Sunday, 24 November 2024

கல்லறைப் பாடம் - 24

கல்லறைப் பாடம் - 24

நரகம் என்பது கடவுளை முற்றிலும் நிராகரிப்பதே!


தங்கள் சாவான பாவங்களுக்காக மனம் வருந்தாத மனிதர்கள், கடவுளுடனான ஒன்றிப்பை இழக்கிறார்கள். அதனால் அவர்கள் நிரந்தர துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று விவிலியம் மீண்டும் மீண்டும் கற்பிக்கிறது. “மனந்திரும்பாமல், கடவுளின் இரக்கமிகு அன்பை ஏற்றுக்கொள்ளாமல் சாவான பாவத்தில் இறப்பது என்பது, நம்முடைய சொந்த விருப்பத்தின் மூலம் கடவுளிடமிருந்து என்றென்றும் பிரிந்து வாழ்வதாகும். கடவுள் மற்றும் புனிதர்களுடன் ஒன்றிப்பு கொள்வதில் இருந்து தன்னைத் தானே ஒதுக்கிவைக்கும் இந்த நிலை “நரகம்” என்று அழைக்கப்படுகிறது". (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி 1033) 

நல்ல கடவுள் நரகத்திற்குப் பொறுப்பல்ல 

கடவுள் யாரையும் நிரந்தரமான தண்டனைக்கு முன்னிறுத்துவதில்லை. ஒரு மனிதரே தனது இறுதி இலக்கை கடவுளுக்கு வெளியேயும் எதிராகவும் தேடுவதன் மூலம், கடவுளின் பேரொளியும் பேரன்பும் ஊடுருவ முடியாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உலகத்தை தனக்கு உருவாக்கிக் கொள்கிறார். அதுவே நரகமாகிறது.

Saturday, 23 November 2024

கல்லறைப் பாடம் - 23

கல்லறைப் பாடம் - 23

நிலைவாழ்வை நம்புகிறேன்


நிலை வாழ்வு என்றால் இறப்பிற்குப் பிறகு உடனே தொடங்கும் வாழ்வு ஆகும். இதற்கு முடிவே இராது. இதற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் தனித் தீர்ப்பு உண்டு. இந்த தனித் தீர்ப்பு பொதுத் தீர்ப்பில் உறுதி செய்யப்படும்.

உலகம் முடியும் நாளில் நாம் அனைவரும் நமது உடலோடு உயிர்தெழுந்து அழியா உடலைப் பெறுவோம். அந்நாளில் நமது ஆன்மாவும் உடலும் மீண்டும் இணையும். நேர்மையாளர்கள் (கடவுளின் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்தவர்கள்) இவ்வுலக வாழ்விற்குப்பின் நிலையான பேரின்பத்தை (விண்ணகத்தை) அடைவார்கள். தீயவர்கள் முடிவில்லா தண்டனைக்கும் அழியா நெருப்பிற்கும் (நரகத்திற்கும்) செல்வார்கள். 

உலகம் முடியும் நாளில் பொதுத் தீர்வையின் போது உத்தரிக்கிற இடத்தில் இருக்கின்றவர்கள் அனைவரும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்தில் இறைத் தந்தையோடு அமர்வர். அதன் பின் உத்தரிக்கின்ற இடம் என்ற ஒரு நிலை இல்லாமல் போகும்.

Friday, 22 November 2024

கல்லறைப் பாடம் - 22

கல்லறைப் பாடம் - 22

தனித் தீர்ப்பு, பொதுத் தீர்ப்பு



தனித் தீர்ப்பு

தனித் தீர்ப்பு என்றால் இறந்தவுடன் ஒவ்வொருவருக்கும் கைம்மாறு அளிக்கும் தீர்ப்பு ஆகும். நம்பிக்கைக்கும் செயல்களுக்கும் ஏற்பத் தம் அழியா ஆன்மாவில் கடவுளிடமிருந்து ஒவ்வொருவரும் அந்தக் கைமாற்றை பெற்றுக்கொள்வர். உடனடியாகவோ தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ, விண்ணகப் பேரின்பத்தை அடைவதில் அல்லது நரகத்தின் முடிவில்லா தண்டனையை அடைவதில் அது அடங்கும். 

பொதுத் தீர்ப்பு

பொதுத் தீர்ப்பு என்பது பேரின்பத்திற்கோ முடிவில்லாத் தண்டனைக்கோ வழங்கப்படும் தீர்ப்பு ஆகும். உலக முடிவில் ஆண்டவர் இயேசு வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராக வரும்போது, நேர்மையாளருக்கும் நேர்மையற்றோருக்கும் இத்தீர்ப்பை வழங்குவார். பொதுத் தீர்ப்புக்குப் பிறகு, தனித்தீர்ப்பில் ஆன்மா ஏற்கெனவே கைம்மாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ தண்டனையிலோ உயிர்த்த உடல் பங்குபெறும். 

பொதுத் தீர்ப்பு உலக முடிவில் நடைபெறும். அந்நாளையும் நேரத்தையும் கடவுள் மட்டுமே அறிவார். 

பொதுத் தீர்ப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் அழிவிற்குரிய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்துவின் மாட்சியில் பங்கு பெறும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் தொடங்கும் (2பேது 3:13). அப்போது இறையாட்சி முழுமை பெறும்.