தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!
லூக்கா 5:27-32
உயரே நிற்பவர்களோடு உறவு பாராட்டவே இந்த ஊர் விரும்புகிறது. சமுதாயத்தின் மேல்தட்டு வர்க்கத்தோடு மட்டுமே தாங்கள் நட்போடும், உறவோடும் இருப்பதாக உலகிற்கு காட்ட நாம் விரும்புகிறோம். அதையே நம்முடைய பெருமையாகவும் நாம் கருதுகிறோம். ‘எனக்கு மாவட்ட ஆட்சியாளரைத் தெரியும்’, ‘எனக்கு காவல் ஆணையரோடு நெருங்கிய பழக்கம்’, ‘பேராயர் எனக்கு பெரியப்பா முறை’, ‘பங்கு சாமியார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கம்’ - இப்படி எல்லாம் சொல்லிக் கொள்வதில்தான் நமக்கு எவ்வளவு பெருமை மேலிடுகிறது!
ஆனால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களோடு நம்முடைய நட்பையோ, உறவையோ உருவாக்கிட நம்மில் பலருக்கு விருப்பமில்லை. அப்படியே இருந்தாலும் அதை உலகிற்கு காட்ட நமக்குத்தான் எவ்வளவு பயம்! கலெக்டரோடு காபி குடிக்க ஆசை வருவது போல, கழிவறையை சுத்தம் செய்பவரோடு காபி குடிக்க நமக்கு ஏன் ஆசை வருவதில்லை? சாதனையாளர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மகிழ்ச்சி. ஆனால் சாமானியர்களோடு கை குலுக்குவதில் நமக்கு மனவருத்தம்.
இயேசு இந்த எண்ணப்போக்கை உடைத்தெறிகிறார். ‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.’ என்று இயேசு சொல்வதிலிருந்து அவருடைய உறவு மற்றும் பணி வாழ்வின் நிலைப்பாடு நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் முன் வரிசையில் முகமலர்ச்சியோடு இருப்பவர்களை அல்ல கடைசி வரிசையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்போரையே இயேசு தேடிச் சென்றார்.
சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் வரி தண்டுபவரை தம்மைப் பின்பற்றும்படி அழைத்தது, யூதர்கள் வெறுத்து ஒதுக்கிய பாவிகளோடு பாசமாய்ப் பழகியது, அவர்களோடு பந்தியில் அமர்ந்தது என்று இயேசு உறவிலும் பணியிலும் புதுப் புரட்சியை ஏற்படுத்திவிட்டார். இயேசு தமது பணி வாழ்வில் கடைநிலையில் கிடந்த சாமானியர்களோடும், வறியவர்களோடும், நசுக்கப்பட்டவர்களோடும், ஓரங்கட்டப்பட்டவர்களோடும் உறவு பாராட்டினார்.
‘கடவுள் புனிதருக்கானவர்’ என்று சொல்லி பாவிகளிடமிருந்து கடவுளைப் பிரித்து பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருந்தினர் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். ஆனால் இயேசுவோ ‘கடவுள் பாவிகளுக்கானவர்’ என்று காட்டிட பரிசேயர் போட்டுவைத்திருந்த பாதுகாப்பு வளையத்தை உடைத்தெறிந்து கடவுளை கடைநிலையில் கண்ணீரோடு நிற்கும் கடைசிப் பாவிக்கும் கொண்டு சேர்த்தார்.
இயேசுவைப் போல நாமும் தோற்றுப்போனவர்களோடு தோழமை பாராட்டுவோம்!