Tuesday, 23 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரிப்போம்!

மத்தேயு 6:7-15


உறவுகளை உறுதிப்படுத்துவது உரையாடல்கள். உரையாடல்கள் குறைந்தால் உறவாடல்கள் குறைந்துவிடும். மனிதர் கடவுளோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்திட, மனிதருக்கும் கடவுளுக்குமான உரையாடல் மிகவே அவசியமாகிறது. இறைவனுக்கும் மனிதருக்குமான இந்த உரையாடலைத்தான் செபம் என்று சொல்கிறோம். 

திருவிவிலியத்தில் நிறைய செபங்கள் உண்டு. திரு அவையின் மரபும் நமக்கு நிறைய செபங்களைக் கற்றுத்தந்துள்ளது. ஆனால் பல சமயங்களில் வார்த்தைகளை சடங்காச்சாராமாக பொருள்புரியாமல் சொல்வதையே நமது செபம் என்று எண்ணும் நிலை பரவலாக உள்ளது. அதிக வார்த்தைகள் சொல்லி செபித்தால் அது சிறந்த செபம் ஆகிவிடுமா? அழகான வார்த்தைகள், அடுக்குமொழி, கவிதை நடை இவற்றை எல்லாம் செபத்தில் புகுத்தினால் அது உயர்ந்த செபமாக மாறிவிடுமா? அப்படி ஒருபோதும் இல்லை என்கிறார் இயேசு. 

யூத மரபில் நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்தி செபித்து, மக்கள் முன் தங்களைச் செப மனிதர்களாக காட்டிக்கொண்ட பல பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இருந்தார்கள். இவர்கள் வார்த்தை விளையாட்டில் வல்லுநர்கள், மனப்பாடமாய் திருச்சட்டத்தை ஓதியவர்கள், அச்சுப்பிசகாமல் திருப்பாடல்களைச் சொல்லி வேண்டியவர்கள். ஆனால் இவர்களை செப மனிதர்களாக இயேசு அங்கீகரிக்கவில்லை. இவர்களைப் போல் செபியுங்கள் என்றும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் உதட்டால் இறைவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உள்ளமோ வெகுதொலைவில் இருந்தது.

இயேசு எல்லாவற்றையும் போல செபத்திலும் புதுப்புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார். ‘மரத்தை வைத்தவன். தண்ணீர் ஊத்துவான்’ என்னும் கூற்றுக்கேற்ப, நாம் வாய்திறந்து சொல்லும் முன்னே நம் தேவைகளை இறைவன் அறிந்திருக்கிறார் என்கிறார் இயேசு. எனவே தேவைகளைப் பட்டியலிடுவது செபம் ஆகாது என்பது இயேசுவின் போதனை. இறைவனைத் தந்தை என அறிமுகப்படுத்தும் இயேசு, இறைவனோடு அன்புறவில் இணைந்து உரையாட, உறவாட அழைக்கிறார். பிள்ளைகள் பெற்றோரிடம் பேசுவது போல கடவுளிடம் நம்மை செபிக்கச் சொல்கிறார். ‘தந்தை – பிள்ளை உறவு’ என்னும் ஒரு புதிய உறவுப் பரிமாணத்தை மனிதருக்கும் இறைவனுக்கும் இடையே ஏற்படுத்தித் தருகிறார் இயேசு. 

பல பக்கங்களை பாராமலும், புரியாமலும் செபிப்பதைவிட, ஒற்றைச் சொல்லையாவது இதயத்திலிருந்து இறைவனிடம் சொல்லி செபிப்போம். கடவுளிடம் வார்த்தைகளை உதிர்ப்பதை விட அன்பை உதிர்ப்போம். உதடுகள் திறந்து பேசுவதைவிட உள்ளம் திறந்து பேசுவதே செபத்திற்கு வலு சேர்க்கும். இயேசு அப்படித்தான் செபித்தார், செபிக்கச் சொன்னார். 

எனவே இன்று இயேசு கற்றுத்தந்த செபத்தை உதட்டால் அல்ல உள்ளத்தால் உச்சரித்து செபிப்போம்.