திருவிருந்து நாளுக்குப் பின்பு திருப்பலிக்குச் செல்லவும், நற்கருணை பெறவும் தவறியதே இல்லை. மேலும் அவர் திருப்பலிக்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ நற்கருணையின் முன்பு செபித்தார். அவர் வாரம் ஒருமுறை பாவசங்கீர்த்தனம் (ஒப்புரவு) செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 


அவர் தனது பெற்றோரிடம் தன்னை திருப்பயணங்களுக்கும், புனிதர்களின் திருத்தலங்களுக்கும், நற்கருணை அற்புதங்களின் தளங்களுக்கும் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்வார். உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காக செபித்து, பரிபூரணப்பலன்களைப் பெற்று அந்த ஆன்மாக்களை விண்ணகம் சேர்க்கும் அப்பக்தி முயற்சியில் கார்லோ ஆர்வம் கொண்டிருந்தார். 

வினோதமான விளையாட்டு ஒறுத்தல்

கார்லோ ‘வீடியோ கேம்களை’ விளையாடுவதை விரும்பினார். கார்லோவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, அவருக்கு ஒரு ‘பிளேஸ்டேஷன்’ அல்லது 2000 இல் வெளியிடப்பட்ட ‘பி எஸ் 2’ போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவிட அதீத ஆர்வம் இருந்தது. ஆனால் கார்லோ தவம், ஒறுத்தல் மற்றும் ஆன்மீக ஒழுக்கமாக, வாரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாடுவதற்கு அவர் தன்னை பழக்கப்படுத்திக்கொண்டார். 



தாயை மனமாற்றிய மகன் கார்லோ

அவருடைய பெற்றோர் பெரிதாகச் சொல்லுமளவிற்கு கத்தோலிக்க பக்தியுள்ளவர்கள் அல்லர். இருப்பினும் தன்னுடைய மகன் கார்லோவின் பக்தியாலும் இறைநம்பிக்கையாலும் தான் கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்பட்டதாக கார்லோவின் தாய் தெரிவிக்கிறார். 


அவரது இறை நம்பிக்கையால் அவர் தனது உறவினர்களையும், பெற்றோர்களையும் ஒவ்வொரு நாளும் திருப்பலிக்கு ஈர்க்க முடிந்தது. இவருடைய வாழ்வில் வித்தியாசமாகவே இது நடந்தது. ஆம், சிறுவனாகிய இவரை திருப்பலிக்கு அழைத்து வரும் செயலைச் செய்தது அவரது பெற்றோர் அல்ல, மாறாக இவரே அவர்களைத் திருப்பலிக்கு அழைத்துச் செல்லவும், தினமும் அவர்கள் நற்கருணையைப் பெறச் செய்யவும் காரணமாக இருக்க முடிந்தது.

அடுத்தவர் மீதிருந்த அன்பும் அக்கறையும்

பள்ளியில் படிக்கும் காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதில் அவர் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். குறிப்பாக ஊனமுற்ற குழந்தைகளின் பாதுகாப்பில் அவர் அதிகமாகவே அக்கறை கொண்டு செயல்பட்டார். விவாகரத்து பெற்ற பெற்றோருடைய குழந்தைகளை கார்லோ தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு அன்பும் பாசமும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார். வீடுகளின்றி வீதிகளில் படுத்துறங்கும் வறியவர்களுக்கு தனது சிறுசேமிப்புத் தொகையை வைத்து அவர் உதவிகள் செய்வார்.  

கார்லோவும் நற்கருணை பக்தியும்

அவர் நற்கருணை புதுமைகளை அறிவதிலும் பிறருக்கு அறிவிப்பதிலும் சிறந்து விளங்கினார்.  குறிப்பாக தன்னுடைய 14 ஆம் வயதில், அதாவது தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு உலகெங்கும் நடைபெற்ற நற்கருணைப் புதுமைகள் பலவற்றைத் தொகுத்து தான் அதற்கென்றே உருவாக்கிய தனிப்பட்ட வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, பலர் அவற்றை வாசித்து அறிய கார்லோ காரணமானார்.  



