Friday, 19 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு அருகே செல்வோம்!

மத்தேயு 9:14-15


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக விரும்பி அனுசரிக்கும் ஆன்மீக பக்தி முயற்சிகளுள் மிகவும் முக்கியமானது நோன்பு. இந்த நோன்பின் மீதான இயேசுவின் பார்வையை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் காலத்தில் யூதர்கள் தங்கள் சமயம் சார்ந்த நோன்புச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக கடும் துறவு வாழ்வு வாழ்ந்த திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மற்றும் பரிசேயர்கள் நோன்புக்கான சட்டங்களை மிகத் துல்லியமாய் கடைப்பிடித்து வந்தனர். 

ஆனால் இயேசுவின் சீடர்கள் நோன்பைக் கடைபிடிக்கத் தவறினார்கள் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதைக் குறித்து இயேசு பேசும்போது, ‘மணமகன் தங்களோடு இருக்கும்வரை, மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?’ என்கிற கேள்வியைக் கேட்கிறார். தன்னை மணமகனாகவும் தன்னுடைய சீடர்களை மணவிருந்தினர்களாகவும் எடுத்துச்சொல்லும் இயேசு தன்னோடு இருப்பவர்கள் நோன்பிருக்க அவசியமில்லை என எடுத்துக்காட்டுகிறார். 

இயேசுவின் பிரசன்னம் இன்பம் தரும் பிரசன்னம். எனவே அவரோடு நாம் இருந்தால் அங்கே துக்கத்திற்கோ, நோன்புக்கோ வேளையில்லை. அதே சமயத்தில் அவரைப் பிரிந்து நிற்கும் வேளைகளில் நமக்கு நோன்பு தேவை என்பதையும் இந்நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. 

நோன்பு என்பது கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவும் நமக்கான பாதை. நோன்பு என்பது கடவுளோடு இணைந்திருக்கும்படி நம்மை இறுக்கிக் கட்டும் கயிறு. ஆம், நோன்பு ஆண்டவரின் அருகே நம்மை அழைத்துப்போகிறது. இறைவனுக்கு இன்னும் நெருக்கமாய் வாழும்படி நமக்கு வழிசெய்கிறது. 

விண்ணிலிருந்து மண்ணிற்கு நம்மைத் தேடி வந்தார் இயேசு. ஆனால் நம்மைத்தேடி நம்மருகே வந்த இயேசுவுக்கு அருகே நாம் செல்லத் தயங்குவதை என்னவென்று சொல்வது? கடவுளை அணுகிச் செல்லத் தடைகளாக இருப்பவற்றை தவிர்ப்பதே இத்தவக்காலத்தில் நமக்கான நோன்பாக அமையட்டும். உணவை மட்டுமல்ல ஆன்மீக வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் தேவையற்ற கசடுகளையும், கழிவுகளையும் ஒதுக்கிவிடவும், தவிர்த்துவிடவும், தள்ளிவைக்கவும் நோன்பு நமக்கு கற்றுத் தரட்டும். 

இவ்வாறு நோன்பெனும் கயிற்றால் கடவுளோடு நம்மை இறுக்கி கட்டுவோம். நோன்பெனும் பாதையில் ஆனந்தமாய் ஆண்டவருக்கே அருகே செல்வோம்.