Saturday, 10 October 2020

கார்லோ அகுடிஸ்

 அருளாளர். கார்லோ அகுடிஸ் 
(21 ஆம் நூற்றாண்டின் முதல் இளம் அருளாளர்)



பிறப்பு

1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி கார்லோ அகுடிஸ் இலண்டனில் பிறந்தார். இவரது பிறப்பின் போது இவருடைய பெற்றோர் இலண்டனில் பணிபுரிந்து வந்தனர். கார்லோ அகுடிஸ் பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, அவரது பெற்றோர்களான ஆண்ட்ரியா அகுடிஸ் மற்றும் அன்டோனியா சல்சானோ ஆகியோர் மிலான் நகருக்கு குடிபெயர்ந்தனர். 


இறை நம்பிக்கையில் வளர்ந்த கார்லோ

சிறுவயதிலேயே கார்லோ கடவுள் மீது தனிச்சிறப்பான அன்பு கொண்டு விளங்கினார். ஒரு சிறு குழந்தையாக இருந்த நாளிலிருந்து கார்லோ அன்னை மரியாவின் மீது கொண்டிருந்த பக்தியின் காரணமாக செபமாலை செபிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். தன்னுடைய ஏழாம் வயதில் கார்லோ முதல் நற்கருணை பெற்றார். கார்லோ தனது முதல் நற்கருணைத் திருவிருந்து நாளுக்குப் பின்பு திருப்பலிக்குச் செல்லவும், நற்கருணை பெறவும் தவறியதே இல்லை. மேலும் அவர் திருப்பலிக்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ நற்கருணையின் முன்பு செபித்தார். அவர் வாரம் ஒருமுறை பாவசங்கீர்த்தனம் (ஒப்புரவு) செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 


அவர் தனது பெற்றோரிடம் தன்னை திருப்பயணங்களுக்கும், புனிதர்களின் திருத்தலங்களுக்கும், நற்கருணை அற்புதங்களின் தளங்களுக்கும் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்வார். உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காக செபித்து, பரிபூரணப்பலன்களைப் பெற்று அந்த ஆன்மாக்களை விண்ணகம் சேர்க்கும் அப்பக்தி முயற்சியில் கார்லோ ஆர்வம் கொண்டிருந்தார். 

வினோதமான விளையாட்டு ஒறுத்தல்

கார்லோ ‘வீடியோ கேம்களை’ விளையாடுவதை விரும்பினார். கார்லோவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, அவருக்கு ஒரு ‘பிளேஸ்டேஷன்’ அல்லது 2000 இல் வெளியிடப்பட்ட ‘பி எஸ் 2’ போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவிட அதீத ஆர்வம் இருந்தது. ஆனால் கார்லோ தவம், ஒறுத்தல் மற்றும் ஆன்மீக ஒழுக்கமாக, வாரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாடுவதற்கு அவர் தன்னை பழக்கப்படுத்திக்கொண்டார். 



தாயை மனமாற்றிய மகன் கார்லோ

அவருடைய பெற்றோர் பெரிதாகச் சொல்லுமளவிற்கு கத்தோலிக்க பக்தியுள்ளவர்கள் அல்லர். இருப்பினும் தன்னுடைய மகன் கார்லோவின் பக்தியாலும் இறைநம்பிக்கையாலும் தான் கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்பட்டதாக கார்லோவின் தாய் தெரிவிக்கிறார். 


அவரது இறை நம்பிக்கையால் அவர் தனது உறவினர்களையும், பெற்றோர்களையும் ஒவ்வொரு நாளும் திருப்பலிக்கு ஈர்க்க முடிந்தது. இவருடைய வாழ்வில் வித்தியாசமாகவே இது நடந்தது. ஆம், சிறுவனாகிய இவரை திருப்பலிக்கு அழைத்து வரும் செயலைச் செய்தது அவரது பெற்றோர் அல்ல, மாறாக இவரே அவர்களைத் திருப்பலிக்கு அழைத்துச் செல்லவும், தினமும் அவர்கள் நற்கருணையைப் பெறச் செய்யவும் காரணமாக இருக்க முடிந்தது.

அடுத்தவர் மீதிருந்த அன்பும் அக்கறையும்

பள்ளியில் படிக்கும் காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதில் அவர் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். குறிப்பாக ஊனமுற்ற குழந்தைகளின் பாதுகாப்பில் அவர் அதிகமாகவே அக்கறை கொண்டு செயல்பட்டார். விவாகரத்து பெற்ற பெற்றோருடைய குழந்தைகளை கார்லோ தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு அன்பும் பாசமும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார். வீடுகளின்றி வீதிகளில் படுத்துறங்கும் வறியவர்களுக்கு தனது சிறுசேமிப்புத் தொகையை வைத்து அவர் உதவிகள் செய்வார்.  

