‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!
மத்தேயு 7:7-12
இன்றைய உலகில் அறிவு பெருகப் பெருக மனிதர்களின் மூளை வீங்குகிறது. ஆனால் இதயமோ சுருங்கி வருகிறது. மூளை வீங்கி இதயம் சுருங்கிய மனிதர்கள் நமது சமுதாயத்தில் நாளும் அதிகரித்து வருகின்றனர். தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கை இங்கு பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அடுத்தவரை மையப்படுத்தி வாழ வேண்டும் என்பது பலருக்கு வருத்தமளிக்கிறது. மூளையால் இயக்கப்படும் மனிதர்கள் பெரும்பாலும் தன்னை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இதயத்தால் இயக்கப்படும் மனிதர்களே அடுத்தவரை மையப்படுத்திய சிந்தையையும் செயலையும் கொண்டிருப்பார்கள். இப்படிப் பார்க்கிறபோது இதயத்தால் இயக்கப்படுகிறவர்களைவிட மூளையால் இயக்கப்படும் மனிதர்களே நம்மில் அதிகம் பேர் இருக்கிறோம் என்பது கண்கூடு.
பேசும்போது ‘நானும் நீயும்’ ‘நீயும் நானும்’ என்று சொல்கிறோம். இந்த இரண்டிற்கும் பொருள் ரீதியாக பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் வாழ்வுச் செயல்பாட்டு ரீதியாக பெரிய வித்தியாசம் இருக்கிறது. ‘நானும் நீயும்’ என்பதில் நம்மை முன்னுக்கு வைத்து அடுத்தவரை பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. ‘நீயும் நானும்’ என்பதில் அடுத்தவரை முன்னுக்கு வைத்து நம்மைப் பின்னுக்குத் தள்ளும் எண்ணப்போக்கு ஒளிந்துள்ளது. வார்த்தைகளில் பெரிய வித்தியாசம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையிலே இது பெரிய வித்தியாசத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகிறது.
‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.’ (மத் 7:12) என்று இன்றைய நற்செய்தியில் இயேசு பொன்விதி ஒன்றைக் கற்பிக்கிறார். நாம் உண்பதைவிட அடுத்தவருக்கு ஊட்டிவிடுவதும், நாம் மகிழ்ந்திருப்பதைவிட அடுத்தவரை மகிழ்ந்திருக்கச் செய்வதும், நாம் பெற்றுக்கொள்வதைவிட அடுத்தவருக்குக் கொடுப்பதுமே வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும். நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உதடுகளில் நம்மால் பூக்கும் புன்னகையே நம்முடைய வாழ்க்கையை அழகாக்கும்.
கடவுள் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுகிறார். எதற்காக? அவரைப் போன்று நாம் பிறருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக. கடவுள் நம் வாழ்க்கை என்னும் பையில் நன்மைத்தனங்களை நிரம்பக் கொட்டுகிறார். எதற்காக? நாமும் அடுத்தவருடைய வாழ்க்கையில் அவரைப் போன்று நன்மைத்தனங்களை தாராளமாய்ச் செய்வோம் என்பதற்காக. ‘நானும் நீயும்’ என்னும் மூளையின் இயக்க சூத்திரத்தை சுட்டுப்பொசுக்கி, ‘நீயும் நானும்’ என்னும் இதயத்தின் இயக்க சூத்திரத்தால் இறைவனை இம்மண்ணில் பிரதிபலித்து வாழ்ந்தவர் இயேசு. எனவே இயேசுவின் வழியில் நாமும் ‘நானும் நீயும்’ என்று அல்ல ‘நீயும் நானும்’ என்று வாழப் பழகுவோம்!