நோயும் மரணமும்

தனது பதின்ம வயதில் கார்லோவுக்கு ‘லுகேமியா’ என்கிற இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அன்றைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் திரு அவைக்காகவும் கார்லோ தனது நோயினால் பட்ட அனைத்து துன்பங்களையும் ஒப்புக்கொடுத்தார். ‘ஆண்டவருக்காக நான் அனுபவிக்க வேண்டிய அனைத்து துன்பங்களையும் திருத்தந்தைக்காகவும், திரு அவைக்காகவும் நான் ஒப்புக்கொடுக்கிறேன்’ இதுவே துன்பப் படுக்கையில் கார்லோவின் நாவிலிருந்து புறப்பட்ட நம்பிக்கை நிறைந்த சொற்களாகும். 

2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நோயின் கொடூரத்தினால் தனது 15 ஆம் வயதில் தன்னுயிரை நீத்தார். கார்லோவிற்கு புனித பிரான்சிஸ் அசிசியாரின் மீது தனிப்பற்றும் பக்தியும் உண்டு. எனவே கார்லோவின் வேண்டுகோளின்படியே அவருடைய உடல் அசிசி நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


புனிதர் பட்டத்திற்கான பாதையில்… 

இவர் இறந்த பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 2013 இல் தொடங்கின. கார்லோ 2013 மே 13 அன்று ‘இறை ஊழியர்’ என்கிற நிலைக்கு உயர்த்தப்பட்டார்.  திருத்தந்தை பிரான்சிஸ் இவரை 2018 ஜூலை 5 அன்று ‘வணக்கத்திற்குரியவர்’ என்ற நிலைக்கு உயர்த்தினார். அதனை அடுத்து 2020 அக்டோபர் 10 அன்று ‘அருளாளர்’ (முத்திப்பேறு பெற்றவர்) என்ற நிலைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உயர்த்தப்பட்டார். 



காலத்தால் அழியாத கார்லோவின் உடல் 

புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகளின் பேரில் கார்லோவின் கல்லறை திறக்கப்பட்டபோது கார்லோவின் உடல் இன்னும் சிதையாமல், அழியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. 

அவர் விரும்பி அணியக்கூடிய சாதாரண உடைகளான ஜீன்ஸ் மற்றும் ஒரு ஜோடி ஸ்னீக்கர் வகை காலணிகள் போன்றவற்றால் அவருடைய உடல் உடுத்தப்பட்டு திருப்பயணிகளின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. 



இப்போது கார்லோவின் இதயம் புனிதப்பண்டமாக, அசிசியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் பேராலயத்தில் அருளிக்கமாக காட்சிப்படுத்தப்பட்டு திருப்பயணிகளின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 


முக்கிய பொன்மொழிகள்

‘நாம் எவ்வளவு அதிகமாய் நற்கருணை பெறுகிறோமோ, அவ்வளவுக்கு நாம் இயேசுவைப் போலாகிறோம். இதனால் இந்த பூமியிலேயே நாம் விண்ணகத்தின் முன்சுவையைப் பெறுகிறோம்.’

 ‘நற்கருணை என்பது விண்ணகத்திற்கான நெடுஞ்சாலை.’ 

அருளாளர் கார்லோ அகுடிஸின் பரிந்துரையில் நடந்த அற்புதம்! 

கார்லோ அகுடிஸ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று, பிரேசில் நாட்டில் உள்ள மேத்யூஸ் என்ற சிறுவன் தனது கணையம் செயலிழந்த நிலையில், தான் உண்ட உணவு முதல் தண்ணீர் வரை வாந்தியாக வெளியே வர மயக்கநிலையிலே இருந்து வந்தான். இந்த அரிய வகை நோயை குணப்படுத்துவது இயலாது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மரணத்தை எதிர்நோக்கியிருந்த சிறுவனை, அவர்களின் பங்கில் நடந்த ஒரு வழிபாட்டில் கார்லோ அகுடிஸ் அவர்களின் புனிதப்பண்டம் வைத்து செபிக்கப்பட்டபோது, சிறுவனின் தாத்தா கார்லோவின் புனித பண்டத்தைத் தொட்டு அச்சிறுவன் மீது வைத்து செபிக்க சிறுவன் அற்புதமாய் நலமடைந்தான். 


பாதுகாவல்

ஒரு கணினி நிரலாக்கர் (புரோகிராமர்) ஆகிய இவர், கணினி மற்றும் இணையதளம் பயன்படுத்துவோரின் பாதுகாவலராக அறியப்படுகிறார். கடவுளின் மாட்சிக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.