Friday, 26 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!

மத்தேயு 5:20-26


மனிதன் தனித்தீவல்ல. மனிதன் ஒரு சமூக உயிரி என்று மானுடவியலாளர்கள் சொல்வார்கள். மனித வாழ்வு உறவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. உறவுகள் மனித வாழ்வுக்கு வர்ணம் சேர்க்கின்றன. உறவுகளின் உன்னதம் மனித உயிர்களை உயிர்த்துடிப்புடன் வாழவும் வளரவும் வைக்கிறது. ஆனால் இன்றைய சமுதாயம் உறவை ஒதுக்கி பிளவைப் போற்றுகிறது. நெருக்கத்தை வெறுத்து தொலைவில் செல்ல விரும்புகிறது. அன்பு முற்றிலும் குறைந்து அறிவு மட்டுமே அதிகரித்ததால் வந்த ஆபத்து என்னவென்றால் உறவுகளற்ற சமுதாயம் என்று சொல்லலாம். 

இப்படியாக மனிதன் வளர வளர நாளுக்குநாள் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய வட்டம் ஒன்றை வரைந்து கொண்டு, அந்த வட்டத்தினுள் வெளி நபர் எவரையும் சேர்ப்பதைத் தவிர்த்து வருகிறான். உறவோடு வாழப் பணிக்கப்பட்ட மனிதன் இன்று உறவுகளைத் தொலைத்துவருகிறான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ஆனால் டிஜிட்டல் உலகில் வாழும் நமக்கு உறவு என்பதே பழைய சித்தாந்தமாகவும், நாகரிக வாழ்வுக்குத் தடையாக இருப்பதாகவும் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

இப்படி உறவுகள் அஸ்தமித்துப்போன சூழலில் உறவுச் சிறகை உயரே விரித்து உலகை வட்டமிட இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு அழைப்பு தருகிறார். பலிபீடத்திற்கு வரும்போது பிளவுபட்ட உறவுகளோடு வரவேண்டாம் என்று இயேசு சொல்கிறார். நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு காணிக்கையை செலுத்த நமக்கு கற்பிக்கிறார். உலகமே சமூக இடைவெளியைப் பெரிதும் வலியுறுத்தும் இக்கொரோனா காலச்சூழலில், உள்ளங்களுக்கு இடையே உருவாகிக் கொண்டிருக்கும் இடைவெளியானது இன்றைய உறவுகளுக்கு சமாதிகளைக் கட்டுகிறது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

‘மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று’, என்று படைப்பின் தொடக்கத்தில் கருதிய கடவுள் மனிதனுக்கு தகுந்த துணையை ஏற்படுத்தினார். இணைந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்றும், இறைவனின் விருப்பம் என்றும் படைப்பின் தொடக்கத்திலேயே நமக்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது. ‘உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்பதை உணர்ந்து, நம் சகோதர  சகோதரிகளுடன் உள்ள உறவை சீர் செய்ய முற்பட வேண்டும். இணையாத தண்டவாளங்களாய் இறைவன் முன் இனியும் நாம் நிற்க வேண்டாம். உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்வோம். இதயங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவோம். இனியாவது இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!