Friday, 22 November 2024

கல்லறைப் பாடம் - 22

கல்லறைப் பாடம் - 22

தனித் தீர்ப்பு, பொதுத் தீர்ப்பு



தனித் தீர்ப்பு

தனித் தீர்ப்பு என்றால் இறந்தவுடன் ஒவ்வொருவருக்கும் கைம்மாறு அளிக்கும் தீர்ப்பு ஆகும். நம்பிக்கைக்கும் செயல்களுக்கும் ஏற்பத் தம் அழியா ஆன்மாவில் கடவுளிடமிருந்து ஒவ்வொருவரும் அந்தக் கைமாற்றை பெற்றுக்கொள்வர். உடனடியாகவோ தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ, விண்ணகப் பேரின்பத்தை அடைவதில் அல்லது நரகத்தின் முடிவில்லா தண்டனையை அடைவதில் அது அடங்கும். 

பொதுத் தீர்ப்பு

பொதுத் தீர்ப்பு என்பது பேரின்பத்திற்கோ முடிவில்லாத் தண்டனைக்கோ வழங்கப்படும் தீர்ப்பு ஆகும். உலக முடிவில் ஆண்டவர் இயேசு வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராக வரும்போது, நேர்மையாளருக்கும் நேர்மையற்றோருக்கும் இத்தீர்ப்பை வழங்குவார். பொதுத் தீர்ப்புக்குப் பிறகு, தனித்தீர்ப்பில் ஆன்மா ஏற்கெனவே கைம்மாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ தண்டனையிலோ உயிர்த்த உடல் பங்குபெறும். 

பொதுத் தீர்ப்பு உலக முடிவில் நடைபெறும். அந்நாளையும் நேரத்தையும் கடவுள் மட்டுமே அறிவார். 

பொதுத் தீர்ப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் அழிவிற்குரிய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்துவின் மாட்சியில் பங்கு பெறும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் தொடங்கும் (2பேது 3:13). அப்போது இறையாட்சி முழுமை பெறும்.

Thursday, 21 November 2024

கல்லறைப் பாடம் - 21

 கல்லறைப் பாடம் - 21

உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்


உடலின் உயிர்ப்பு என்பது ஆன்மா உடலிலிருந்து பிரிக்கப்பட்ட நிலை, மனிதரின் முடிவான நிலையாக இருக்காது என்பதைக் குறிக்கிறது. ஏனெனில் அழிவுக்குரிய நம் உடல்களும் ஒரு நாள் மீண்டும் வாழ்வு பெறும்.

நம்பிக்கை அறிக்கையில் இடம்பெறும் உடலின் உயிர்ப்பு என்பதன் நேர் பொருள் ஊனுடலின் உயிர்ப்பு ஆகும். ஊனுடல் என்னும் சொல் வலுவற்ற, அழிவுக்குரிய நிலையில் உள்ள மானுடத்தைக் குறிக்கிறது. ஊனுடல் மீட்பின் காரணியாக உள்ளது என்கிறார் தெர்த்துலியன். ஊனுடலைப் படைத்த கடவுளை நம்புகிறோம். ஊனுடலை மீட்க மனித உடல் எடுத்த வார்த்தையானவரை நம்புகிறோம். மேலும் உடலின் உயிர்ப்பை நம்புகிறோம். இது ஊனுடலின் படைப்பு, மீட்பு ஆகியவற்றின் நிறைவு ஆகிறது. 

Wednesday, 20 November 2024

கல்லறைப் பாடம் - 20

கல்லறைப் பாடம் - 20

இறப்புக்கு அப்பால்


இறக்கும்போது உடலிலிருந்து ஆன்மா பிரிகிறது. இறப்பிற்குப் பிறகு உடல் அழிந்துவிடுகிறது. அதே வேளையில் அழியாத் தன்மை கொண்ட ஆன்மா இறைவனின் தீர்ப்பைச் சந்திக்கச் செல்கிறது. ஆண்டவர் மீண்டும் வரும்போது, மாற்றுரு பெற்று எழும் உடலோடு மீண்டும் இணையக் காத்திருக்கிறது. உடலின் உயிர்ப்பு எப்படி நிகழும் என்பது நம் கற்பனைக்கும் புரிதலுக்கும் எட்டாதது. 

கிறிஸ்துவின் உயிர்ப்பும் நம் உயிர்ப்பும்

கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உண்மையாகவே உயிர்த்தெழுந்து என்றென்றும் வாழ்கிறார். அது போல அவரே இறுதி நாளில் ஒவ்வொருவரையும் அழியா உடலோடு உயிர்த்தெழச் செய்வார். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர். (யோவா 5:29)

கிறிஸ்துவில் இறத்தல்

கிறிஸ்து இயேசுவில் இறப்பது என்பது சாவான பாவம் ஏதும் இன்றிக் கடவுளின் அருள் நிலையில் இறப்பதாகும். இவ்வாறு, நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இறைத்தந்தைக்குக் காட்டும் கீழ்ப்படிதல், அன்பு ஆகியவற்றின் செயலாகத் தங்களது சொந்த இறப்பை மாற்ற இயலும். “பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்”. (2 திமொ 2:11)