Saturday, 20 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 சோதனைகளை சாதனைகளாக்குவோம்!

மாற்கு 1:12-15



சோதனை என்பது வாழ்வில் எல்லாத் தளங்களிலும் எதிர்வருகின்ற ஒன்று. ஒரு பொருளை வாங்கும் முன்பு அதன் தகுதியையும் தரத்தையும் சோதித்து அறிகிறோம். ஒரு மனிதரை வேலைக்கு அமர்த்தும் முன்பு அவருடைய திறமையைச் சோதிக்கிறோம். ஒரு மாணவரின் கல்வித் திறனை தேர்வு வைத்து தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு சோதனை என்பது ஒரு பொருளுடைய அல்லது ஒரு நபருடைய தரத்தையும், தகுதியையும் பிறர் அறியும்படி பறைசாற்றுகிறது. சோதித்தறியப்படாத எப்பொருளும் இவ்வுலகில் பயன்பாட்டுக்கு உகந்ததென்று பிறரால் விரும்பப்படுவதில்லை. சோதித்தறியப்படாத மனிதரையும் வரலாறு தன் பக்கங்களில் வரவு வைப்பதில்லை. 

‘சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி. வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி’ என்று விரக்தியின் விளிம்பில் கவிஞர் ஒருவர் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். சோதனைகளில் சோர்ந்து போகின்ற மனிதர்களே வேதனையின் பிடியில் சிக்கி வெந்துபோகிறார்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்ற சோதனைகளில் போது சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். சோர்ந்து போகாமலிருக்க வேண்டுமென்றால் இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும். இறைவனைச் சார்ந்து இருப்பவர்கள் மட்டுமே சோதனைகளில் சோர்ந்து போவதில்லை. மாறாக சோதனைகளை சாதனைகளாக்கிவிடுகிறார்கள்.  

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சோதனை அனுபவத்தைப் பார்க்கிறோம். இயேசு பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் தனித்திருக்கிறார். அங்கு சாத்தானால் சோதிக்கப்படுகிறார். அச்சோதனைகளை முறியடித்து சாதனை மனிதராய் சமுதாயத்திற்கு திரும்புகிறார். தனிமை சோதனையின் களம். இயேசு தன்னுடைய தனிமையை தந்தையாம் கடவுளுடன் செலவிட்டார். அதுவே அவருக்கு சோதனையை வெல்லும் வலிமையையும், வல்லமையையும் கொடுத்தது.   

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எதிர்கொள்வதற்கு இயேசுவே நமக்கு எடுத்துக்காட்டு. இறைவனோடு இணைந்து நிற்பவர்களாலேயே அலகையை எதிர்த்து நிற்க முடியும். அலகையை முறியடிக்க ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே இயேசுவின் சோதனை அனுபவம் நமக்குச் சொல்லித் தரும் வாழ்வுப் பாடம். ‘உன்னைத் தகுந்தவன் என நீ நிரூபிக்காவிட்டால் உலகம் உன்னை ஒதுக்கிவிடும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், சோதனை என்பது நம் உண்மைத் தன்மையை உலகுக்கு உரைக்க உதவும் உரைகல் போன்றதே. 

நீங்கள் சாதிக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும். சோதிக்கப்படும் போது மட்டுமே உங்கள் ஆன்மீகத்தின் தரமும் தகுதியும் வெளியுலகுக்கு வெளிச்சமாகிறது. இயேசுவைப் போல நாமும் இறைவனுடன் இணைந்திருந்து சோதனைகளை சாதனைகளாக்குவோம்!