Friday, 29 March 2024

சிலுவைப் பாடங்கள்

சிலுவைப் பாடங்கள்





1. கசப்பை விரும்பு

மருந்திற்குக்கூட கசப்பை விரும்பாத சமுதாயம் இது. திருச்சிலுவையை துன்பம், அவமானம், போராட்டம், கண்ணீர், வேதனை என்றெல்லாம் முத்திரைகுத்தி மூலையில் கிடத்தினோம். ஆனால் இறைவனோ திருச்சிலுவையை விடுதலையின் வாசலாகவும், மகிழ்ச்சியின் மந்திரச்சாவியாகவும், மீட்பின் கருவியாகவும் பயன்படுத்தினார். இவ்வுலகம் துன்பத்தை வெறுக்கிறது. ஆனால் கடவுளோ துன்பத்தை இன்பத்திற்கான திறவுகோலாக மாற்றியிருக்கிறார். இறைவனின் பாடத்திட்டத்தில் சிலுவை ஒரு தெரிவுப் பாடமல்ல மாறாக கட்டாயப்பாடம் (Cross is not optional but mandatory and compulsory).  வாழ்வில் சிலுவையைப் படிக்க விரும்பாதவன் கிறித்துவின் சீடனாக இருக்க முடியாது. புனித வெள்ளியைக் கடக்காமல் உயிர்ப்பின் ஞாயிறுக்குள் நுழைய முடியாதல்லவா? எனவே உளியின் வலி தாங்கும் கல் மட்டுமே சிற்பமாகும். செதுக்கப்பட அனுமதிக்காத கல் படிக்கல்லாய் இருந்து காலால் மிதிபடும். செதுக்கப்பட அனுமதித்த கல்லோ தெய்வத்தின் சிலையாகி கோவிலுக்குள்ளே எல்லோராலும் கை கூப்பி வணங்கப்படும். 

2. சுமக்கப் பழகு 

‘தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது’ (லூக்கா 14:27). இயேசுவின் சீடத்துவத்தின் முதன்மையான நிபந்தனையே சுமப்பதுதான். இயேசுவின் சீடர்கள் அனைவரும் சுமக்க அழைக்கப்படுகிறார்கள். தன் குழந்தையால் சுமக்க இயலாத அளவிற்கு எந்த தாயும் சுமையைக் கட்டி தன் பிள்ளையின் தலையில் வைப்பது உண்டா? கடவுளும் அவருடைய பிள்ளைகளாகிய நம்மீது நாம் சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை. ‘சுமை பெரிதாய் இருக்கிறதெனப் புலம்புவதை விடுத்து தோள்களை அகலமாக்கித் தா எனக் கேள்’ என்கிறது யூதப் பழமொழி. இயேசுவின் பாடசாலையில் சுமையாளர்களே சாதனையாளர்கள். பாரத்தைக் குறைக்க முடியாது, ஆனால் தோள்களை வலுப்படுத்திக் கொள்ளலாம்.  “சிறகுகள் விரிக்கப்படும் பொழுது சிகரங்கள் எட்டப்படுகின்றன. சிலுவைகள் சுமக்கப்படும் பொழுது சிம்மாசனங்கள் கிடைக்கப்பெறுகின்றன.”  


புனித வியாழன் - 7 ஆலயங்கள் சந்திப்பு

புனித வியாழனன்று 7 ஆலயங்கள் சந்திப்பு ஏன்? 




புனித வியாழன் அன்று இயேசுவின் இறுதி இரவு உணவு திருப்பலியைக் கொண்டாடியதைத் தொடர்ந்து, ஏழு ஆலயங்களுக்கு திருப்பயணம் செய்யும் ஒரு பண்டைய கத்தோலிக்கப் பாரம்பரியம் உள்ளது.

இந்த ஏழு ஆலயங்கள் என்பவை ஒவ்வொன்றும் கிறிஸ்து தமது பாடுகளின் நேரத்தில் சந்தித்த, அதாவது கெத்சமனி தொடங்கி கல்வாரியில் அவரது இறப்பு வரையிலான இறுதி ஏழு இடங்களைப் பிரதிபலிக்கின்றன. 

கைது செய்யப்படுவதிலிருந்து சாவது வரையிலான இயேசுவின் பாடுகளின் பயணம் பின்வரும் ஏழு இடங்களைக் கொண்டது. 