கார்லோவும் நற்கருணை பக்தியும்

அவர் நற்கருணை புதுமைகளை அறிவதிலும் பிறருக்கு அறிவிப்பதிலும் சிறந்து விளங்கினார்.  குறிப்பாக தன்னுடைய 14 ஆம் வயதில், அதாவது தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு உலகெங்கும் நடைபெற்ற நற்கருணைப் புதுமைகள் பலவற்றைத் தொகுத்து தான் அதற்கென்றே உருவாக்கிய தனிப்பட்ட வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, பலர் அவற்றை வாசித்து அறிய கார்லோ காரணமானார்.  



நோயும் மரணமும்

தனது பதின்ம வயதில் கார்லோவுக்கு ‘லுகேமியா’ என்கிற இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அன்றைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் திரு அவைக்காகவும் கார்லோ தனது நோயினால் பட்ட அனைத்து துன்பங்களையும் ஒப்புக்கொடுத்தார். ‘ஆண்டவருக்காக நான் அனுபவிக்க வேண்டிய அனைத்து துன்பங்களையும் திருத்தந்தைக்காகவும், திரு அவைக்காகவும் நான் ஒப்புக்கொடுக்கிறேன்’ இதுவே துன்பப் படுக்கையில் கார்லோவின் நாவிலிருந்து புறப்பட்ட நம்பிக்கை நிறைந்த சொற்களாகும். 

2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நோயின் கொடூரத்தினால் தனது 15 ஆம் வயதில் தன்னுயிரை நீத்தார். கார்லோவிற்கு புனித பிரான்சிஸ் அசிசியாரின் மீது தனிப்பற்றும் பக்தியும் உண்டு. எனவே கார்லோவின் வேண்டுகோளின்படியே அவருடைய உடல் அசிசி நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


புனிதர் பட்டத்திற்கான பாதையில்… 

இவர் இறந்த பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 2013 இல் தொடங்கின. கார்லோ 2013 மே 13 அன்று ‘இறை ஊழியர்’ என்கிற நிலைக்கு உயர்த்தப்பட்டார்.  திருத்தந்தை பிரான்சிஸ் இவரை 2018 ஜூலை 5 அன்று ‘வணக்கத்திற்குரியவர்’ என்ற நிலைக்கு உயர்த்தினார். அதனை அடுத்து 2020 அக்டோபர் 10 அன்று ‘அருளாளர்’ (முத்திப்பேறு பெற்றவர்) என்ற நிலைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உயர்த்தப்பட்டார். 



காலத்தால் அழியாத கார்லோவின் உடல் 

புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகளின் பேரில் கார்லோவின் கல்லறை திறக்கப்பட்டபோது கார்லோவின் உடல் இன்னும் சிதையாமல், அழியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. 

அவர் விரும்பி அணியக்கூடிய சாதாரண உடைகளான ஜீன்ஸ் மற்றும் ஒரு ஜோடி ஸ்னீக்கர் வகை காலணிகள் போன்றவற்றால் அவருடைய உடல் உடுத்தப்பட்டு திருப்பயணிகளின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. 



இப்போது கார்லோவின் இதயம் புனிதப்பண்டமாக, அசிசியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் பேராலயத்தில் அருளிக்கமாக காட்சிப்படுத்தப்பட்டு திருப்பயணிகளின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 


முக்கிய பொன்மொழிகள்

‘நாம் எவ்வளவு அதிகமாய் நற்கருணை பெறுகிறோமோ, அவ்வளவுக்கு நாம் இயேசுவைப் போலாகிறோம். இதனால் இந்த பூமியிலேயே நாம் விண்ணகத்தின் முன்சுவையைப் பெறுகிறோம்.’

 ‘நற்கருணை என்பது விண்ணகத்திற்கான நெடுஞ்சாலை.’ 

அருளாளர் கார்லோ அகுடிஸின் பரிந்துரையில் நடந்த அற்புதம்! 

கார்லோ அகுடிஸ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று, பிரேசில் நாட்டில் உள்ள மேத்யூஸ் என்ற சிறுவன் தனது கணையம் செயலிழந்த நிலையில், தான் உண்ட உணவு முதல் தண்ணீர் வரை வாந்தியாக வெளியே வர மயக்கநிலையிலே இருந்து வந்தான். இந்த அரிய வகை நோயை குணப்படுத்துவது இயலாது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மரணத்தை எதிர்நோக்கியிருந்த சிறுவனை, அவர்களின் பங்கில் நடந்த ஒரு வழிபாட்டில் கார்லோ அகுடிஸ் அவர்களின் புனிதப்பண்டம் வைத்து செபிக்கப்பட்டபோது, சிறுவனின் தாத்தா கார்லோவின் புனித பண்டத்தைத் தொட்டு அச்சிறுவன் மீது வைத்து செபிக்க சிறுவன் அற்புதமாய் நலமடைந்தான். 


