Saturday, 27 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 வெறுப்பை வேரறுப்போம்! அன்பை அறுவடை செய்வோம்!

மத்தேயு 5: 43-48


மனிதர்களிடத்தில் அன்பிற்கான எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவரும் எல்லோராலும் அன்பு செய்யப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் அதே சமயத்தில் எல்லோரையும் அன்பு செய்வதற்குத் தயக்கமும் காட்டுகின்றோம். பிறரால் வெறுக்கப்பட வேண்டும் என்று நம்மில் எவரும் இங்கு விரும்புவதில்லை. ஆனால் அதே சமயத்தில் பிறர் மீது வெறுப்பைக் காட்ட நாம் துளியும் தயங்குவதுமில்லை. இந்த முரண்பாடு நம்முடைய வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது. 

அன்பு ஒன்றே நிறைவுக்கு நம்மை அழைத்துச் செல்லும். திருச்சட்டங்களின் நிறைவு அன்பே. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறார் வள்ளுவர். ‘அன்பே அனைத்துக்கும் ஆதாரம்’ என்பதை எல்லாச் சமயங்களும் எடுத்துரைக்கின்றன. அன்பே கடவுள் என்பது இறைமொழி. ஆனால் அந்த அன்பை வாழ்வாக்குதில் எண்ணற்ற சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன என்பதை அதிகமாய் நம்முடைய வாழ்வு அனுபவங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. 

பிடித்தவருக்கு அன்பு, பிடிக்காதவருக்கு வெறுப்பு என்பதைத்தான் நம்முடைய வாழ்வின் போக்காக அமைத்திருக்கிறோம். ஆனால் பகைவருக்கு அன்பு, வெறுப்போருக்காக செபம் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு நிறைவாழ்வுக்கான புதிய பாதையை நமக்குக் கற்றுத்தருகிறார். அப்பாதையை ‘அன்பு’ என்று இயேசு நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாதையில் அவரே நமக்குமுன் நடந்தும் காட்டியிருக்கிறார். நமது விண்ணகத் தந்தை நிறைவாக இருக்கிறார் ஏனெனில் அவர் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கிறார். அவரைப் போன்று நாமும் நிறைவாக இருக்க நாமும் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும் என்பதே இயேசு நமக்குத் தரும் படிப்பினை.

நம்மை அன்பு செய்பவரை பதிலுக்கு அன்பு செய்வதே இன்;றைய சூழலில் மிகவும் சவாலாக இருக்கும் பட்சத்தில், நம்மை வெறுப்பவரையும், அன்பு செய்ய மறுப்பவரையும் எப்படி அன்பு செய்வது? அன்பு என்பதே அனைவரையும் அரவணைப்பதுதானே. அந்த அன்பில் அளவுபார்க்க அளவுகோலையும், எடை பார்க்க தராசையும் தூக்கித் திரிவது சரியாகுமோ? வெறுப்பை விதைத்தால் வெறுப்பையே அறுவடை செய்யமுடியும். அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யமுடியும். 

அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுபவரா நீங்கள்? பிறகு என்ன தயக்கம், அன்பை எல்லோரிடத்திலும் விதையுங்கள். வெறுப்புணர்வு அடுத்தவரை பாதிப்பதைவிட நம்மையே அதிகம் பாதிக்கும். அன்பை அடுத்தவருக்கு நாம் வழங்குகிறதுபோது அது அவர்களைவிட நம்மையே அதிகமாக மகிழ்வடையவும், நிறைவடையவும் செய்யும். நாம் பிறரால் அன்பு செய்யப்படுவதில் அல்ல, நாம் பிறரை அன்பு செய்வதில்தான் அன்பின் உன்னதத்தை உணர முடியும். ஆம், வெறுப்பு நஞ்சென்றால், அன்பே அகில உலகும் வாழ்வதற்கான அமிழ்தும் அருமருந்தும் ஆகும். எனவே வெறுப்பை வேரறுப்போம். அன்பை அறுவடை செய்வோம்.