Monday, 22 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 அறிந்ததை அல்ல அனுபவித்ததை அறிக்கையிடுவோம்!

மத்தேயு 16:13-19


கடவுளைப் பற்றி அடுத்தவர் நமக்குச் சொல்லிக் கொடுத்ததையே ஆண்டுக்கணக்காக நாம் சொல்லிக் கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது அறிந்துகொண்ட ஆண்டவரைத் தனிப்பட்ட வாழ்வில் அனுபவித்து, அறிக்கையிடும் ஆர்வம் கொண்டு செயல்படப்போகிறோமா? நம்முடைய சொந்த இறை அனுபவத்தில் பிறக்கும் நம்பிக்கையையே இறைவன் விரும்புகிறார். அதுவே இறைவனுடைய பாராட்டையும் நமக்குப் பெற்றுத் தரும். அதையே பேதுருவின் சொந்த இறை அனுபவத்தில், இயேசு அனுபவத்தில் பிறந்த நம்பிக்கை அறிக்கை நமக்குச் சொல்கிறது.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னைப் பற்றி மக்களும், தன்னுடைய சீடர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ (மத் 16:15) என்று கேட்ட இயேசுவுக்கு, சீமோன் பேதுரு கொடுத்த பதில்: ‘நீர் மெசியா. வாழும் கடவுளின் மகன்’ என்பதே. 

பேதுருவின் இப்பதில் இயேசுவுக்கு மிகவே பிடித்துப்போகிறது. அதற்கான காரணத்தையும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசு யாரென்று பேதுரு அறிக்கையிட்டாரோ, அது மனிதரால் பேதுருவுக்கு படிப்பிக்கப்பட்டதல்ல. மனிதர்களிடம் கேட்டு அறிந்ததைச் சொல்லி அவர் இயேசுவை அசத்த நினைக்கவில்லை. அல்லது புகழ்ச்சிக்குரிய வெற்று வார்த்தைகளைப் பேசி இயேசுவிடம் நற்பெயர் எடுக்கும் நினைப்பும் அவரிடம் இல்லை. மாறாக அது கடவுளால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டது. கடவுளே வெளிப்படுத்தியிருக்கும்படியால் அப்பதிலில் அப்பழுக்கு இல்லை. அப்பதில் பரிசுத்தமானது, உண்மையானது, கடவுளின் வெளிப்பாட்டை பேதுரு தனிப்பட்ட விதத்தில் இயேசுவில் அனுபவித்து உணர்ந்ததால் கிடைத்தது. 

கடவுளைப் பற்றியும், கடவுள் அனுபவத்தைப் பற்றியும் அடுத்தவர் கூறும் கருத்துக்கள் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஒருவேளை அது உண்மையாகவே இருக்கும் நிலையிலும், அது நம்முடைய தனிப்பட்ட ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் பெரிதாகப் பயன்படப்போவதில்லை என்பதையும் பேதுருவின் பதிலிலிருந்து உணர வேண்டும்.

கடவுளைப்பற்றி பிறர் நமக்குப் படிப்பித்த கருத்துக்கள் நமக்குத் தேவை. ஆனால் அவையெல்லாம் சிறுபிள்ளைக்கு நடைபழக உதவும் நடைவண்டி போலத்தான். வளர்ச்சி அடைந்த பின்பும் நடைவண்டியையே பயன்படுத்தி நடக்க நினைத்தால் நம்மை என்னச் சொல்வது? வளர்ந்த மனிதன் நடைவண்டியை தள்ளிவைத்து, நடைவண்டி கொண்டு நடக்க கற்றுக்கொண்டவற்றை மனதில்வைத்து,  சொந்தக்காலில் சுயமாய் நடப்பதில்தானே வாழ்க்கையின் சுவாரசியம் இருக்க முடியும்? 

எனவே இயேசுவை அறிவதோடு மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வில் அவரை அனுபவிப்போம். அப்படி அனுபவித்த இயேசுவை அனைவருக்கும் அறிக்கையிடுவோம்!