பாதுகாவல்

ஒரு கணினி நிரலாக்கர் (புரோகிராமர்) ஆகிய இவர், கணினி மற்றும் இணையதளம் பயன்படுத்துவோரின் பாதுகாவலராக அறியப்படுகிறார். கடவுளின் மாட்சிக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு. 




Saturday, 3 October 2020

உங்களது நற்செய்தி

 உங்களது நற்செய்தி நூல்!




முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட 

ஓர் அற்புதமான நூல்  உள்ளது.

மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் 

ஆகியோர் எழுதிய நற்செய்தியே அது. 


இறைவனின் தெய்வீக அன்பையும் ஆற்றலையும்

நமக்குக் காண்பிப்பதற்கு நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன.

இப்போது இறைவன் நம்முடைய வாழ்க்கையில் 

இந்நற்செய்தி மீண்டும் எழுதப்படவும், சொல்லப்படவும் விரும்புகிறார்.


அன்புக்குரியது, உண்மையானது, ஊக்கமளிப்பது என்று

மனிதர்கள் நற்செய்தியை நன்கு படித்து பாராட்டுகிறார்கள். 

ஆனால் அதே மனிதர்கள் நற்செய்தியைப் பற்றி,  

ஆம், உங்களது நற்செய்தி நூலைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?


நினைவிலிருக்கட்டும், நீங்கள் ஒரு நற்செய்தியை எழுதுகிறீர்கள். 

ஒரு நாளைக்கு ஓர் அத்தியாயத்தை எழுதுகிறீர்கள். 

உங்கள் எல்லா செயல்களாலும் இதை எழுதுகிறீர்கள். 

உங்கள் சொற்களாலும் இதை எழுதுகிறீர்கள்.


நீங்கள் ஒரு நற்செய்தியை எழுதுகிறீர்கள். 

நீங்கள் எழுதுவது உண்மையாயிருப்பதில் கவனமாக இருங்கள்.

ஏனெனில், பலருக்கு ‘ஒரே நற்செய்தி’ நூலாக இருக்கப்போவது 

நீங்கள் எழுதும் ‘உங்களது நற்செய்தி நூல்’ மட்டுமே!





Monday, 28 September 2020

திஸ்மஸ் என்ற நல்ல கள்வனின் கதை

திஸ்மஸ் என்ற நல்ல கள்வனின் கதை



பயணத்தின் பல நாட்களுக்குப் பிறகு, ஓர் இரவு திருக்குடும்பம் மிகவும் பாழடைந்த ஓர் இடத்திற்கு வந்தது. அவ்விடம் பெரும் ஆபத்து நிறைந்தது. ஏனெனில் திருடர்களின் கும்பல் அருகிலுள்ள குகைகளில் ஒளிந்துகொண்டு தனிமையாக வரும் பயணிகளைத் தாக்கி அவர்களின் பொருள்களைக் கொள்ளையிடுவது வழக்கம். அன்று அத் திருக்குடும்பம் அத்திருடர்கள் இருக்கும் இடத்தை நெருங்கிய சமயத்தில், திருடர்களின் கும்பல் திருக்குடும்பத்தின் மீது பாய்ந்தார்கள்.

இருப்பினும், அவர்கள் மரியாவின் கையில் இருந்த அந்த அழகான குழந்தை இயேசுவைப் பார்த்த நிமிடத்தில், ஒரு பிரகாசமான ஒளிக்கதிர், அம்பு போல, அத்திருடர் கூட்டத்தின் தலைவனின் இதயத்தில் ஊடுருவியது. வித்தியாசமான இந்நிகழ்வால், திருடனுக்கு மனமாற்றம் ஏற்பட்டது. திருக்குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்காதபடி தனது சக கொள்ளையர்களுக்கு அவர் கட்டளையிட்டான். மேலும் அக்கும்பலுக்கே ஆச்சரியம் தரும்படி, திருக்குடும்பத்தை தன்னுடன் தனது வீட்டில் உணவருந்துமாறு திருடர் கூட்டத்தின் தலைவன் அழைத்தான்.


