Saturday, 1 May 2021

வணக்க மாதம் : நாள் - 1

தூணின் அன்னை

(சரகோசா – ஸ்பெயின்)



திரு அவையின் வரலாற்றில் புனித மரியன்னை முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள எப்ரோ ஆற்றின் கரையில் அமைந்துள்ள சரகோசா என்னுமிடத்தில் புனித யாக்கோபுவிற்கு (நற்செய்தியாளரான புனித யோவானின் சகோதரர்) காட்சியளித்தார் என்று திரு அவையின் மரபுவழிச் செய்திகளின்படி நாம் அறிகிறோம். பதிவுசெய்யப்பட்ட மற்ற எல்லா மரியன்னையின் திருக்காட்சிகளைப் போலல்லாமல், இது மரியாவின் மண்ணக வாழ்க்கையின் போதே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு அவையின் பாரம்பரியத்தின்படி, இன்றைய ஸ்பெயினில் உள்ள பிறசமயத்தினருக்கான புனித யாக்கோபுவின் கடினமான மறைபரப்புப் பணியில் அவருக்கு மிகவும் தேவை ஏற்படும்போது, அவரை ஊக்குவிக்க மரியன்னை அவருக்குத் தோன்றுவார் என்று மரியன்னையே அவருக்கு அக்காட்சியில் உறுதியளித்தார் என்றும் சொல்லப்படுகிறது. 

கி.பி 40 ஆம் ஆண்டில், சனவரி இரண்டாம் நாள், டோபர்ட் கரையில் ஓர் இரவு புனித யாக்கோபு மற்றும் அவரது எட்டு சீடர்கள் செபம் செய்துகொண்டிருந்தபோது, தன் கையில் குழந்தை இயேசுவுடன் ஒரு தூணில் நின்றவாறு காட்சியளித்த புனித மரியன்னை, அவர்களிடம் அந்த இடத்தில் ஓர் ஆலயத்தை கட்டும்படி கேட்டுக்கொண்டார். ‘என் பாதுகாப்பின் கீழ் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அனைவருக்கும், கடவுள் என் பரிந்துரையின் மூலம் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்காக, அவ்வாலயம் அத்தருணத்திலிருந்து உலகின் இறுதிக் காலம் வரையிலும் நிலைத்து நிற்கும்.’ என்ற வாக்குறுதியையும் புனித மரியன்னை வழங்கினார். 

சராகோசாவில் உள்ள தூணின் அன்னை ஆலயம் தான், வரலாற்றில் புனித மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் ஆகும். அன்னையின் வாக்கின்படியே, இவ்வாலயம் படையெடுப்புகள் மற்றும் போர்களில் இருந்து தப்பித்து இன்றுவரை நிலைத்திருக்கிறது.  1936 முதல் 1939 வரையிலான ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் மூன்று குண்டுகள் இந்த ஆலயத்தில் வீசப்பட்டன. ஆனால் அவை எதுவும் வெடிக்கவில்லை.

இப்போது ஆலயத்தில் ஒரு தூணில் நிற்கும் அன்னையின் சிறிய மரத்தாலான திருவுருவச் சிலையானது புனித யாக்கோபுவிற்கு புனித மரியன்னை காட்சியளித்தபோது வழங்கியதாக கூறப்படுகிறது.


திருவிழா கொண்டாடப்படும் நாள்: அக்டோபர் 12

செபம்: தூணின் அன்னை என்று பெருமையோடு அழைக்கப்படும் இறைவனின் புனித அன்னையே!  தாழ்மையுடன் உம்மை அணுகி, உம்மிடம் வேண்டுதல் செய்யும் எனக்கு நீர் ஒரு பரிந்துரையாளராகவும், அருளின் வாய்க்காலாகவும் இருந்து, இறைவனின் மீதான என் நம்பிக்கையை தூணைப் போல் உறுதிப்படுத்தியருளும். ஆமென். 

 

Monday, 5 April 2021

ஈஸ்டர்

 உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்)



இயேசுவின் உயிர்ப்பையே ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். 

ஈஸ்டர் பண்டிகையின் தோற்றம்



கிபி 29 லிருந்து இயேசுவின் உயிர்ப்பு நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்டதென்று வரலாறு சொல்கிறது.

