திஸ்மஸ் என்ற நல்ல கள்வனின் கதை
இருப்பினும், அவர்கள் மரியாவின் கையில் இருந்த அந்த அழகான குழந்தை இயேசுவைப் பார்த்த நிமிடத்தில், ஒரு பிரகாசமான ஒளிக்கதிர், அம்பு போல, அத்திருடர் கூட்டத்தின் தலைவனின் இதயத்தில் ஊடுருவியது. வித்தியாசமான இந்நிகழ்வால், திருடனுக்கு மனமாற்றம் ஏற்பட்டது. திருக்குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்காதபடி தனது சக கொள்ளையர்களுக்கு அவர் கட்டளையிட்டான். மேலும் அக்கும்பலுக்கே ஆச்சரியம் தரும்படி, திருக்குடும்பத்தை தன்னுடன் தனது வீட்டில் உணவருந்துமாறு திருடர் கூட்டத்தின் தலைவன் அழைத்தான்.
கொள்ளையரின் தலைவன் தன் இதயம் எவ்வளவு அதிசயமாக இவ்வாறு மாற்றம் பெற்றது என்று தன் மனைவியிடம் சொன்னான். மேலும் திருடர்கள் பலரும் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த தலைவரின் மனைவி திருக்குடும்பத்திற்கு சிறிய ரொட்டிகள், பழங்கள், தேன் அடைகள் மற்றும் பழச்சாறு ஆகியவற்றைக் கொண்டு வந்தாள்.
குழந்தை இயேசுவின் குளியல்
அவர்கள் சாப்பிட்ட பிறகு, மரியா கொள்ளையரின் மனைவியிடம் தனது குழந்தையை குளிப்பாட்ட சிறிது தண்ணீர் கேட்டார். அந்த பெண் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து மரியாவிடம் கொடுத்துவிட்டு, தன் கணவனுடன் அருகிலேயே நின்றார். மரியா குழந்தை இயேசுவின் மீதிருந்த பாலைவன தூசியை அத்தண்ணீரைக்கொண்டு மென்மையாகக் கழுவினார். திருடர்களின் தலைவனும், அவனது கூட்டம் முழவதும் திருக்குடும்பத்தின் தோற்றத்தால் மிகவே மனம் கவரப்பட்டனர். குழந்தை இயேசுவின் வசீகரம், அழகு மற்றும் நன்மைத்தனம் ஆகியவை அங்கிருந்த அனைவரிடமும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கொள்ளையன் தன் மனைவியிடம் இவ்வாறு முணுமுணுத்தான்: “இந்த எபிரேய குழந்தை சாதாரண குழந்தையைப் போன்று தெரியவில்லை. எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நம்முடைய குழந்தையை, அவருடைய குழந்தையின் குளியல் நீரில் கழுவ அனுமதிக்கும்படி அப்பெண்ணிடம் கேள். ஏனென்றால் அது நம் மகனுக்கு சில நன்மைகளைச் செய்யக்கூடும்.”
இந்த வேண்டுகோளுடன் கொள்ளையரின் தலைவனுடைய மனைவி மரியாவை அணுகுவதற்கு முன்பே, மரியா அப்பெண்ணின் பக்கம் திரும்பி, அவளுடைய பையனை அதே தண்ணீரில் கழுவும்படி அறிவுறுத்தினார். மரியாவின் வார்த்தையின்படியே, அந்த பெண் அவசரமாக அந்த அறையின் இருண்ட மூலைக்குச் சென்று, அங்கிருந்த தனது மூன்று வயது சிறுவனைத் தூக்கினாள். அவனுடைய கால்கள் தொழுநோயினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தன. அவள் தனது குழந்தையை, குழந்தை இயேசுவைக் குளிப்பாட்டிய தண்ணீர் இருந்த பாத்திரத்திற்குள் தாழ்த்தியபோது, தண்ணீர் அச்சிறுவனைத் தொட்டவுடன் அவன் உடலில் இருந்து தொழுநோய் பாதிப்புகள் செதில்களாய் வெளியேறுவதைக் கண்டாள். அச்சிறுவன் மீண்டும் தொழுநோய் முற்றிலும் நீங்கி ஆரோக்கியமாக மாறியதால் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
இதே போன்ற எதிர்கால பயன்பாடுகளுக்காக ஒரு பாறையின் துளைக்குள் அத்தண்ணீரைச் சேமிக்கும்படி மரியா அவளிடம் சொன்னார். மறுநாள் அதிகாலையில், திருக்குடும்பத்தினர் திருடர்களின் குகையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தபோது, அக்கொள்ளையரின் தலைவனும் அவனுடைய மனைவியும் தங்களது ஆழ்ந்த நன்றியுணர்வை அவர்களுக்கு வெளிப்படுத்தினர். இவை அனைத்தும் எகிப்துக்கு செல்லும் வழியில் இருக்கக்கூடிய ‘காசா’ என்று அழைக்கப்படும் இடத்தில் நடந்தன.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு
மரியாவின் குழந்தை புனிதத்திலும் அழகிலும் அதிசயமாக வளர்ந்தபோது, அக்கொள்ளையனின் குழந்தை துர்மார்க்கத்திலும் பாவத்திலும் வளர்ந்தது. முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. மரியாவின் மகன் மீட்பராகவும், கொள்ளையரின் தலைவருடைய மகன் திருடனுமாக கல்வாரியில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது சந்தித்துக்கொண்டார்கள். அவன் தான் நல்ல கள்வன். அவனுடைய பெயர் திஸ்மஸ்.இதுவே கிழக்கத்திய திரு அவையின் மரபில் சொல்லப்படும் செய்தியாக இருக்கிறது.
ஆதாரம்:
https://www.americaneedsfatima.org/Family-Series/the-legend-of-saint-dismas.html