Wednesday, 24 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 திரும்பி வருவோம்! திருந்தி வருவோம்!

லூக்கா 11:29-32


உலகம் உயிர்களால் நிறைந்துள்ளது. உயிர்கள் உறவுகளால் இயக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம் உறவு. ஆனால் உறவு எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அடிக்கடி உறவு உடைபடுகிறது, முறிவுபடுகிறது. இப்படி உடைபடுகின்ற, முறிவுபடுகின்ற உறவுகள் மீண்டும் சீர்செய்யப்படுவது மனித வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. கடவுளுக்கும் மனிதருக்குமான உறவில் இது இன்னும் கூடுதல் அவசியமாகிறது. 

கடவுள் தம் அன்பின் மிகுதியால் உலகைப் படைக்கிறார். அதே அன்பினால் உந்தப்பட்டு படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்து அவனோடு உறவு பாராட்டுகிறார். ஆனால் இறைவனுக்கும் மனிதனுக்குமான இந்த உறவு, வெகு சீக்கிரத்தில் முறிவடைகிறது. இந்த உறவு உடைப்பட்டதன் காரணம் மனிதன். ஆனால் மனிதன் முறித்துப்போட்ட அந்த உறவைச் சீர்படுத்த, ஒப்புரவாக்க முன்னெடுப்பு எடுத்தவர் இறைவனே. இவ்வாறு மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள உறவு மனிதனின் சுயநலத்தினால் அடிக்கடி முறிவுபடுவதும், பின்னர் கடவுள்தாமே இந்த உடைபட்ட உறவுப்பாலத்தை மீண்டும் புதுப்பிக்க முன்வருவதும் மீட்பின் வரலாற்றின் தொடர் நிகழ்வுகள். 

இயேசுவின் காலத்தில் யூதர்கள் கடவுளோடு கொண்ட உறவில் பிளவுபட்டு நிற்கிறோம் என்கிற எண்ணம் எள்ளளவுமின்றி இருந்தனர். கடவுளைவிட்டு விலகிப்போயினும் அவர்களிடம் குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லை. எனவேதான் இயேசு அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்தார். பழைய ஏற்பாட்டிலிருந்து நினிவே மக்களையும், தென்னாட்டு அரசியையும் மேற்கோள்காட்டுகிறார். பிற இனத்தவர்களான இவர்கள் கடவுளின் உறவைப் பொருட்படுத்தால் மனம்போன போக்கில் வாழ்ந்திருந்தவர்கள். ஆனால் மனமாற்றத்திற்கான அழைப்பு தங்களிடம் வந்தபோது, அதற்கேற்ப உண்மைக் கடவுளின் பக்கம் திரும்பியும், திருந்தியும் வந்தார்கள். அது கடவுளுடனான அவர்களது உறவைப் புதுப்பித்தது. 

இன்று இறைவனிடமிருந்து எவ்வளவு தூரம் நாம் விலகிப் போயிருக்கிறோம் என்று சற்று சிந்திப்போம். இறை உறவின் முறிவையும் அது நம் வாழ்வில் தரும் வேதனையையும் எண்ணி, இறைவனுடனான உடைந்துபோன நம் உறவை மீண்டும் ஒட்டிட விருப்பம் கொள்வோம். கடவுளிடம் திரும்பி வந்ததாலும், திருந்தி வந்ததாலும் நினிவே மக்களும் தென்னாட்டு அரசியும் இறை உறவிலே மகிழ்வடைந்தனர். அவர்களைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் நிறைவும் மகிழ்வும் அடைய, தந்தையாம் கடவுளின் கரங்களுக்குள்ளாக திரும்பி வருவோம், திருந்தி வருவோம்.