ஆனாலும், கிபி 325 இல் உரோமையை ஆட்சி செய்த மன்னன் கான்ஸ்டன்டைன் என்பவன் காலத்திலேதான் இது பரவலானதாகவும், பிரபலமாகதாகவும் வரலாறு கூறுகிறது. 


ஈஸ்டர் என்பதன் பொருள் என்ன?



கிரேக்கத் தொன்மங்களிலே ‘ஈஸ்டர்’ என்பது விடியலுக்கான பெண் தேவதையின் பெயராகும். 

இந்த வார்த்தைக்கு வசந்த காலம் என்ற அர்த்தமும் உண்டு.  

வசந்த காலத்தின் தொடக்கத்தில்தான் ஈஸ்டர் தேவதையின் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. 


ஈஸ்டரும் முயலும் 



ஈஸ்டர் தேவதையின் விலங்கு முயல். 

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்கள் புல்வெளிகளில் முயல்கள் துள்ளிவிளையாடுவதைப் பார்த்தால் வசந்தகாலம் ஆரம்பமானதென அறிந்துகொண்டனர். 

இவ்வாறு முயல்களின் மகிழ்வையும், வசந்தகாலத்தின் வருகையையும் தொடர்புபடுத்தி இதையே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடத்தொடங்கினர். 

இன்றும் ஐரோப்பியாவில் மதச்சார்பற்ற நாடுகள்கூட ஈஸ்டர் பண்டிகையின்போது முயல் வடிவிலான தின்பண்டங்களைச் செய்து உண்பது வழக்கம்.


ஈஸ்டரும் முட்டையும் 


முட்டை என்பது வாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது ஐரோப்பியரின் பாரம்பரிய நம்பிக்கை. 

புதுவாழ்வு மற்றும் புதுப்பிறப்பின் குறியீடாக முட்டை கருதப்பட்டது. 

முட்டை அடைகாக்கப்பட்டு புதிய உயிர் உருவாவதுபோன்று, வசந்த காலத்தில் பூமி மீண்டும் பிறக்கிறதென்று கருதிய ஐரோப்பியர்கள் ஈஸ்டர் நாளில் சாயம் பூசப்பட்ட அல்லது வண்ணம் தீட்டப்பட்ட முட்டைகளை பரிசளித்துக் கொண்டாடினர். 

கிறிஸ்தவ சமயக் கண்ணோட்டத்தில் முட்டை கல்லறையின் குறியீடாகவும், முட்டை உடைபடுவது இயேசுவின் உயிர்ப்பிற்கான குறியீடாகவும் வழங்கப்படுகிறது.  

முட்டைகளின் மீது பெரும்பாலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. இது இயேசு நமக்காக இரத்தம் சிந்தியதைக் குறித்துக்காட்டுகிறது. 


விவிலியமும் இயேசுவின் உயிர்ப்பும்



விவிலியத்தில் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் உயிர்ப்பு பற்றிய பல்வேறு தரவுகளைத் தருகின்றன. 

இயேசு எவ்வாறு உயிர்த்தார் என்பதையும், உயிர்ப்பு எப்படி நிகழ்ந்தது என்னும் செய்திகளைத் தருவதைவிட, அது ஏன் நிகழ்ந்தது என்பதற்கே நற்செய்தி நூல்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

தன் உயிர்ப்பு நிகழ்வின் மூலமாக இயேசு உலகின் எல்லாவற்றையும் வெற்றிக்கொண்டார் என்பதே அது குறித்துக் காட்டும் செய்தி.

இயேசுவின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய சீடர்கள் நம்பிக்கையற்று, சோர்வுற்று, தளர்ந்திருந்த சமயத்தில் இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை சந்தித்து தைரியமும், ஊக்கமும் அளித்து, இறைப்பணிக்காக மீண்டும் அவர்களை நியமித்தார். 

இயேசுவின் உயிர்த்த தோற்றத்தை ஓர் உண்மை நிகழ்வாக விவிலியம் நமக்குக் காட்டுகிறது. 

சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் ஒரு கனவோ, உளவியல் மாற்றமோ அல்ல, மாறாக இது உண்மை நிகழ்வு ஆகும்.


