மேகத்தின் அன்னை
(குயிட்டோ - ஈக்வடார்)
மேகத்தின் அன்னை என்னும் பக்தி முயற்சி ஈக்வடாரில் தோன்றியது. 1696 ஆம் ஆண்டின் இறுதியில், குயிட்டோவின் ஆயர் டான் சாஞ்சோ டி ஆண்ட்ரேட் ஒய் ஃபிகுரோ என்பவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது குயிட்டோவின் புறநகரில் உள்ள குலூபோ என்ற கிராம மக்கள், கன்னி மரியாவுக்கு தங்கள் ஆயர் குணமடையுமாறு மன்றாடி ஒரு நவநாளை ஏற்பாடு செய்தனர்.
டிசம்பர் 30 அன்று, அவர்கள் குஸ்லுபோ நகரத்திலிருந்து குயிட்டோவில் உள்ள மறைமாவட்டப் பேராலயம் வரை ஒரு செபமாலை பவனியை ஏற்பாடு செய்தனர். அப்பவனியில், ஏறக்குறைய மாலை 4:30 மணியளவில், அருள்பணியாளர் டான் ஜோஸ் டி உலோவா என்பவர் வானத்தில் ஒரு பெரிய மேகத்தில் தோன்றிய ஒரு பெண்ணின் உருவத்தைக் கண்டார். உடனே அவர் அதைச் சுட்டிக்காட்டி, கூட்டத்தினரிடம் ‘கன்னி! கன்னி!’ என்று கூச்சலிட்டார்.
குவாப்லோ மற்றும் குயிட்டோ ஆகிய இரு இடங்களுக்கிடையே வானத்தில், இருண்ட மற்றும் அடர்த்தியான மேகத்தின் மீது நின்றவாறு புனித கன்னி மரியா தோன்றினார். அம்மேகம் அவளுடைய காலுக்கு பீடமாக இருந்தது. அவள் தலையில் ஒரு கிரீடம் அணிந்தவளாய், செங்கோல் போல வலது கையில் லில்லி மலர்க்கொடியை பிடித்தவளாய், இடது கையில் அவள் தன்னுடைய தெய்வீக மகன் இயேசுவைச் சுமந்தவாறு காட்சியளித்தாள்.
இக்காட்சியை அன்று பவனியில் பங்குபெற்ற 500 க்கும் மேற்பட்ட நபர்களும், குயிட்டோவின் சுற்றுப்புறங்களில் இருந்த பலரும் கண்டனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சாட்சியங்களும் இன்றும் குயிட்டோ உயர் மறைமாவட்டத்தின் ஆவணக் காப்பகங்களில் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. பின்பு ஆயரும் உடனடியாக குணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து ‘மேகத்தின் அன்னை’ என்ற தலைப்பின் கீழ் அவர் புனித கன்னி மரியாவுக்கான பக்தி முயற்சியை அங்கீகரித்தார். மேலும் குயிட்டோ உயர் மறைமாவட்டப் பேராலயத்தில் மேகத்தின் அன்னைக்கு ஒரு சிறப்பு பீடத்தை அமைத்தார்.
திருவிழா கொண்டாடப்படும் நாள்: சனவரி 1
செபம்: மிகவும் அதிசயமான மேகத்தின் அன்னையே! உம்முடைய பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் எங்களை எந்நாளும் வைத்து காத்தருளும். எங்கள் தேவைகளில் எங்களுக்கு உதவியருளும். எங்கள் துன்பங்களில் எங்களுக்கு நீரே ஆறுதலாயிரும். ஆமென்.