கொள்ளையரின் தலைவன் தன் இதயம் எவ்வளவு அதிசயமாக இவ்வாறு மாற்றம் பெற்றது என்று தன் மனைவியிடம் சொன்னான். மேலும் திருடர்கள் பலரும் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த தலைவரின் மனைவி திருக்குடும்பத்திற்கு சிறிய ரொட்டிகள், பழங்கள், தேன் அடைகள் மற்றும் பழச்சாறு ஆகியவற்றைக் கொண்டு வந்தாள்.

குழந்தை இயேசுவின் குளியல்

அவர்கள் சாப்பிட்ட பிறகு, மரியா கொள்ளையரின் மனைவியிடம் தனது குழந்தையை குளிப்பாட்ட சிறிது தண்ணீர் கேட்டார். அந்த பெண் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து மரியாவிடம் கொடுத்துவிட்டு, தன் கணவனுடன் அருகிலேயே நின்றார். மரியா குழந்தை இயேசுவின் மீதிருந்த பாலைவன தூசியை அத்தண்ணீரைக்கொண்டு மென்மையாகக் கழுவினார். திருடர்களின் தலைவனும், அவனது கூட்டம் முழவதும் திருக்குடும்பத்தின் தோற்றத்தால் மிகவே மனம் கவரப்பட்டனர். குழந்தை இயேசுவின் வசீகரம், அழகு மற்றும் நன்மைத்தனம் ஆகியவை அங்கிருந்த அனைவரிடமும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கொள்ளையன் தன் மனைவியிடம் இவ்வாறு முணுமுணுத்தான்: “இந்த எபிரேய குழந்தை சாதாரண குழந்தையைப் போன்று தெரியவில்லை. எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நம்முடைய குழந்தையை, அவருடைய குழந்தையின் குளியல் நீரில் கழுவ அனுமதிக்கும்படி அப்பெண்ணிடம் கேள். ஏனென்றால் அது நம் மகனுக்கு சில நன்மைகளைச் செய்யக்கூடும்.”


இந்த வேண்டுகோளுடன் கொள்ளையரின் தலைவனுடைய மனைவி மரியாவை அணுகுவதற்கு முன்பே, மரியா அப்பெண்ணின் பக்கம் திரும்பி, அவளுடைய பையனை அதே தண்ணீரில் கழுவும்படி அறிவுறுத்தினார். மரியாவின் வார்த்தையின்படியே, அந்த பெண் அவசரமாக அந்த அறையின் இருண்ட மூலைக்குச் சென்று, அங்கிருந்த தனது மூன்று வயது சிறுவனைத் தூக்கினாள். அவனுடைய கால்கள் தொழுநோயினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தன. அவள் தனது குழந்தையை, குழந்தை இயேசுவைக் குளிப்பாட்டிய தண்ணீர் இருந்த பாத்திரத்திற்குள் தாழ்த்தியபோது, தண்ணீர் அச்சிறுவனைத் தொட்டவுடன் அவன் உடலில் இருந்து தொழுநோய் பாதிப்புகள் செதில்களாய் வெளியேறுவதைக் கண்டாள். அச்சிறுவன் மீண்டும் தொழுநோய் முற்றிலும் நீங்கி ஆரோக்கியமாக மாறியதால் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

இதே போன்ற எதிர்கால பயன்பாடுகளுக்காக ஒரு பாறையின் துளைக்குள் அத்தண்ணீரைச் சேமிக்கும்படி மரியா அவளிடம் சொன்னார். மறுநாள் அதிகாலையில், திருக்குடும்பத்தினர் திருடர்களின் குகையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தபோது, அக்கொள்ளையரின் தலைவனும் அவனுடைய மனைவியும் தங்களது ஆழ்ந்த நன்றியுணர்வை அவர்களுக்கு வெளிப்படுத்தினர். இவை அனைத்தும் எகிப்துக்கு செல்லும் வழியில் இருக்கக்கூடிய ‘காசா’ என்று அழைக்கப்படும் இடத்தில் நடந்தன.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு

மரியாவின் குழந்தை புனிதத்திலும் அழகிலும் அதிசயமாக வளர்ந்தபோது, அக்கொள்ளையனின் குழந்தை துர்மார்க்கத்திலும் பாவத்திலும் வளர்ந்தது. முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. மரியாவின் மகன் மீட்பராகவும், கொள்ளையரின் தலைவருடைய மகன் திருடனுமாக கல்வாரியில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது சந்தித்துக்கொண்டார்கள். அவன் தான் நல்ல கள்வன். அவனுடைய பெயர் திஸ்மஸ். 

இதுவே கிழக்கத்திய திரு அவையின் மரபில் சொல்லப்படும் செய்தியாக இருக்கிறது. 


ஆதாரம்:

https://www.americaneedsfatima.org/Family-Series/the-legend-of-saint-dismas.html