உயிர்ப்புக்கான மூன்று சான்றுகள்



1) காலியாயிருந்த இயேசுவின் கல்லறை

2) உயிர்ப்புக்குப் பிறகான இயேசுவின் தோற்ற நிகழ்வுகள்

3) திருத்தூதர்கள் வாழ்வில் காணப்பட்ட திடீர் மாற்றம்


Wednesday, 31 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் புதன்

 இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!

மத்தேயு 26:14-25



விற்பதும் வாங்குவதும் வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் தொடர்ந்து நடக்கும் செயல்களே. ஒன்றை வாங்குவதற்கு, நாம் இன்னொன்றை கொடுக்கவோ அல்லது இழக்கவோ அல்லது விற்கவோ வேண்டியிருக்கிறது. எதை விற்கிறோம்? எதை வாங்குகிறோம்? என்கிற தெளிவு இல்லாமல் போனால் வாழ்க்கையில் வசந்தம் வற்றிப்போகும். காலை விற்று செருப்பும், கையை விற்று கைக்கடிகாரமும் வாங்கும் நிலை போன்று நம் ஆன்மீக வாழ்வு மாறிக் கொண்டு வருகின்றது. 

இன்றைய நற்செய்தியில் யூதாசு இயேசுவுக்கு விலை பேசுகிறான். இதுவரை இயேசுவில் தனது நம்பிக்கையை, இயேசுவில் தனது கனவை, இயேசுவில் தனது பற்றுறுதியை வைத்திருந்த யூதாசு, இப்போது அவற்றை எல்லாம் பணத்தின் மீது வைக்கிறான். முன்பு இயேசு தன்னை அழைத்தபோது, அவரைப் பின்பற்றுவதற்காக யூதாசு தன்னையே அவருக்கு கையளித்தான். இப்போது அவரையே யூதத் தலைமைக் குருவுக்கு கையளிக்கிறான். எந்த பணத்திற்காக யூதாசு தனக்கு சொந்தமான இயேசுவைக் காட்டிக்கொடுத்தானோ, கடைசியில் அப்பணத்தையே அவனால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. இயேசுவிடம் தன்னையே அவன் விற்றபோது அவனுக்கு வந்தது வாழ்வு. இயேசுவை தலைமைச் சங்கத்திடம் விற்றபோது அவனுக்கு வந்தது சாவு.      

ஒருவர் தனக்குரிய யாவற்றையும் விற்று முத்தை வாங்கினார் என்றும் இன்னொருவர் தனக்குரிய அனைத்தையும் விற்று பெரும் புதையல் இருக்கும் நிலத்தை வாங்கினார் என்றும் நற்செய்தியில் ஓர் இடத்தில் இயேசு கூறுவார். விலை மதிப்பு மிகுந்த முத்தும், பெரும் புதையல் உள்ள நிலமும் இயேசுவே. இயேசுவை சொந்தமாக்கிக் கொள்வதற்காக எதையும் விற்றுவிடலாம். ஒருவன் இயேசுவை சொந்தமாக்குவது என்பது, தனக்குரிய யாவற்றையும் விற்றாவது பெரும் புதையல் உள்ள நிலத்தையோ அல்லது விலை மதிப்பு மிகுந்த முத்தையோ சொந்தமாக்குவதைவிட மேலானது ஆகும். 

அன்று வரலாற்றில் ஒரு முறை இயேசுவுக்கு விலை பேசினான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் ஓராயிரம் முறை நமது வேலைக்காக, தொழிலுக்காக, படிப்பிற்காக, பொழுதுபோக்கிற்காக, திறமைகளுக்காக என்று இயேசுவுக்கு விலை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். அன்று ஒரு தடவை முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இயேசுவின் மீது தான் கொண்டிருந்த தன்னுடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுத் தொலைத்தான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் பலமுறை இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்முடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுக்கொண்டே இருக்கின்றோம். எதையும் இயேசுவுக்காக இழக்கலாம். ஆனால் இயேசுவை எதற்காகவும் இழந்துவிடக் கூடாது. எனவே நாம் இனியாவது யூதாசைப் போன்று இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!