1. கெத்சமனித் தோட்டம் (லூக் 22: 39-46)
2. அன்னாவின் வீடு (யோவா 18:19-22)
3. தலைமைச் சங்கம் (மத் 26: 63-65)
4. பிலாத்துவின் அரண்மனை (யோவா 18: 35-37)
5. ஏரோதுவின் மாளிகை (லூக் 23: 8-9)
6. மீண்டும் பிலாத்துவின் அரண்மனை (மத் 27: 22-26)
7. கல்வாரி மலை (மத் 27: 27-31)

இந்த பாரம்பரியத்தின் தோற்றம் உரோம் நகரில் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து என அறிகிறோம். புனித பேதுருவிற்குப் பிறகு “உரோமின் இரண்டாவது திருத்தூதர்” என்று அழைக்கப்படும் புனித பிலிப் நேரி (1515-1595), உரோமின் கற்கள் வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு, உரோமிலுள்ள ஏழு பசிலிக்காக்களுக்குச் செல்வதுண்டு. பின்னாளில், பலரும் அவருடன் இத்திருப்பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவரே புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளைத் தியானித்தவாறு, ஏழு ஆலயங்களுக்கு இரவில் நடந்து செல்லும் பாரம்பரியத்தைத் தொடங்கினார்.

கத்தோலிக்க பழம்பெரும் பாரம்பரியப்படி புனித வியாழன் அன்று 7 ஆலயங்களைச் சென்று சந்தித்து செபிக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகின்றது. இவ்வாறு 7 ஆலயங்களுக்குச் சென்று நற்கருணை ஆண்டவரைச் சந்தித்து செபிப்பது, நாமும் இயேசுவுடைய பாடுகளின் பயணத்தில் உடன் நடக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமே. 

ஆகவே, 

புகைப்படம் எடுப்பதற்கோ, அலங்காரங்களைக் கண்டு அதிசயித்து ஆச்சரியப்பட்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கோ நாம் ஆலயம் ஆலயமாகச் செல்லவதில்லை என்பது நமக்கு நினைவிருக்கட்டும்! 

இயேசுவின் பாடுகள் எவ்வாறு துன்பகரமாக இருந்தன என்பதை நாம் தியானிப்பதற்கே ஆலயங்களைச் சென்று சந்திக்கும் இம்முயற்சி நமக்கு வழிசெய்யட்டும்! 

வெளிப்புற அலங்காரங்களும் ஆடம்பரங்களும் இந்நாளில் நம்மை திசைதிருப்பாதிருக்கட்டும்!

பல்வேறு செயல்களில் பரபரப்பாய் இருக்காமல் இறைவனோடு தனித்திருக்க, விழித்திருக்க, செபித்திருக்க இந்நாள் உதவட்டும்!

Thursday, 28 March 2024

தோள் துகிலுக்கு முத்தம்

 தோள் துகிலுக்கு முத்தம்


நான் தோள் துகிலை அணியும்போதும், கழற்றும்போதும் அதை முத்தமிடுவேன். 

ஏனென்றால், பரிதாபத்துக்குரிய என் சுயத்தை விட குருத்துவம் பெரிது. தகுதியற்ற நான் ஒரு மாபெரும் பரிசைப் பெற்றிருக்கிறேன் என்பதை இந்த தோள் துகில் எனக்கு நினைவூட்டுகிறது.

ஏனென்றால் தோள் துகில் அணிந்த நிலையில், கிறிஸ்துவின் இடத்தினின்று நான் பேசுவதும் செயல்படுவதும் எனது புனிதமான பாக்கியம்.

ஏனென்றால், என் குருத்துவ அருள்பொழிவில் நான் முதன்முறையாக தோள் துகிலை அணிந்த அப்பொன்னாளில், நான் கடவுளின் அருளால் மட்டுமே இதனைக் காப்பாற்ற முடியும் என்று வாக்குறுதி அளித்தேன்.

ஏனென்றால், கிறிஸ்து அளிக்கும் நுகத்தடியை நான் என்மீது ஏற்றுக்கொள்வதால், அவருடன் நான் ஒன்றித்திருக்கும்போதுதான் நான் நிறை பலனளிக்க முடியும், இளைப்பாற முடியும்.

ஏனென்றால், தோள் துகில் என்பது கடவுள் என்னை அருள்பணியாளராக அனுப்பும் மக்களுடனான எனது பிணைப்பு. தோள் துகில் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய பணியின் அடையாளம். தோள் துகில் அணிந்து, நான் திருமுழுக்கின் வழியாக அவர்களை திரு அவையில் சேர்க்கிறேன், அவர்களின் பாவங்களை மன்னித்து, கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அவர்களுக்கு வழங்குகிறேன், புனித திருமணத்தில் அவர்களை ஒன்றிணைத்து, நோயில்பூசுதலில் அவர்களை ஆறுதல்படுத்துகிறேன். 

ஏனென்றால், நான் இறக்கும் நாளில், இறுதி மூச்சுவிடும்போது, யாராவது தோள் துகிலை என் உதடுகளில் வைத்திருப்பதால், வாழ்நாள் முழுவதும் நான் கடவுளின் பணியாற்றிய உன்னத கொடைக்காக அவருக்கு நன்றி சொல்ல முடியும் என வேண்டுகிறேன். 

(நானும் தோள் துகிலுக்கு அன்பு முத்தம் தர மறந்ததில்லை.) 

குருத்துவத் திருநாள் வாழ்த்துகள்! 

தமிழாக்கம் 

அருள்பணி. மரியசூசை, 

திருச்சி மறைமாவட்டம்.